Q: சுவருக்கான வால்பட்டி என்றாலே வெண்மை நிறமுடையதாகத் தான் இருக்குமா? நாம் வேண்டும் வண்ணங்களில் வால்பட்டி கிடைத்தால் சிறப்பாக இருக்குமல்லவா? அதற்கு ஏதேனும் புதிய தொழில்நுட்பம் உள்ளதா? -ஆர். மஞ்சுளா, ஆசிரியை, கோவை.
வால்பட்டி வெண்மை நிறத்தில் மட்டுமல்ல வேண்டிய நிறங்களைப் பெற நிற மூட்டிகள் (Colour pigments - colour strainers) கலந்தால் எளிதாகப் பெறலாம். ரெடிமேட் வண்ண வண்ண கலர்பட்டிகள் வெளிச் சந்தையில் கிடைக்கின்றன.
Q: கட்டிடவியல் புதிய தொழிற்நுட்பங்களில் தங்களை வெகுவாக கவர்ந்தது எது? ஏன்? -பொறி. கண்ணன், திண்டிவனம்
நிறைய தொழில் நுட்பங்களைப் பட்டியலிடலாம்
1. Precast Concrete Construction
2. Large Space (Column Free) PT Slab Construction
3. Prefabricated steel structures
4. Temporary tensile structures concrete canvas
5. Geosyntetic structures
இவை எல்லாம் கட்டடம் கட்டும் காலத்தை மிகவும் குறைப்பன. தேவைப்படும் வேலையாட்களும் குறைவு; இவற்றால் நாம் வேண்டிய பயன்கள் கிடைக்கின்றன.
Q: சார் எனக்குக் கட்டிடப் பொறியியல் மற்று நதி நீர் போக்கு பற்றிய ஒரு சந்தேகம். சில ஆண்டுகளுக்கு முன் துறை முகம் டூ மதுரவாயல் வரையிலான பறக்கும் பாலம் திட்டமிடப்பட்டு அந்த வழித்தடத்தில் பல பிரம்மாண்டமான தூண்கள் நிறுவப்பட்டன. அவற்றில் 20மூ தூண்கள் கூவம் ஆற்றின் நடுவிலும், ஓரத்திலும் நிறுவப்பட்டன. இதற்கிடையில் கூவம் ஆற்றில் பில்லர்கள் பதித்தால் சென்னையில் வெள்ள அபாயம் ஏற்படும் என ஆளும்கட்சி அழுத்தம் கொடுக்க அந்த திட்டம் கைவிடப்பட்டது. (இப்போது அந்தப் பணி நடக்கிறதா இல்லையா? என்றே தெரியவில்லை. இப்போது என் கேள்வி என்னவென்றால், பில்லர்கள் பிரச்சனை என்றால், திட்டம் கைவிடப்படும் போது, உடனே அந்த பில்லர்களை அகற்றி இருக்க வேண்டும். அதை செய்யவில்லை. பில்லர்கள் பிரச்சனை இல்லை என்றால், பில்லர்கள் மேலே பாலம் அமைக்க வேண்டும். அதையும் செய்யவில்லை? அப்படியெனில் பில்லர்களால் நதி நீர் போக்கு தடைப்படும் என்ற கூற்று உண்மையா? இல்லையா? இரண்டாவது சந்தேகம்.அப்படி கூவத்தில் பில்லர்கள் அமைத்தால் நீரோட்டம் பாதிக்கும் என்பது உண்மையெனில், அப்படி ஒரு வடிவமைப்பை எப்படி பொறியாளர்கள் திட்டமிட்டார்கள்? யார் தவறு இது? எதில் தவறு? - வேல்முருகன், ஓட்டுநர், மதுரவாயல்.
துறைமுகத்திலிருந்து மதுரவாயில் வரையான விரைவு மேல் வழி (Express Highway). இந்தப் பணி பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் தொடங்கி நடத்தப்படும் என மத்திய அமைச்சர் திரு பொன். இராதா கிருஷ்ணன் தெரிவிக்கிறார்.
கூவம் ஆற்றினுள்ளும் கரையோரமும் பெரிய பெரிய தூண்களை நிறுவும் போது நன்றாகத் திட்டமிட்டு கூவம் ஆற்று நீர் ஓட்டம் பாதிக்கப்படாத வகையில்தான் தமிழ்நாட்டரசுப் பொறியாளர்களால் சான்றளிக்கப் பட்டது. ஆனால், இடையில் பதவியேற்ற அதிமுக அரசின் முதலமைச்சர் எதிர்பார்த்த ‘கப்பம்’ தரப்படாமையால் சொத்தை காரணம் (நீரோட்டம் தடைப்படும்) சொல்லி நிறுத்திவிட்டார்கள்.
சென்னை பறக்கும் இரயில் மேம்பாலமும் கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாயினுள்ளே தூண்கள் நிறுத்தித் தான் கட்டப்பட்டது. இதில் தவறு முழுக்க முழுக்க அன்றைய முதலைமைச்சர் ஜெயலலிதா தவறு. அதற்குத் தலையாட்டிப் பொம்மைகளாகச் செயற்பட்ட அரசுப் பொறியாளர்களின் தவறு.
பொதுப்பணச்செலவு மற்றும் மக்களின் நாட்டின் நலன் இவர்களுக்கு ஒரு பொருட்டாக இல்லை என்பதை இந்த துறைமுகம் மதுரவாயில் Express way அப்பட்டமாகத் தெரிவிக்கிறது.
Q: ஜி+2 வில்லா டைப் வீடுகள் 4 கட்ட இருக்கிறேன். மண் பரிசோதனையின் போது 1 மீ ஆழத்தில் 50% மணல் இருப்பதைக் கண்டறிந்தோம். இதற்கான பொதுவான அடித்தள ஆலோசனை மற்றும் பரிந்துரை ஏதாவது சொல்ல முடியுமா? -பொறி. காளிதாஸ், காஞ்சிபுரம்.
1. 2 மீட்டர் ஆழம் வரை தோண்டி 450மிமீ ஆழத்திற்கு மூன்று அடுக்குகளாக (150மிமீ உயரத்திற்கு) கருங்கல் உடைதூள் : செஞ்சரளை மண் 1:3 அளவில் கலந்து கொஞ்சமாகத் தண்ணீர் கலந்து கொட்டி ஒவ்வொரு முறையும் நன்றாகக் கெட்டிப்படுத்தவும்.
இதன்மீது வடிவமைப்புப் பொறியாளர் தயாரித்துக் கொடுத்த தனிப்பரவல் அடித்தளத்தை (Solated Footings) அமைத்துக் கட்டவும்.
2. சுவர்களுக்கு 150மிமீ / 200மிமீ கனம் கொண்ட முன்வார்த்த கெட்டிக் காங்கிரீட் கட்டுகளைப் (Precast solid concrete mocks in cum 1:4) பயன்படுத்தவும்.
Q: கான்கிரீட் கான்வாஸ் கொண்டு வளைவான சுவர்கள், கூரைகள், சன்ஷேடுகள் அமைக்கலாம் என கூறுகிறான் என் மகன். உண்மையில் அவன் சொல்வது போல கான்கிரீட்டை பாய் போல சுருட்டமுடியுமா? இது எப்படி சாத்தியம்? கான்கிரீட் பலகங்கள் (Precast Glass) என்பது சரி. ஆனால் கான்கிரீட் கேன்வாஸ் என்பது எப்படி உருவாக்க முடியும்? அது எப்படி தயாரிக்கப்படுகிறது? அதன் உபயோகம் என்ன என்பதை விவரிக்க முடியுமா? - எஸ். நந்தினி, மேலாளர், சைதாப்பேட்டை.
தங்களின் கேள்வி மிகச் சிறந்த தொழில்நுட்பம் உடையது. உங்கள் மகன் சொல்வது போல காங்கிரீட்டைப் பாய் போல எளிதாகச் சுருட்டி Concrete Canvas கூரைகள் / கூண்டு வீடுகள் எல்லாம் அமைக்கலாம்; பல நாடுகளிலும் இப்படிப்பட்ட வளைவான சுவர்கள், கூரைகள், சன்ஷேடுகள், காங்கிரீட் கால்வாய் மேலுறைகள் என எண்ணற்ற கட்டுமானங்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த காங்கிரீட் கேன்வாஸின் அடியில் ஒரு நீர் தடுக்கும் பிவிசி அட்டை, அதன் மேல் 3D Geo synthetic matrix அதன் மீது உலர் காங்கிரீட் கலவை மற்றும் அதன் மீது தண்ணீரை உறிஞ்சும் மேலுறை கலந்த கூட்டுப் பொருளின் மீது தண்ணீரை வேண்டிய அளவு ஊற்றி வேண்டிய வளைவில் அழுத்தி காங்கிரீட் கேன்வாஸைத் தயாரிக்கின்றனர். இதனுடைய தயாரிப்பு முறை, வகைகள் மற்றும் தாங்கும் தன்மைகள் அடங்கிய ஆங்கில கட்டுரைகள் இணைய தளத்திலும் கிடைக்கிறது. படித்துப்புரிந்து கொள்ளுங்கள். இதனைப் பற்றி அறிந்துள்ள உங்களின் மகனையும் பாரட்டுங்கள் -
Builders Line : Prompt Publication
Editor, Subramanyam
No:6, Aishwarya Nagar,
First Floor,
(Behind Chennai Health Foundation),
Thirumullaivayal,
Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
185000
|