MEMBER LOGIN

User Name :
Password :
Forgot Password        New Registration

Join as Premium User

உங்கள் கேள்விக்கான பதில்கள் உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Q: கான்கிரீட்டில் சில இழைகளைப் பயன்படுத்தி கான்கிரீட்டை வலிமை ஆக்கலாம் என படித்தேன். அதில் ஸ்டீல் இழைகள்., பாலி புரொப்பலீன் இழைகள் என இரு குவாலிட்டி இருப்பதாக அறிய நேர்ந்தது. இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? எந்த பயன்பாட்டிற்கு எந்த இழைகளை பயன்படுத்த வேண்டும். - பொறி. மனோகர். திருஅல்லிக்கேணி.


Answer:

காங்கிரீட்டை - நீட்சி விசையினைத் தாங்கும் தன்மையினைக் கூட்டிட, எஃகு இழைகள் (Dramix  போன்ற) மற்றும் செயற்கை நெகிழி இழைகள் (Recron  3S போன்ற) பயன்படுத்தப்படுகின்றன.  எஃகு இழைகள் செலவு கூடியவை.  செயற்கை நெகிழி இழைகள் செலவு குறைந்தவை.  


தேவைக்கேற்ப இரண்டில் ஒன்றைப் பயன் படுத்தலாம்.  பொதுவாக தொழிற்சாலை தளங்கள் அமைத்திட இந்த இழைகள் பயன்படும்.

 



Q: அய்யா.., எனக்கு ஒரு சந்தேகம்.. நீங்கள் பல காலம் தமிழ் நாடு பொதுப்பணி துறையில் பணியாற்றியவர்.. அதிலும் அணைகள், நீர் வள மேலாண்மையில் கவனம் செலுத்தியவர்.. உங்கள் பல கட்டுரைகள் அதைத்தான் தெரிவிக்கின்றன ,அதே போல் கட்டடங்கள் உருவாக்கத்திலும் நீங்கள் பணிபுரிந்திருக்கிறீர்கள்... அப்படியெனில் உங்கள் தனிப்பட்ட ஆளுமை எந்தத் துறையில் அதிகம் மேலோங்கி நிற்கும்?. கட்டடங்களா? அணைகளா? -பொறி. விஜயராகவன், சேலம்.


Answer:

நீர்வள மேலாண்மையை விட கட்டடங்களில் மிகச் சிறந்த தனிப்பட்ட ஆளுமை எனக்கு உண்டு.  துறையில் தொடக்கத்தில் 20 ஆண்டுகள் கட்டடத் துறையில் பெரும் பயிற்சி (அதுவும் கட்டுமான வடிவமைப்பில்) பெற்றிருக்கிறேன்.  அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற இந்தப் பதினாறு ஆண்டுகளில் (2002 முதல் 2018 வரை) மிகப் பெரும் கட்டுமானங்களை வடிவமைத்துச் செயற்படுத்தியிருக்கிறேன்.  

பன்மாடி குடியிருப்புகள், உயர்நிலைப் பள்ளி - கல்லூரிக் கட்டடங்கள், பெரிய பெரிய கிருத்துவ ஆலயங்கள், நீண்ட தொழிற்சாலைகள் எனப் பல்வகைக் கட்டடங்களில் வல்லமை பெற்றுள்ளேன்.  கட்டடங்கள் துறையில் என் ஆளுமை மேலோங்கியிருந்தாலும், எனக்கு முகவரி, பெயர் பெற்றுத் தந்தது நீர்வள மேலாண்மையே.



Q: களிமண்ணை , 1000 டிகிரி சூட்டில் அழுத்தி அதை ஜல்லிகற்கள் ஆக்கலாம் என ஒரு கட்டுரையில் படித்தேன். அயல் நாடுகளிலும் அதைக் கடை பிடிக்கிறார்களாம். ‘ லேகா களிமண் உருண்டைகள்’ என அழைக்கப்படும் இவ்வகை களிமண் ஜல்லிகற்கள் கருங்கல் ஜல்லிகளின் உறுதிக்கு ஈடாகுமா? இதை கான்கிரீட்டில் எப்படி பயன்படுத்த முடியும்? இதன் நொறுங்கும் தன்மை எப்படி? விளக்கவும்... - பொறி. ரத்தினம்., தேனி.


Answer:

லேகா களிம்மண் உருண்டைகள் (Light Expanded Clay Aggregates  (LECA) ஒரு புதிய வகை சல்லிகள்; காங்கிரீட் தயாரிக்க வெளிநாடுகளில் பயன்படுத்துகிறார்கள்.  0.1மிமீ முதல் 25மிமீ அளவுடையவை.  இவற்றின் எடை 280கிலோ கிராம் / 1 கன மீட்டருக்கு முதல் 510கிகி / 1 கன மீட்டர் எளிதாக அமுக்கவோ உடைக்கவோ முடியாது.  

தீயினை எளிதாகத் தடுப்பவை (Fire Resistance) குறைந்த எடை உடையவை (காங்கிரீட் / கருங்கல் சல்லி எடையில் அய்ந்தில் ஒரு பங்கு).  இந்த லேகா களிமண் உருண்டைகள், குறையயடை காங்கிரீட் மற்றும் குறையிடை காங்கிரீட் கட்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.  எனினும் இவற்றின் தாங்கு திறன் கருங்கல் சல்லிக்குக் குறைவானவையே என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

 



Q: சார். நான் கட்டிய புதிய வீட்டில் தரை தளத்தில் உள்ள பாத்ரூம் தரையில் உள்ள ட்ரயினேஜ் ஜல்லி தட்டு வழியாக சாக்கடை நாற்றம் உள்ளே வருகிறது. ( 40 அடி தூரத்தில் பின்புறமுள்ள செப்டிக் டாங்க்கில் இந்த குழாய் இணைக்கப்படுள்ளது) பிளம்பிங்க் பணிகளில் நாங்கள் செய்த தவறு என்ன? துர் நாற்றம் வராமலிருக்க என்ன செய்ய வேண்டும்..? - நீலாவதி., பொத்தூர்


Answer:

நீலாவதி அவர்களே! இதற்கு இரண்டு விதக் காரணங்கள் உண்டு.  ஒன்று அழுகுத் தொட்டியின் (Septic Tank) வெளிப்புறப் பகுதி அடைத்துக் கொண்டு இருந்தால், கெட்ட சாக்கடை நாற்றம் குளியல் அறையின் ‘நீர்வெளியேற்றும் தட்டில்’ வெளிவரும்.  அல்லது டிரைனேஜ் லைனில் எங்காவது லீக்/கசிவு இருந்தாலும் இந்தச் சாக்கடை நாற்றம் வெளிவரும்.

இதைச் சரி செய்ய - செப்டிக் டேங்கை பம்ப் செய்து கழிவு நீரை முற்றிலும் வெளியேற்றம் செய்யுங்கள்.  அத்துடன் செப்டிக் டேங்கின் வென்ட் பைப்பு அடைபடாமலிருக்கச் செய்ய வேண்டும்.  வெளியேறும் வெண்ட் பைப் செப்டிக் டேங்கில் பொருத்தாமல் இருந்தால் சாக்கடை நாற்றம் வரவே செய்யும். 

இரண்டாவதாக டிரைனேஜ் லைனில் வெளிக்கசிவு ஏற்படாதவாறு அமைக்கப் பட வேண்டும்.  இந்த இரண்டையும் சரி செய்தால் சாக்கடை நாற்றம் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.



Q: சார்.. சில நாட்களுக்கு முன்னே மயிலாடு துறையில் திருவாரூர் மெயின் ரோடில் 2000 ச.அடி பரப்பிலான 2 மாடி கட்டடம் ஒன்று திடீரன ஒரு புறம் அரை அடி ஆழத்தில் மண்ணில் புதைந்தது.. மேலும்., கட்டடத்தின் காம்ப்வுண்ட் சுவர் ஒரு பக்கம் இடிந்து விழுந்தது.. இப்படி கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகள் கழித்து ஒரு கட்டடம் மண்ணுக்குள் புதைவதற்கு காரணம் என்ன? ஒரு வேளை கட்டடத்தின் அடிப்பாகத்தில் மரப்பட்டறை ஒன்று இயங்கி வந்தது தான் காரணமா? அடித்தளத்தில் இதுபோன்ற கனமான தளவாடங்கள், இயந்திரங்கள் பொருத்துவதற்கு ஏதேனும் அளவுகோல் உள்ளதா? ஏனெனில் திருவாரூரில் நான் எனக்கு சொந்தமான குடியிருப்பில் தரை தளத்தில் ., லேத் பட்டறை ஒன்றை ஒன்றை வாடகைக்கு விட்டுள்ளேன். - கமல கண்ணன்., மின் ஊழியர் திருவாரூர்


Answer:

அன்புள்ள கமலக் கண்ணன் அவர்களே! முதலில் கவலையை விடுங்கள்.  திருவாரூரில் உங்கள் சொந்தக் குடியிருப்பிலுள்ள - தரைத்தள லேத்பட்டறை தரைத்தளத்தில் (தரைக்குக் கீழே இல்லாமல்) இருப்பதால் அச்சப்படத் தேவையில்லை.  இந்த லேத்பட்டறையிலும் மிஷின்கள் சுவரை யொட்டியில்லாமல் சிறிது இடைவெளி விட்டு அமையுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது சில நாட்களுக்கு முன்னே மயிலாடுதுறையில் 2 மாடிக் கட்டடம் தீடீரென ஒரு புறமாக அரையடி ஆழத்தில் தளமண்ணில் புதைந்ததைப் பற்றி விவாதிப்போம்.

1. இந்தக் கட்டடத்தின் அடிப்பகுதியில் (தரைக்குக் கீழே) மரப்பட்டறை இயங்கி வந்த  - கட்டடம் கட்டப்பட்டபோது - அதனை ‘போடு மண்’ போட்டு நிரப்பி நீரூற்றிக் கூராடியிருப்பார்கள்.  இம்முறை அந்த மண்ணைக் கெட்டியாக்கச் செய்திருக்காது (not properly compacted well). எனவே, இம்மண்ணின் மீது அமைக்கப்பட்ட அடித்தளம் காலப்போக்கில் மேல் நோக்கிய பாரத்தால் ஒரு பக்கமாக அமுக்கப்பட்டு, இன்னொரு புறம் கீழிறங்கி மண்ணில் புதைந்தது.  மரப்பட்டறை இருந்த தரைக்குக் கீழுள்ள இடத்தைச் சரியாகக் கெட்டிப்படுத்தி அடித்தளம் அமைக்காததே இச்சிக்கல் ஏற்பட்டதற்கு முக்கியமான காரணம்.


2. மண்ணில் கீழிறங்கிய அடித்தளத்தையும் உரிய முறையில் மறு உருவாக்க முறையில் வலுப்படுத்தி - பாரத்தைக் கெட்டியான (செயற்கையாக உருவாக்கிய) தரையில் செலுத்துமாறு அமைத்து மறு கட்டமைக்கலாம்.  இதற்குரிய மறு உருவாக்கப் பொருட்கள், உரிய கருவிகள் மற்றும் தொழில்நுட்பம் முதலியவை இன்று நம் கையில் உள்ளன .

எனவே, அச்சப்படாமல் இக்கட்டடத்தைச் சரி செய்யலாம்.  இதைப் பற்றிய விளக்கக் கட்டுரை - சூன் 2018 கட்டுமானப் பொறியாளர் இதழில் வெளியாகிறது.  படியுங்கள்.



உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Builders Line : Prompt Publication Editor, Subramanyam No:6, Aishwarya Nagar, First Floor, (Behind Chennai Health Foundation),
Thirumullaivayal, Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 185000