MEMBER LOGIN

User Name :
Password :
Forgot Password        New Registration

Join as Premium User

உங்கள் கேள்விக்கான பதில்கள் உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Q: அய்யா, நான் வாங்கியுள்ள மனை தெருவாட்டத்தில் பார்த்தோமெனில் சரியாக இருக்கிறது. ஆனால், மனைக்குள் பார்த்தோமெனில் கிராஸாக உள்ளது. 20க்கு 40 உடைய என் மனையில் நேராக வீடு கட்டினால் நாலாபுறமும் மனை வீணாகும் என்கிறார்கள். எனவே, தெருவுக்கு ஏற்றபடியே நான் வீடு கட்டிவிடலாமா? ஆலோசனை தேவை... -எஸ். வீரப்பன், திருமுல்லைவாயில்


Answer:

தெரு அமைப்பிற்கு ஏற்றவாறே உங்கள் கட்டடத்தை நேராகவே கட்டுங்கள்.  மனை அமைப்பினை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.  

பயன்பாடே மிக முக்கியம்.  யாராவது வாஸ்துவுக்கு சரியாக இல்லை என்றால் ஒரு சிறிதும் கவலைப்படாதீர்கள்.  வாஸ்து என்பதே ஒரு மனநிலை தான்.  வாஸ்து எப்பொழுதும் கெடுதல் செய்யாது என்று நம்புங்கள்.

 



Q: சார்... நீங்கள் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது, காங்கிரீட் காப்பு பூச்சு என்பது கடற்கரை ஓரக் கட்டுமானங்களுக்கு கண்டிப்பாக தேவை எனச் சொல்கிறீர்கள்.. நான் சென்னை எண்ணூர், கத்திவாக்கம் பகுதியில் உள்ள அரசு கட்டுமானங்களை ஆய்வு செய்ய வந்த போது அவை பெரும்பாலும் அரித்து, சிதில மடைந்து இருந்தன... (அவற்றின் வயது 10 முதல் 12 ஆண்டுகள்) அப்படியயனில் அந்தக் கட்டுமானங்கள் கட்டப்படும்போது காங்கிரீட் காப்பு பூச்சு செய்திருந்தார்களா? இல்லையயனில் ஏன் செய்ய வில்லை அந்த மெத்த படித்த பொறியாளர்கள்? ஒருவேளை அவர்கள் செய்திருந்தால் கான்கிரீட் காப்பு பூச்சு வேலை செய்யவில்லையா? விரிவான விளக்கம் தேவை... புவனா, சிவில் பேராசிரியை, சேலம்


Answer:

திருமதி. புவனா அவர்கள் என் பதிலின் முழுப் பொருளையும் புரிந்து கொள்ளாமல் கேள்வி கேட்கப்பட்டிருப்பதில் எனக்கு வருத்தமே.

கேள்வியாளர் ஒரு சிவில் பேராசிரியர் என்பதால் IS :456-2000 Durability Criteria according exposure Conditions  (Table 3 & Table 5) பற்றிக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.  பொதுவாக சுற்றுப்புறச் சூழலுகேற்ற காப்பு நடவடிக்கைகள் கட்டுமானங்களில் எடுக்கப்பட வேண்டும் என்பதே அண்மைக் காலத்து விழிப்புணர்வு; இன்னும் முழுமையாக அரசுப் பொறியாளர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படாதது வேதனையே.  

எனவே கடற்கரை ஓரக் கட்டடங்களில் M 30 தர காங்கிரீட் உப்பு அரிப்பினை எதிர்க்கும் வேதியியல் பூச்சு - எஃகு உறுதியூட்டிகளுக்கு அடித்தல் (Steel guard nano coating - corrosion inhibitor) அல்லது CRS எஃகு உறுதியூட்டிகள் முதலியன இன்றும் கூட (2018 இல்) நடைமுறைக்கு வரவில்லை.  எனவே 10 முதல் 12 ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமானங்களில் அரசுக் கட்டடங்களில் இந்தக் காங்கிரீட் காப்புப் பூச்சு பூசப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.  இந்த நிலையை ஒரு சிவில் பேராசிரியை கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டுமென நான் எதிர்பார்க்கிறேன்.  இத்தகைய சுற்றுப்புறச் சூழலுடைய காங்கிரீட் கட்டடங்களுக்கு காப்புப் பூச்சு அடித்தல் நல்லது என்பது ஒரு பரிந்துரையே. செலவைக் கணக்கிடும் போது பலரும் செய்வதில்லை என்பதே எதார்த்தம். 



Q: வீரப்பன் சார்... நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்.. சென்ற மாதம் வண்டலூர் - மீஞ்சூர் வெளி வட்டச் சாலையில் கட்டி முடிக்கப்படாத பாலத்தில் ஏற்பட்ட கார் விபத்திற்கு அரசு பொறியாளர்கள் தானே காரணம்..? அதே போல் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் முதலாவது மதகின் கதவு உடைந்ததற்கும் அரசு பொறியாளர்களின் அலட்சியம் தானே காரணம்? ஆர்.மதிவாணன், மணப்பாறை, ஆசிரியர்.


Answer:

மணப்பாறை மதிவாணனுக்கு வணக்கமும் வாழ்த்தும்.

1. வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் கட்டி முடிக்கப்படாத பாலத்தின் மீது கார் சென்றதற்குக் காரோட்டி பொறுப்பில்லையா?  முழுமையாகாத பாலத்தில் கார் ஓட்டியதே தவறு.  உரிய அறிவிப்புகள் மாற்றுவழி பதாகைகள் அமைக்கப்படாமலிருந்திருந்தால் அரசு நெடுஞ்சாலை (தேசிய நெடுஞ்சாலை) பொறியாளரும் பொறுப்பேற்க வேண்டும்.

2. திரு. மதிவாணன் கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத் தளத்திற்குச் சென்று நேரே விசாரிக்காமல் செய்தித்தாள் தொலைகாட்சி தகவலின் அடிப்படையில் மேலும் அரசுப் பொறியாளர்கள் மீது உள்ள வெறுப்புணர்வு காரணமாகவும் அரசுப் பொறியாளர்களின் அலட்சியமே காரணம் என்ற முடிவுக்கு வருகிறார்.

அணைக்கட்டுகள், நீர்த்தேக்கங்களின் பொறுப்பிலுள்ள பொறியாளர்களின் சங்கடங்களைச் சொன்னால் இந்தப் பக்கம் போதாது.  10 பணியாளர் இருக்க வேண்டிய இடத்தில் ஒரே ஒரு பணியாளர் இருக்கிறார்.  ஆண்டுப் பராமரிப்பிற்காகத் தரவேண்டிய தொகை ரூ. 50 இலட்சத்தில் வெறும் ரூ. 2.00 லட்சம் மட்டுமே தரப்படுகிறது.  அரசினர்க்கே அணைகளை ஒழுங்காகப் பராமரிக்க வேண்டும் என்ற அக்கறையே இல்லை என்ன செய்வது?

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் முதலாவது மதகின் இருப்புக் கதவு உடைந்ததற்கு  அந்த தகடு சாக்கடை கலந்த தண்ணீரால் அரிக்கப்பட்டு பலவீனம் அடைந்ததே உண்மையான காரணம்; மற்ற மதகுகளின் கதவுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.  குறிப்பாக கெலவரப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி அணைக்கு வரும் தண்ணீர் - பெங்களூரு வழியாக வரும்போது அவர்கள் சாக்கடைத் தண்ணீரை (Sewage Waste Water) இந்நதித் தண்ணீரில் கலந்து விடுகிறார்கள்.  இந்தச் சாக்கடைத் தண்ணீர் தான் மதகின் இருப்புக் கதவுகளை அரித்துவிடுகிறது.  எனவே கிருஷ்ணகிரி அணையில் எல்லா மதகுக் கதவுகளையும் புதிதாகப் போடப் போகிறார்கள்.  அப்படிப் போடும்போது சாக்கடைத் தண்ணீர் அரிக்காத Epoxy Paint ஐ இருப்புக் கதவுகளில் அடிக்கப் போகிறார்கள்.  இப்பொழுது திரு.மதிவாணன் அவர்களுக்கு மகிழ்ச்சி தானே!



Q: நான் பொத்தேரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு சிறு கால்வாய் பாலம் கட்டும் புராஜெக்டில் பணிபுரிய உள்ளேன். இது எனது முதல் புராஜெக்டாகும். ஒரு பொதுப்பணி புராஜெக்டை மேற்கொள்ளும் போது சைட் பொறியாளர் நான் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் என்ன என்பதை கூற முடியுமா? பொறி. சம்பத், திருவண்ணாமலை.


Answer:

பாலம் கட்டும்போது களப் பொறியாளர் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் கீழே

1. பாலத்தின் இருபக்கங்களில் 10 அடிக்கு முன்பே சாலையை அடைத்துவிட வேண்டும்.   இரவு நேரங்களில் Retro Reflective Signals கண்டிப்பாக வைத்திட வேண்டும்.


2. 50 அடிக்கு முன்பாகவே மாற்று வழி சரியாகப் போடப்பட்டு ஊர்திகள் திருப்பிவிடப்பட வேண்டும்.  இது ஒப்பந்த வேலையின் முக்கியமான ஒரு பகுதியாகும்.  மாற்றுப் பாதையை ஏனோ தானோ என்று போட அனுமதிக்கக் கூடாது.


3. பாலம் கட்டும் போது கால்வாயில் தண்ணீர் இருந்தால் இறைத்திட தனி பம்பு மோட்டார் வசதி - மிகக் குறைந்தது டீசல் இஞ்சின் கொண்டாவது தண்ணீர் இறைக்கப்பட வேண்டும்.


4. பாலத்தின் மீது காங்கிரீட் போட வலிமையான உறுதியான தாங்கமைப்புகள் (Centering & Shuttering) அமைக்கப்பட வேண்டும்.


5. இவற்றுடன் பாலத்தின் இரு பக்கங்களிலும் - ஒரு பணியாளர் சிவப்புக் கொடியுடன் - போக்குவரத்தைச் சீர் செய்திட ஏற்பாடு செய்திட வேண்டும்.

 



Q: வாசகர் கேள்வி...... நாங்கள் போருரில் ஒரு நான்கு மாடி பன்னடுக்கு குடியிருப்பில் ஃப்ளாட் ஒன்றை வாங்க உள்ளோம், அதில் உள்ள வசதிகள், மார்பிள், டைல்ஸ், பாத்ரும், ஃபிட்டிங்குகள் எல்லாம் எங்களுக்கு திருப்தியாக உள்ளது, ஆனால், பீம்களின் அளவு மட்டும் தான் இடிக்கிறது, வழக்கமாக பில்லர்கள் குறைந்தபட்சம் ஒரு அடிக்கு ஒரு அடி கனம் இருக்க வேண்டும். அல்லவா? ஆனால், இங்கு பில்லர்கள் 10 அங்குலம் x 18 அங்குலம் அளவுகளில் இருக்கிறது, இது சரியா? -லஷ்மி ப்ரபா, அலுவலக மேலாளார், வளசரவாக்கம்.


Answer:

பொறி.அ.வீரப்பன் பதில்கள்


தங்கள் கேள்வியில் 4 மாடி பன்மாடிக் குடியிருப்பின் கீழ்க்கண்ட அடிப்படைத்தகவல்கள் இல்லை

(1) மண்ணின் வகை,

(2) அடித்தள அமைப்புமுறை

(3) தரைத்தளத்தின் கார்பார்க்கிங் உண்டா, இல்லையா? மூன்றாவது பயன் படுத்தப்பட்ட காங்கிரீட் மற்றும் எஃகு கம்பிகளின்தரம்

(4) உங்கள் தளத்தில் உள்ள விட்டங்களின் அளவுகள் மற்றும் தூண்களுக்கு இடையே உள்ள தூரம் முதலியன தரப்படவில்லை,எனவே,நிறுத்தப்பட்டுள்ள தூண்களின் அளவுமட்டும்  (10”X 18”) கொடுக்கப்பட்டுள்ளது.

 

அதில் பொருத்தப்பட்ட எஃகு கம்பிகளின் அளவும் எண்ணிக்கையும் தரப்படவில்லை, எனவே, அமைக்கப்பட்டுள்ள தூண்கள் போதுமா, போதாதா என்று உடனடியாக உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

 

பொதுவாக பன்மாடிக்குடியிருப்புகளில் Weak beam and strong column (their structural stiffers = [ Ixx = Zxx / Zxx ] (மவுலிவாக்கம் பன்மாடி கட்டிடத்தில் Strong beam & weak cloumn ஆக இருந்ததால் தான் உடைந்து விழுந்தது) என்ற வடிவமைப்பு முறை கடைபிடிக்க வேண்டும். தோராயமாக நான்குமாடி குடியிருப்பில் தரைத்தளத்தில் அல்லது முதல்மாடியில் மையப்பகுதியில் இருக்கும் தூண்களில் 80 டன் முதல் 100 டன் வரை [ 100KN To 1000KN ] பாரம் வரலாம் உங்கள் குடியிருப்பில் உள்ள தூண் 9’’ x 18’’ ( 230mm x 450mm ) மற்றும் 6-20mm + 4-12mm உள்ள கம்பிகள் பொருத்தப்பட்டு இருந்தால், அவை மேலே குறிப்பிட்ட 80 டன் முதல் 100 டன் பாரத்தை பாதுகாப்பாக தாங்கும். 1’0” x 1’0’’ உள்ள தூணைவிடை 9” x 18’’ தூண் அதிக வலிமையுடையது.

 

எதற்கும் உங்கள் கட்டுமானத்தின் உரிமையாளர்/ விற்பனையரிடம் Structural design drawings (கட்டுமான வடிவமைப்பு வரைபடங்கள் ) இவற்றின் பிரதி கேட்டு அமைக்கப்பட்டுள்ள தூண்கள் பாதுகாப்பானவையா என்று ஒரு வடிவமைப்புப் பொறியாளரிடம் கொடுத்து அவை போதுமானவை என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.

 

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234.



உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Builders Line : Prompt Publication Editor, Subramanyam No:6, Aishwarya Nagar, First Floor, (Behind Chennai Health Foundation),
Thirumullaivayal, Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 185000