Q: அன்புள்ள வீரப்பன் சார்.. பொதுவாக எனக்கு ஒரு சந்தேகம்..தமிழக அரசு கட்டடங்கள் மீது. நமது அரசு கட்டடங்கள் எல்லாம்.ஒரு தீப்பெட்டி போல.,அட்டைப் பெட்டிகள் போல ஒரு கனச்செவ்வக கட்டுமானங்களாகவே வெகு சாதாரணமாக வடிவமைக் கப்படுவது ஏன்?.. (சட்டசபபைக் கட்டடம்., கோட்டூர் புர நூலகம் போல ஒரு சில கட்டடங்கள் தவிர) அரசு ஆர்க்கிடெக்டுகளால் ஏன் சர்வதேச தரத்தில் கண்கவர் அழகுடன் அரசு கட்டடங்களை தனியார் கட்டுமானங்கள் போல் வடிமைக்க இயலவில்லை? - சௌம்யா. ஆர்கிடெக்ட்இ சென்னை
அரசுத்துறை சார்ந்த கட்டடக் கலைஞர்கள், தாங்களாகவே ஒருவிதக் கடிவாளத்தை மாட்டிக் கொண்டிருப்பதால் பரந்துபட்ட அணுகுமுறை இருப்பதில்லை. மேலும், கட்டட உள்பகுதிகளைத் தேவையான அளவு முழுவதும் பயன்படுத்திட வேண்டும். அப்போதுதான் கட்டுமானச் செலவு குறையும் என்ற பொறுப்பும் இருப்பதால் அரசுக் கட்டடங்கள் செவ்வகமாக ஃ சதுரமான வடிவமைப்பில் உள்ளன.
தனியார் கட்டடக் கலைஞர்களுக்கு இத்தகைய பொறுப்பும் கட்டுப் பாடுகளும் இருப்பதில்லை. எனினும், அரசுக் கட்டடக் கலைஞர்களும் பல கட்டடங்களை வித்தியாசமாக - எடுத்துக் காட்டாக - அரசினர் பொது மருத்துவமனை, புதிய கலைவாணர் இல்லம், நினைவு மண்டபங்கள், அரசினர் புதிய விருந்தினர் மாளிகை (சேப்பாக்கம்) முதலியவை - செய்துள்ளனர் என்பது தங்களின் கவனத்;திற்குக் கொண்டு வரப்படுகின்றது.
Q: நான் ஒரு கட்டிட பொறியாளர்...நான் Small Building எடுத்து செய்து வருகிறேன். பேரூராட்சி approval பெற்று பத்திர அளவு படி கட்டிடம் கட்டி வருகிறேன்.. இப்போது பக்கத்து இடத்தின் உரிமையாளர் தனது இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டுவதாக பேரூராட்சியில் மனு ஒன்றை கொடுத்துள்ளார் FMB அடிப்படையில்...பத்திரத்தின் அளவு 21.5 ft. x 164 ft., FMB அளவு 18 feet front side ,back side 23 ft. அகலம் x 174 ft . நீளம். இப்போது வீடு Basement Stage ல் வேலை நிறுத்தப்பட்டுள்ளது...இதை எவ்வாறு சரி செய்வது....? - எச். ராமகிருஷ்ணா
தங்கள் கேள்வி முழுமையாகப் புரியவில்லை. (இது போன்ற கேள்விகளில் வரைபடங்களை இணைத்தால் சரியான பதில் தர ஏதுவாக இருக்கும்).
21.5 அடி அகலத்திற்குப் பதிலாக 18 அடியாக அகலத்தைக் குறுக்கி வீடு கட்ட, ஒரு பக்கத்தில் 18 அடியளவில் புதிய அடித்தளம் (Foundation Footings) அமைத்து அதன் பின்னர் கட்டட வேலையைத் தொடரலாம்.
Q: உங்களைப் போன்ற பல மூத்தப் பொறியாளர்கள், ஏன் சில பேராசிரியர்கள் கூட, நமது சிவில் பொறியியல் பாடத்திட்டத்தை குறை கூறுகிறார்கள். ஏட்டு சுரைக்காய் என இகழ்கிறார்கள். ஒரேயடியாக புறக்கணிக்கிறார்கள். ஆனால் அதே பாடத்திட்டத்தைப் படித்து தானே நீங்கள் இப்போது நவீன கால கட்டுமானங்களை உருவாக்குகிறீர்கள்? புதிய கள அறிவோடு உலா வருகிறீர்கள்? இன்னும் சொல்லப்போனால் நீங்கள் படித்த காலத்தை விட இப்போதைய பாடத்திட்டம் மேம்பட்டதாக இருக்கின்றன என்பது உண்மையல்லவா? ஒரு வேளை பாடதிட்டம் கண்டிப்பாக மாற்ற வேண்டுமெனில், உண்மையிலேயே அது பற்றி நீங்கள் அக்கறை கொண்டிருந்தால் அதை அரசு கல்வித்துறையிடம் தான் முறையிட வேண்டும், பொது வெளியில் அல்ல . உங்களைப் போன்றவர்கள் சிவில் பொறியியல் பாடத்திட்டம் பற்றி கூறும் கருத்துக்கள்., நேரடியாக படிக்கிற மாணவர்களைச் சேரும் போது., அது அவர்களுக்கு மனரீதியாக, கடும் பின்னடைவைத் தருமே அல்லாது, எந்த ஒரு மாறுதலையும் தரப்போதில்லை என்பது என் கருத்து - பேரா. ஆதித்யா தன்ராஜ், திருவள்ளூர்.
பேராசிரியர் ஆதித்யா தன்ராஜ் அவர்களே. இன்றைய பொறியியல் கல்வியின் உண்மை நிலை அறிய நான் எழுதிய (கட்டுமானப் பொறியாளர் மாத இதழில் தொடர்ந்து எழுதிய) கட்டுரைகளை முழுமையாகப் படியுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். உங்களின் மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் அனுப்பவும் அணியமாய் உள்ளேன்.
இன்றைய பொறியியல் கல்வியின் தாழ்நிலைக்குக் காரணம் பாடத்திட்டம் மட்டும் காரணமன்று. நாங்கள் (1960-1970) படித்த போது இருந்ததை விட இந்நாளைய பொறியியல் பாடத்திட்டம் மேம்பட்டதாகவே இருப்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், கற்பிக்கும் முறை - சுற்றுச் சூழல் - தேவையான அடிப்படைக் கட்டமைப்புகள் - கல்விக்குத் தரப்படும் முக்கியத்துவம் - சோதனை முறைகள், வெளிப்பயிற்சிகள் எனப் பல காரணங்கள் உள்ளன.
Diluted teaching- Learning என்பது பாடத்திட்டம் மேம்பட்டதாக விருப்பினும் எந்தப் பயனையும் தருவதில்லை. அடிப்படைத் தகவல் அறிவை (Basic Facts About Engineering Subjects) அறியாமல்-கற்காமல் -வேலை பெறும் வாய்ப்பை பெற முடியாது. எல்லா மாணவர்களும் பொறியியல் கல்வியை-புற்றீசல் கல்லூரிகளில் படிப்பதால் பெரிய பயன் ஏற்படப் போவதில்லை. பொறியியல் கல்வியே - Quick Money - Pure Business என்றாகி விட்டமையால் தான் - 565 பொறியியல் கல்லூரிகளில் உதவாக்கரை 500 பொறியியல் கல்லூரிகளை மூடிவிடலாம் என்கிறேன்.
தொழில் நுட்பக் கருத்தரங்குகளை கல்லூரி வகுப்பறைகளாக்காதீர் என்றும் பொறியியல் மாணவர்கள் "கெம்பா" வில் இருக்கட்டும் என்றெல்லாம் வேண்டுகோள் விடுக்கிறேன். பாடத்திட்டத்தை விட பயிற்று விக்கும் முறை - தகுநிலை அழுத்தம் தாழ்வாகயிருக்கிறது என்கிறோம். Fully Equipped Labs, Library, Dedicated Qualified Teaching Staff, Class-Room Atmosphere, Practical Training இவையனைத்தும் இல்லாமல் கட்டடங்களும், பாடத்திட்டமும் பெரிய பயனை அளிக்க முடியாது என்பதில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவன். இவையெல்லாம் ஒருங்குசேர கிடைத்தமையால் தான் 1967 இல் முதல் நிலை மாணவனாக என்னால் உயரமுடிந்தது என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கிறேன்.
ஒரு பொறியியல் கல்லூரி பேராசிரியர் என்ற முறையில் தங்களின் மன ஆதங்கத்தைத் தெரிவித் துள்ளதாகவே தங்களின் கேள்வியைக் கருதுகிறேன்.
Q: பொறியாளர் வீரப்பனவர்களே! ஒரு கட்டுரையில் தாங்கள் கான்கிரீட் கலவை கலக்கும் போது. மேற்பூச்சு உபயோகம் தவிர, மற்ற பயன்பாடுகளுக்கு மணலை ஜலிக்க தேவையில்லை எனக் கூறுகிறீர்கள்..அப்படியயனில் வருகின்ற மணல் எந்த நிலையில் இருந்தாலும் உபயோகப்படுத்தலாம் என பொருள் வருகிறதே? பின் கலப்பட மணல், கடற்கரை மணலைக் கூட பயன்படுத்தலாம் என்னும் உங்கள் கருத்து கலப்படக்காரர்களுக்கு தவறான வழிகாட்டுதலை உருவாக்கி விடாதா? - பொறி. ஆர். கோபாலன்., திருச்சி
பொறிஞர் கோபாலன் அவர்களே. என் பதிலை - விளக்கத்தைத் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதாகக் கருதுகிறேன்.
மணலை - பூச்சுவேலை தவிர பிற கட்டுமான வேலைகளுக்குச் சலிக்கத் தேவையில்லை என்றே எழுதியுள்ளேன். "கலப்பட மணலை" என்று நான் எழுதவில்லை.
மேலும், கலப்பட மணல் எதுவாக இருந்தாலும் சலிப்பதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. சல்லடை கொண்டு மணலை சலிக்கும் போது மணலின் பருமன் அளவை (Size) மட்டுமே கட்டுப் படுத்த முடியுமே தவிர கலப்பட மணலைத் தடுக்க முடியாது. எனவே, மீண்டும் தெளிவுப்படுத்துகிறேன்" கலப்பட மணலைப் பயன்படுத்துவதைக் கண்டிப்பாகத் தவிர்த்திடல் வேண்டும்.
Q: டியர் வீரப்பன் சார், எனக்கு ஒரு சந்தேகம் . காலம் காலமாக நாம் கையால் தான் சுவர் மேற்பரப்பில் கலவை பூச்சு செய்கிறோம். இப்போது அதற்கென இயந்திரம் ஒன்று சந்தையில் வந்திருப்பதாக கூறுகிறார்கள். இயந்திரப் பூச்சு “ கை பூச்சு அளவுக்கு தரமுள்ளதாக இருக்குமா? பின்னாளில் கீறல், விரிசல்கள் ஏற்படுமா? - சந்திரன், காண்ட்ராக்டர்
கட்டுமான வேலையில் சுவர்ப்பூச்சு வேலை முக்கியமானதாகும். நேரம் பிடிக்கும் வேலையும் கூட. இவ்வேலையினை விரைவாகச் செய்திட பூச்சு இயந்திரம் சந்தையில் வந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரம் பூச்சு வேலையினை உரிய அழுத்தத்தோடு கனகச்சிதமாகச் செய்கிறது.
எனவே, இந்த இயந்திர பூச்சு வேலை மிகத் தரத்தோடு இருக்கிறது. பின்னாளில் சுவர்ப் பரப்பில் கீறல், விரிசல்கள் ஏற்படுவதற்கும் இயந்திரப் பூச்சுக்கும் நேரடித் தொடர்பு ஏதுமில்லை.
பூச்சுக் கலவையின் தரவிகிதம், பூசும் போது தரப்படும் மேற்பரப்பு அழுத்தம், நீராற்றல் காலம் இவற்றைப் பொறுத்தது தான் விரிசல்கள் விழும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதை மிகச் சரியாகக் கட்டுப்படுத்தினால் இயந்திரப் பூச்சிலும் பின்னாளில் கீறல், விரிசல்கள் விழுவதைத் தவிர்க்கலாம்.
Builders Line : Prompt Publication
Editor, Subramanyam
No:6, Aishwarya Nagar,
First Floor,
(Behind Chennai Health Foundation),
Thirumullaivayal,
Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
185000
|