Q: பில்டர்ஸ் லைன் ஆசிரியர் அவர்கட்கு, பேப்பர் கிரீட், தெர்மா கோல் பிளாக், கான்கிரீட் கான்வாஸ், ஃபிளெக்ஸி கான்கிரீட் எல்லாம் உலகை அசர வைக்கிற புதுக் கண்டுபிடிப்புகள் என்பதை ஒத்துக் கொள்கிறேன்.. ஆனால் நடைமுறைக்க சாத்தியமில்லாத... இந்த தொழிற் நுட்பங்களின் பயன்தான் என்ன? இவை யாவுமே வெற்று தகவல் தாமே...! ஏற்கெனவே இருக்கும் தொழிற் நுட்பங்களை இன்னும் மேம்படுத்துதல் தானே அறிவியல்...? - புவனா, சிவில் பேராசிரியை... சேலம்
ஒரு சிவில் பேராசிரியையாக இருக்கும் தாங்கள் எவ்வாறு இப்படி ஒரு தவறான உண்மையில்லாத முடிவுக்கு வருகிறீர்கள்? புது கண்டுபிடிப்புகள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் ஒரு குறிப்பிட்ட தேவைக்காகக் குறைவாகப் பயன்படுத்தப்பட்டே வருகின்றன என்பதே உண்மை.
அவை வெறும் வெற்றுத் தகவல்கள் அல்ல. நமக்கு Geosynthetics- textile RC Concrete பற்றித் தெரியவில்லை என்றால் அவை உதவாக்கரை என்று ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால் கட்டுமானத்துறையில் அவை ஓராயிரம் பயன்பாடுகளாக (Civil Engg Applications) பயன்படவே செய்கின்றன.
Q: வீரப்பன் அய்யா, தமிழுக்குத் தொண்டாற்றியவர்கள் உண்டு... கட்டடத்துறைக்கு தொண்டாற்றியவர்கள் உண்டு... ஆனால் தமிழுக்கும், கட்டடத்துறைக்கும் ஒரு சேர தொண்டாற்றுபவர் நீங்கள் மட்டும் தான்... முதன் முதலாக பொதுப்பணித்துறையில் பில்லிங் போடும் போது,, அதை தமிழிலேயே எழுதி புரட்சி செய்தவர் நீங்கள் என்பதை என் நண்பர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்... அப்படிப்பட்ட நீங்கள் உலகளாவிய புதுப்புது கட்டடவியல் தொழிற் நுட்பங்களையும், கட்டுமான முறைகளையும் எழுதி கட்டுரைகளாக வெளியிட்டால் என் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்குமே... - பொறி.சிவராஜன், சேலம்
ஊக்கமளிக்கும் தங்களின் கருத்துரை - மதிப்புரைக்குத் தலை வணங்குகிறேன். நீங்கள் விரும்பும் கேட்கும் எதிர்பார்க்கும் என் கட்டுரைகள் பல எங்களின் மாத இதழான கட்டுமானப் பொறியாளரில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. நான் சார்ந்துள்ள பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கப் பரப்புரை வெளியீடுகளாகவும் வந்துள்ளன. kattumaanapporiyalar@gmail.com / transea-pwd@gmail.com எனும் மின்னஞ்சலில் கேட்டுப் படியுங்கள். கருத்துரைகளையும் எழுதுங்கள்.
Q: சென்ற பில்டர்ஸ் லைன் இதழில் ஒரு பொறியாளர் 2000 வீடுகள் கட்டி 1000 வீடுகளை ஏழைகளுக்கும்... 1000 வீடுகளை விற்பனைக்கும் வழங்கினால் ஜீரோ காஸ்ட் செலவில் எல்லோருக்கும் வீடுகள் வழங்கலாம் என்று கூறுகிறார்... ஆனால் நீங்களோ அது சாத்தியமில்லை சதுர அடி.. ரூ.2500 ஆகும் எனக் கூறுகிறீர்கள்.. ஆனால், அரசே சொந்தமாக (டான்செம் மூலம்) சிமெண்டும்,, (எண்ணுரில் மூடிவைத்திருக்கும் தக்கைக் கற்கள் தொழிற்சாலை மூலம்) கட்டுமான கற்களும், புது தொழிற் சாலைகள் மூலம் பிரிகேஸ்ட் பலகங்களும் தயாரித்துப் பயன்படுத்தினால் நிச்சயம் இது சாத்தியமாகும் என நான் நினைக்கிறேன்.. (டான்செம் மற்றும் தக்கை கற்கள் தொழிற்சாலை பற்றி நீங்கள் பேசுவதே இல்லை...) மேலும்... ஊழல் இல்லாத அரசு நிர்வாக நடைமுறை சாத்தியமில்லை என உங்களைப் போன்ற மூத்தப் பொறியாளர்கள் ஒத்துக் கொள்வதன் மூலம் நாம் ஊழலுக்கும், லஞ்ச்சத்திற்கும் எதிராக போராடும் மன நிலையை இழந்து விட்டோமென்று எதிர்மறை எண்ணத்தையே தாங்கள் தக்க வைக்க முயல்கிறீர்கள் என எண்ணுகிறேன்... - ஆர். மதிவாணன், மணப்பாறை..
தாங்கள் ஒரு கட்டுமானப் பொறியாளராக இல்லாத காரணத்தால் - சிலவற்றை நீங்கள் நினைத்துக் கொண்டு - அதன் வழி பல தவறான முடிவுகளுக்கு வருகிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்.
1. நண்பர் அவர்களின் திட்டத்தை வரவேற்றே எழுதியுள்ளேன். ஆனால், எதார்த்தமாக இன்றைய விலை விவர நிலையில் தரமான, நீடித்து உறுதியுடன் உழைக்கும் கட்டடம் கட்ட (பிற செலவுகளையும் சேர்த்து) சதுர அடிக்கு ரூ.2500/- ஆகும் என உண்மையைச் சொல்கிறேன். வேறு எந்தக் கட்டுமானப் பொறியாளரோ, புகழ் பெற்ற கட்டுமான நிறுவனமோ தரமான வீடுகளை சதுர அடிக்கு ரூ. 2500/-க்குக் குறைவாகக் கட்டித்தர தயாராக உள்ளனரா? என்று விசாரித்துச் சொல்லுங்கள். இளம் பொறிஞர் சொல்லும் விதிக்கக் கூடிய கற்பனையாக நினைக்கும் நிபந்தனைகளை (Subject to conditions) இன்றைய தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாது. சதுர அடிக்கு ரூ. 1000/- அல்லது ரூ. 1200 என்பது வெறும் பகல் கனவு செயல்படுத்த இயலாதது.
தக்கைக் கற்களைப் பயன்படுத்துவதால் கட்டுமானச் செலவு 5% அளவுக்குத் தான் குறையலாம். அவையும் மிகத் தரமாகத் தயாரிக்கப்பட வேண்டும். இத்தகைய தக்கைக் கற்களின் கட்டுமானப் பயன்பாட்டைப் பற்றி செலவை மிகுதியாக்கும். (AAC / CLC) பத்துக்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளேன். எங்களின் கட்டுமானப் பொறியாளரில் வெளியிடப்பட்டுள்ளன; படியுங்கள்.
கடைசியாக நீங்கள் தெரிவித்துள்ள கருத்து நீங்களே வலிந்து மேற்கொண்ட கருத்து; எனக்கு ஒரு சிறிதும் பொருந்தாதது. ஊழல் கையூட்டுக்கு எதிராக ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடங்கி (2000 முதல்) இன்றளவும் பொறுப்பாளராக இருப்பவன் நான். இலஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர் சொற்றொடரைச் சொந்தமாக்கி சொத்தாகப் பேணுபவன். எனினும் உண்மைச் சமுதாய நிலை அரசின் போக்கு மக்களின் நடைமுறை (ஆர்.கே நகர் தேர்தல் ஒன்றே போதுமே) இவற்றை ஒதுக்கி விட முடியாது.
Q: டியர் வீரப்பன் சார்.. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் என்னும் காப்பர் தயாரிக்கும் ஆலையிலிருந்து கசடு பொருளாக வெளியேறும் ஒரு வகை உலோக தாதை (உலோக மணல் அல்லது காப்பர் ஸ்லாக் சிமெண்ட்) ஆற்றுமணலுக்கு பதிலாக பயன்படுத்தி கான்கிரீட் தயாரிக்கலாம் என்றும் இதைதான் பிரபல ஆர்.எம்.சி நிறுவனங்கள் மணலுக்கு பதிலாக பயன்படுத்துகின்றன என்றும் இதன் ஒரு டன் விலை ரூ.150 தான் என்றும் ஒரு நாளிதழில் ஒரு பக்க விளம்பரம் கண்டேன்.. இது சரியா? நம்பகத்தன்மை மிக்கதா? அப்படி பயன்படுத்தலாம் என்றால் கட்டுமானங்களின் எந்தெந்த கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தலாம்? உதாரணத்திற்கு பிரிக் ஒர்க், பூச்சு வேலைக்கெல்லாம் இதை பயன்படுத்தலாமா? விளக்கமாக கூறவும்... - ஆர். சந்தோஷ், காண்ட்ராக்டர், வேலூர்
தங்களின் கேள்வியில் - சில முழுமையான புரிதல் இல்லை. படித்தது அல்லது கேட்டதை வைத்துக் கொண்டு நீங்களே ஒரு முடிவுக்கு வந்துள்ளீர்கள். முதலில் காப்பர் தயாரிக்கும் ஆலையின் கசடு (ஒருவகை உலோகத்தாது) (Copper Slag) என்பது சிமெண்ட், தயாரிக்கப் பயன்படும் ஒரு கூட்டுப் பொருள். இது மணலுக்குப் பதிலானது அன்று. உண்மையில் சிமெண்ட் தயாரிப்பில் சுண்ணாம்பு, ஜிப்சம், களிமண், போன்றவை தான் பயன்படுகின்றன. மணல் சேர்க்கப்படுவதில்லை.
இவ்வாறு உலோகக் கசடு கலந்து தயாரிக்கப்படும் சிமெண்டின் பெயர் Perland Slag Cement (PSC). இத்தகைய கசடுகள் (குறிப்பாக எஃகு இருப்பு கலப்பு உலோகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளிலிருந்து) பிற சிமெண்ட் தாதுப் பொருள்களோடு நன்றாக நுணுங்க அரைக்கப்பட்டு சிலாக் சிமெண்ட் என்ற பெயரில் விற்கப்படுகிறது. இதன் அளவு சிமெண்ட் தாதுப் பொருள்களில் 25% முதல் 70% வரை இருக்கலாம்.
சிமெண்ட்டின் விலையில் தாதுப் பொருள்களின் விலை 5% - 7% வரையே. உற்பத்திச் செலவு; மூட்டைப்படுத்தும் செலவு; போக்குவரத்துச் செலவு, விளம்பரச் செலவு எல்லாம் 95%; எனவே நீங்கள் நினைப்பது போல சிலாக் சிமெண்ட்டின் விலை ஒரு சிறிதே (ஒரு மூட்டைக்கு ரூ.10/- வரை குறைந்து இருக்கும்) இந்த சிலாக் சிமெண்ட்டை எல்லாவிதக் கட்டுமான வேலைகளுக்கும் பயன்படுத்தலாம். கடற்கரையோர வேலைகளுக்குச் சிறந்தது. இருப்பினும் சிலாக் சிமெண்ட் நீராற்றக் காலம் 10 நாட்கள் ஆகும் (7 நாட்களுக்குப் பதிலாக)
Q: அய்யா, தாங்கள் தவறாக எண்ண வேண்டாம். நீங்கள் ஒரு கட்டுரையில் 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழங்கட்டடங்களை முற்றிலும் இடித்து விட்டு புதியதாக சட்டக் கோப்புடைய உறுதிபெறு காங்கிரீட் கட்டடம் கட்ட வேண்டும் என்கிறீர்கள். அப்படியயனில் ஒரு கட்டடத்தின் ஆயுள் என்பது 50 ஆண்டுகள் தானா? (நான் பணிபுரியும் கல்லூரி கட்டடத்தின் வயது 65 ஆண்டுகள். பாரம் தாங்கும் சுவர் கட்டடம் தான் இது. நன்றாக உறுதியாகத் தான் உள்ளது) எனது இன்னொரு அய்யம் என்னவெனில், பழங்கட்டடங்களை இடித்துத் தள்ளுங்கள் எனச் சொல்லும் நீங்கள் தான் தீப்பற்றி எரிந்த கட்டடங்களை இடிக்காமல் சீரமைக்கலாம் என வேறு கட்டுரையில் சொல்கிறீர்கள். எது சரி...? -ராம் மனோகர், சிவில் பேராசிரியர், திருச்சி.
அன்பிற்குரிய ராம் மனோகர், சிவில் பேராசிரியர் அவர்களே; தவறாக எண்ணவில்லை.
1. பழமையான - பராமரிப்பே இல்லாத பாழடைந்த (சேதமடைந்த) 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கட்டடங்களை இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டலாம் என்பது ஒரு கருத்துரை. ஏனென்றால் பழுதடைந்த பழைய கட்டடங்களை அதுவும் பாரந்தாங்கும் அமைப்புடையவைகளை வலிமைப்படுத்தி சீரமைப்பது கடினமான, காசு செலவழிக்கும் செயல். எனவே அப்படி பதில் சொல்லப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டடங்களில் தேவையற்ற ரிஸ்க் எடுப்பது கூடாது.
நான் பொதுப் பணித்துறையில் சேப்பாக்கம் வளாகத்தில் 25 ஆண்டுகள் பணியாற்றிய கட்டடம் 150 ஆண்டுகள் பழைமையானது. அவ்வாறே சேப்பாக்கம் வளாகத்திலுள்ள மாநிலக் கல்லூரி, சென்னைப் பல்கலைக் கழகம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றக் கட்டடம் எல்லாமே பாரந்தாங்கும் பழமையான கட்டடங்கள்; 100 ஆண்டுகளுக்கு மேலானவை. ஆனால் ஆண்டுதோறும் சிறந்த பராமரிப்புப் பெற்றவை; பெறுபவை. எனவே இன்றும் பயன்பாட்டில் சிறப்பாக உள்ளன. இடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
சேப்பாக்கத்திலுள்ள பழமையான கல்சா மகால் தீயினால் சேதமடைந்த போது இடிக்கக் கூடாது; சீரமைத்துப் பயன்படுத்தலாம் என்று கருத்துரைத்தவன்.. அவ்வாறே சீரமைக்கப்பட்டு இன்று தென் மண்டல பசுமைத் தீர்ப்பாய் அலுவலகம் இயங்குகிறது.
2. தீயினால் பாதிக்கப்பட்டவை அனைத்தும் பழமையானவை அல்ல. (சென்னை சில்க்ஸ், தி.நகர்); ஒழுங்காகப் பராமரிக்கப்பட்டவை. எனவே அவை தீயினால் சேதமடையும் போது - சிறப்பு கட்டுமான நுட்பங்களின் மூலம் வலிமை படுத்தி சீரமைத்துப் பயன்படுத்தலாம் என்று உறுதியான கருத்துரைக்கிறேன். எனவே இரண்டும் வேறனவை. தங்களின் பொறியியல் திறன்படி அவற்றின் தன்மைக்கேற்ப முடிவு எடுக்க வேண்டும்.
Builders Line : Prompt Publication
Editor, Subramanyam
No:6, Aishwarya Nagar,
First Floor,
(Behind Chennai Health Foundation),
Thirumullaivayal,
Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
185000
|