Q: கட்டுமானப் பணிகளுக்கு எம்.சாண்டை பயன்படுத்தினால் ஏதோ ஆட் மிக்சர்கள் (வேதியியல் சேர்மானங்கள்) சேர்க்க வேண்டும் எனச் சொல்கிறார்களே இது எந்த அளவிற்கு பயன் தரக்கூடியது? இது கூடுதல் செலவு தானே? ஆற்றுமணலுக்கு இது போல் எந்த கட்டாயமும் இல்லையே? - பொறி. ரகான்.. ஆம்பூர்
எம். சேண்ட் பயன்படுத்தும் போது - மிகு நெகழி இளக்கி (Super Plasticiser ) எனும் வேதியியல் சேர்மானத்தை - காங்கிரீட் என்றால் ஒரு மூட்டை சிமெண்ட்டுக்கு 300 மி.லிட்டரும் - கட்டுக் கலவை ஃ பூச்சுக் கலவைக்கு 150 மி.லிட்டரும் தண்ணீரோடு சேர்;த்திட வேண்டும்.
1. எம்.சேண்ட் கன சதுரவடிவில் இருப்பதால் இதன் கலக்கும் தன்மை குறைவு. மிகு நெகிழி இளக்கி கலக்கும் தன்மையைக் கூட்டுவதால் தயிர்போல காங்கிரீட்டைக் கலக்கலாம்.
2. கலக்கும் தன்மை கூடுவதால் காங்கிரீட் கெட்டிப்படும் தன்மையும் (Compaction) சிறக்கும். இதனால் தேன் கூடற்ற கெட்டிக் காங்கிரீட் கிடைக்கும்.
இதன் செலவு ஒரு மூட்டை சிமெண்ட்டுக்கு ரூ.20 அளவில் கூடுதல் செலவாகும். சிறந்த வலிமையும், உறுதியும் வாய்ந்த காங்கீரிட்டைப் பெற இந்தக் கூடுதல் செலவைப் பார்க்கக் கூடாது.
ஆற்றுமணல் பயன்படுத்திய காங்கிரீட்டுக்கும் மிகு நெகழி இளக்கி வேதியியல் சேர்மானத்தைச் சேர்ப்பது சிறந்தது. நல்ல காங்கிரீட் பெற இந்த வேதியியல் சேர்மானம் கட்டாயம். (இது புதிய தொழில்நுட்பம் நமக்குத் தெரியாமையால் ஆற்று மணலில் சேர்ப்பதில்லை)
Q: அய்யா. நீங்கள் ஒரு கட்டுரையில் வீட்டு சீலிங்கிற்கு சிமெண்ட் பூச்சு வீண் வேலை., வீண் செலவு என்கிறீர்கள்..திருமண மண்டபங்க்கள் , அரங்க்குகளுக்கு சிமெண்ட் பூச்சு பூசுவது இல்லை என்கிறீர்கள். ஆனால்., ஒரு வீட்டின் கட்டுமானத்தின் எல்லா பாகங்களுக்கும் சிமெண்ட் பூச்சுதான் சிறந்த மலிவான பாதுகாப்பு கவசமாகும். சிமெண்ட் மேற்பூச்சு தருகிற பாதுகாப்பை.. ஜிப்சம் பட்டிகள் தராது.. பக்கச் சுவர்களுக்கான உட்புற பூச்சில் சிமெண்டுக்கு பதிலாக ஜிப்சம் பட்டி இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், கான்கிரிட் தளத்திற்கு கீழ் புறம் (அதாவது சீலிங்க் ) கட்டாயம் சிமெண்ட் பூச்சு இருக்க வேண்டும் என்பது தான் என் அனுபவ கருத்து. ஜிப்சம் வெகு சீக்கிரம் அறையின் உள் உஷ்ணத்தால் உறிந்து கீழே விழும்.. பின் கான்கிரிட் மற்றும் கம்பிகளுக்கு எவ்வித காப்பும் இருக்காது.என்பது என் நேரடி அனுபவமாகும்., எம்.சந்தானம். காண்ட்ராக்டர், சேலம
பழக்கத்தின் / புழக்கத்தின் காரணமாகவே இப்படிக் கூறுகிறீர்கள் எனக் கருதுகிறேன். எல்லாக் காங்கிரீட் உறுப்புகளுக்கும் போடும் போது 15 மிமீ / 20 மிமீ / 25 மிமீ / 40 மி.மீ என மேலுறை (கவசம் :Cover) கொடுத்தே தான் காங்கிரீட் வார்க்கப் படுகிறது. இந்த மேலுறை வலிமையானது உறுதியானது. இதற்கு மேலும், எந்தக் கவசமும் தேவையில்லை என்பதே கட்டடத் தொழில் நுட்பம். இதற்கு மேலும் 12 மிமீ கனமுடைய வலிமையற்ற சிமெண்ட் கலவை தேவையற்றது.
ஜிப்சம் பட்டி உதிர்ந்து விழாமல் இருக்க காங்கிரீட் தள மேற்பரப்பில் பிணைப்புத் திரவம் (Bonding Agent) பூசுக.
அறையின் உள் வெப்பத்தால் ஜிப்சம்பட்டி உதிர்ந்து விழாது. காங்கிரீட் மேலுறையிருப்பதால் உறுதியூட்டிக் கம்பிகளுக்கு தேவையான உரிய பாதுகாப்பு கிடைக்கவே செய்கிறது.
Q: அய்யா. சிமெண்ட் உலகில் எப்போதும்., ஓபிசியா? பிபிசியா என்கிற சர்ச்சை இருக்கத்தான் செய்கிறது. அது போலவே. கான்கிரீட் Mix 1:2:4 அதாவது M 15 கான்கிரீட் சிறந்ததா? அல்லது M 20 (1:1.5:3) சிறந்ததா? என்கிற கருத்து மோதல்களும் எங்கள் களத்தில் இருக்கிறது... அது பற்றி விளக்க முடியுமா? - சிவகுரு நாதன்., ஒப்பந்தக்காரர், திருச்சி.
காங்கிரீட்டில் M 15 காங்கிரீட்டை சட்டக் கோப்பு காங்கிரீட் உறுப்புகளுக்குப் பயன் படுத்தக் கூடாது. M 20 காங்கிரீட்டை விட M 25 / M 30 காங்கிரீட் கூடுதல் வலிமையும், உறுதியும் தரமும் கொண்டவை. M 25 / M 30 காங்கிரீட்டைப் பயன்படுத்தும் போது தேவைப்படும் எஃகு உறுதியூட்டிகளின் தேவை குறைந்து சேமிப்பு கிடைக்கும்.
M 20 காங்கிரீட் + எஃகு உறுதியூட்டிகளின் செலவை விட M 25 / M 30 காங்கிரீட் + எஃகு உறுதியூட்டிகளின் செலவு குறைந்தது. சென்னை போன்ற கடற்கரை நகரங்களில் M 25 / M 30 காங்கிரீட்டையே (as per exposure condition) பயன்படுத்திட வேண்டுமென IS : 456 - 2000 வலியுறுத்துகிறது.
Q: சார். நான் கட்டுமானத்துறைக்கு புதியவன்.. பொதுவாகவே ஜி பிளஸ் 1 அல்லது 2 கட்டுமானங்களுக்கு கூட., கான்கிரிட் ஆர்.சி.சி கட்டுமானங்கள் எழுப்பி விட்டு., பின் நிரப்புச் சுவர் எழுப்புகிறார்.. என் ஒப்பந்தக்காரர்... இது தேவைதானா? இது நிறைய செலவு பிடிக்கும் முறையல்லவா? சுவர் தாங்கும் கட்டுமானங்கள் தானே ஜி பிளஸ் 1 அல்லது 2 ஏற்றது?. விளக்கவும்.. - ஆர்.விஜய்., ஆவடி
G +1, G+ 2 கட்டுமானங்களைப் பாரந் தாங்கும் நான்கு சுவர்களமைப்பில் தாராளமாகச் செய்யலாம் (என்னுடைய G +2 வீடு அப்படித்தான் கட்டப்பட்டுள்ளது.)
ஆனால், அறைகளை மாற்றியமைக்கவோ, மேலும் உயரே தளங்களைக் கூட்டவோ இயலாது. இன்றைய காலகட்டத்தில் இதற்குப் பதிலாகச் சட்டக் கோப்பமைப்பு கொண்ட கட்டங்களே வலிமையும் உறுதியும் பெற்றவை.
Q: ஓபிசி மற்றும் பிபிசி சிமெண்டுக்கு அடிப்படையில் பெரிய வேறுபாடு என்னவென்று என் நண்பரைக் கேட்டேன். அவர் 'எரி சாம்பல் கலந்தால்., அது பிபிசி' என்றும்' இல்லையென்றால் அது ஓபிசி' என்றும் கூறினார். இது உண்மயா? அப்படியெனில் எரிசாம்பல் கலக்காத ஓபிசி தான் தரமானதா? ஓபிசி யில் எரிசாம்பல் பதில் என்ன கலக்கிறார்கள்? - வே.ராகவன், கட்டட தொழிலாளி...
உங்களுக்குச் சிமெண்ட்டை எந்தெந்த மூலப் பொருட்களைக் கொண்டு எப்படித் தயாரிக்கிறார்கள் என்பது முழுவதுமாகத் தெரியாமையால் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள்.
எல்லா வகை சிமெண்ட்டும் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருட்கள் சுண்ணாம்புக் கல், சர்க்கரைக் கழிவு, மணல், மணற்கல், களிமண், அலுமினிய கழிவு, பாக்ஸ்சைட், இரும்புக் கனிமம், லேடரைட் முதலியன.
ஒபிசியில் மேற்கண்ட மூலப்பொருட்கள் ஒரு குறிப்பிட்ட அளவுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
பிபிசியில் இத்துடன் எரிசாம்பலையும் (Fly ash) மூலப்பொருளாக (25% முதல் 35% வரை) கலந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
ஓபிசி மற்றும் பிபிசி சிமெண்ட்களில் அதிகவலிமை, உறுதி தருபவை பிபிசி சிமெண்ட்டே, ஓபிசி அல்ல. ஓபிசி பயன்படுத்தும் போது சுருக்க விரிசல் கள் மிகுதியாக விழு கின்றன. அத்துடன் அதிகமான Co2 வெளியிடப்படுகிறது. பிபிசியில் இவை பெரிதும் குறைக்கப் படுகின்றன. எனவே, பிபிசி சிமெண்ட்டையே பயன்படுத்து வோம்.
Builders Line : Prompt Publication
Editor, Subramanyam
No:6, Aishwarya Nagar,
First Floor,
(Behind Chennai Health Foundation),
Thirumullaivayal,
Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
185000
|