Q: சார். மணலுக்கு பதிலாக அடித்தளத்திற்காக தோண்டப்படும் மண்ணிலிருந்து கான்கிரீட் தயாரிக்கலாம் என ஒரு கட்டிட அறிஞர் சொல்லியிருந்த கருத்தை ஒரு பத்திரிகையில் படித்தேன். மணலின் குணாதிசயம் வேறு. மண்ணின் குணாதிசயம் வேறு அல்லவா? இது எப்படி சாத்தியமாகும்? கான்கிரீட் நிபுணர் என்ற முறையில் இது பற்றி உங்களுடைய கருத்துக்கள் என்ன? -ஆர்க்கிடெக்ட்ஷர்மிளா, கோவை.
ஆற்று மணலுக்குப் பதிலாக அடித்தளம் தோண்டும் போது கிடைக்கும் அடிமனை மண்ணைப் பயன்படுத்திக் காங்கிரீட் தயாரிக்கலாம் என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை நானும் ஒரு முறைக்கு இருமுறை நன்றாகப் படித்தேன். இது ஓர் ஆராய்ச்சி முயற்சியே. இதில் முக்கியமாக அடிமனை மண்ணின் வகை, தரம், வலிமை முதலியான கவனிக்கப்பட வேண்டும் குறிப்பாக களிமண், வண்டல் மண், நொய் மண், களிமண்/வண்டல் கலந்த எந்த மண்ணையும் காங்கிரீட் தயாரிக்கப் பயன்படுத்த முடியாது; கூடாது.
ஏனென்றால் இத்தகைய காங்கிரீட்டின் தாங்கு வலிமை மிகமிகக் குறைவாகவே இருக்கும். இதற்குப் பதிலாக அடிமனை மண் மணல் சார்ந்ததாக குறிப்பாக செஞ்சரளை மண்ணாக (Gritty Gravel) சுக்கான் மண்ணாக இருந்தால் அதைக் கொண்டு காங்கிரீட் தயாரிக்கலாம்; இருப்பினும் இந்தக் காங்கிரீட்டின் வலிமை 75% - 80% வரையே கிடைக்கும்.
பொதுவாக பயன்பாட்டாளர் மனநிலை (உங்களைப் போன்ற கட்டடக் கலைஞர் உட்பட) கிடைக்கும் அடிமனை மண்ணைக் காங்கிரீட் தயாரித்துப் பயன்படுத்திட ஒப்புக்கொள்ளாது என்பதே இன்றைய எதார்த்தம். இத்தகைய சோதனைகளில் இன்னும் மேம்பாடுகள் செய்யப்பட வேண்டும் (Protective Admixtures சேர்க்கப்படல்) என்றே நான் கருதுகிறேன்.
Q: வீரப்பன் சார். எனது நண்பன் டெக்ஸ்டைல் ரீஇன்ஃபோர்ஸ்ட் கான்கிரீட் (டி.ஆர்.சி) தொழிற்நுட்பம் பற்றி என்னிடம் கூறினான். எனக்கு அது பற்றி விரிவாக உங்களிடமிருந்து அறிந்துக்கொள்ள மிகவும் விருப்பமாக இருக்கிறது. கூற முடியுமா? - பொறி. ஜி. பாஸ்கர், பாபநாசம்.
அன்பு நண்பர் பாஸ்கர் அவர்களே. டெக்ஸ்டைல் ரீ-யின்போர்ஸ்ட் காங்கிரீட் பற்றி மிக விளக்கமாக எங்களின் கட்டுமானப் பொறியாளர் இதழில் தொடர் கட்டுரைகள் வெளி வந்து கொண்டிருகிக்கின்றன. உங்களின் மின்னஞ்சல் முகவரி தெரிவித்தால் அவற்றை உங்களுக்கு அனுப்பி வைப்போம்.
Q: சார். தற்போது நவீன காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் ஆண்ட்ராய்டு போனில் பயன்படுத்தக் கூடிய சிவில் பொறியியலுக்கு பயன்படுத்தக்கூடிய செயலிகள் (ஆப்ஸ்-மென்பொருட்கள்) வெளியாகின்றன. ஆனால் அது பற்றியெல்லாம் உங்களைப் போன்ற அனுபவம் வாய்ந்த மூத்த பொறியாளர்கள் அறிமுகப்படுத்துவது இல்லையே ஏன்? அது போன்ற பயனுள்ள கட்டுரைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் ஐயா! - ஆர்.சுந்தர், திருச்சி.
மன்னியுங்கள். என்னிடம் ஆன்றாய்டு ஃபோன் இல்லை. எனவே சிவில் பொறியியல் செயலிகள் (ஆப்ஸ்) பற்றி எனக்குத் தெரியாது.
Q: நான் அரை கிரவுண்ட் மனையில் 1600ச.அடியில் ஜிூ1 வீடு படப்பையில் கட்ட இருக்கிறேன். இந்த வீட்டிற்கு ஆர்.எம்.சி கான்கிரீட் பயன்படுத்தலாமா? ஏன் கேட்கிறேன் என்றால் மிகச் சிறிய அளவிலான கட்டுமானங்களுக்கு ஆர்.எம்.சி கான்கிரீட் உகந்ததா? ஆர்.எம்.சி கான்கிரீட்டின் தரம் நம்பகத்தன்மை மிக்கதா? நிறைய நான் - பிராண்டட் ஆர்.எம்.சி கம்பெனிகள் சந்தையில் உள்ளன. நாங்கள் எந்த பிராண்டிற்கு முக்கியத்துவம் தரவேண்டும்? மேலும் ஆர்.எம்.சி.யின் தரத்தை என்னை போன்ற சாதாரண மக்கள் எப்படி உறுதி செய்துக் கொள்வது என்பதை விரிவாக கூறுங்கள். -ஜி. பிரபாகர், வங்கி அதிகாரி - படப்பை.
வீடுகள் கட்டுவதற்கு எந்தவிதத் தயக்கமுமின்றி முன் தயாரித்த ஆயத்த காங்கிரீட்டைப் (ஆர்.எம்.சி) பயன்படுத்தலாம். எல்லா நிறுவனங்களும் ISI (B 15) சான்றிதழ் பெற்றே தரக்கட்டுப்பாடுகளுக்குட்பட்டே ஆர்.எம்.சி காங்கிரீட்டைத் தயாரிக்கின்றன. எனவே ஒரு குறிப்பிட்ட பிராண்டைப் பரிந்துரை செய்வது தொழில் அறமன்று. ஆர்.எம்.சி யின் தரத்தை உறுதி செய்து கொள்ள ஒவ்வொரு லாரி லோடிலிருந்தும் - மாதிரி காங்கிரீட் எடுத்து சோதனைப் பெட்டிகளில் வார்த்து வைத்து 7 நாட்கள் மற்றும் 28 நாட்கள் அமுக்கு தாங்கு வலிமையினை பொறியியற் கல்லூரிகளில் சோதனை செய்து தெரிந்து கொள்ளலாம்.
Q: சார் சாமன்யனான எனக்க ஒரு சந்தேகம்... சாதாரணமாக ஒரு கட்டத்தின் அஸ்திவாரம் நீர் நிலைகள் மீது கட்டினால் அது உறுதியாக நிற்காமல் மெல்ல உள்ளே போகும்,,, என்கிறார்கள்... மவுலிவாக்க கட்டட விபத்தின் காரணம் கூட அது ஒரு ஏரியில் அமைந்த கட்டடம் என்பது தான் என செய்திகள் வந்தன... அப்படியயனில் ஆறுகளில் பில்லர்கள் அமைத்து பாலங்கள் கட்டுகிறார்களே... அது எப்படி நிற்கிறது? அது என்ன தொழிற் நுட்பம்? - ஜீவா, திருவள்ளூர்
திரு. ஜீவா அவர்களே. நீங்கள் ஒரு சாமானியனாக இருப்பதாலேயே சில தவறான பொறியியல் தொழில் நுட்பக் கருத்துரைகளைத் தெரிவிக்கிறீர்கள். நீர் நிலைகள் மீது சரியான பொருத்தமான அடித்தளம் (Under reamed piles bored insitu compaction piles precast concrete sheet piles போன்றவை) அமைத்துக் கட்டினால், கட்டடம் கண்டிப்பாக மெல்ல உள்ளே போகாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மவுலிவாக்க பன்மாடிக் கட்டட விபத்துக்கு அதன் அடித்தளம் காரணமல்ல. strong Beam - Weak Column - poor quality construction தான் காரணம்.
ஆறுகளின் குறுக்கே தூண்கள் அமைத்துக் கட்டப்படும் பாலங்கள் பெரும்பாலும் RC well foundation வகையைச் சார்ந்தவை bored insitu pile foundation with pile cap கொண்டும் கட்டப்படுகின்றன. எங்கள் கட்டுமான பொறியாளர் இதழ் - ஜூலை 2017 இல் காவிரியின் குறுக்கே நாமக்கல் சோழ சிராமணிப் பகுதியில் கட்டப்பட்டுள்ள கதவணைப் பாலம் பற்றி நான் எழுதியுள்ள கட்டுரையைப் படியுங்கள். அந்த தொழில்நுட்பம் சிறிது புரியும்.
Builders Line : Prompt Publication
Editor, Subramanyam
No:6, Aishwarya Nagar,
First Floor,
(Behind Chennai Health Foundation),
Thirumullaivayal,
Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
185000
|