Q: பொறியாளர் அவர்களே! நாங்கள் ஆவடியில் 1000 ச.அடியில் ஒரு வீட்டை இந்த தை மாதம் கட்டி முடித்திருக்கிறேன். 15 லட்ச ரூபாயில் நான் போட்ட பட்ஜெட் கிரகப்பிரவேச செலவெல்லாம் சேர்த்து 21 லகரத்தை தாண்டி விட்ட படியால் வீட்டின் பின்புற மற்றும் பக்கவாட்டுச் சுவர்களுக்கு சிமெண்ட் கலவை பூசாமல் விட்டு விட்டேன். மேற்கூரை தளம் கூட பூச வில்லை. என் கேள்வி என்னவென்றால், இது போல பூச்சு வேலை செய்யாமல் செங்கற்கள் சுவரை எவ்வளவு மாத காலம், விட்டு வைக்கலாம்? (என்னால் 4 ஆண்டுகளுக்கு தலை நிமிர முடியாது என்பது தான் உண்மை) - திருநாவுக்கரசன், சிறு தொழில் வியாபாரி, ஆவடி
அன்புள்ள நண்பர் திருநாவுக்கரசர் அவர்களே, உங்களுக்காக நான் அனுதாபப்படுகிறேன். ரூ.15 இலட்சம் பட்ஜெட் போட்டு, செலவு ரூ.21 இலட்சமாக மாறி இருப்பது நீங்கள் தொழிலாளர் ஒப்பந்த முறை (Labour Contract) மூலமாக உங்களுடைய வீட்டை கட்டியிருக்கிறீர்கள் என்பது நன்றாகத் தெரிகிறது.
செங்கல் சுவரை பூச்சு வேலை செய்யாமல் விடுவது ஒன்றும் தவறன்று. வட மாநிலங்களில் பெரும்பாலான கட்டடங்களில் வெளிப்புற பூச்சு பூசாமலேயே தான் விடப்படுகின்றன. எனவே வெளிப்புறச் சுவர்களுக்கு சந்து பதித்தல் மாத்திரம் செய்வது நல்லது. அதைப்போல மேற்புற மொட்டை மாடித்தளத்திற்கு சிமென்ட் காரை கொண்டு ஒரு பூச்சு பூசுவது நல்லது. 10 ஆண்டுகளுக்குப் பயப்படாமல் இருக்கலாம்.
Q: நாங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீடு கட்டினோம், அப்போது எங்களிடம் பணம் குறைவாக இருந்ததால் அதற்கு ஏற்ப சிக்கனமான சிறிய அளவிலான வீட்டை கட்டினோம். அப்போது, அனைத்து அறைக்கும் 10’ x 10’ என்ற பக்கம் ஆறு அறைகள் கொண்ட வீட்டை, 10mm கம்பி 6 போட்டு, 9’ x 9’ காலம் போட்டு கட்டி விட்டோம். இப்போது, நாங்கள் வசிக்கும் இடம், வாடகைக்கு டிமான்டாக இருப்பதால்,அதன் மேல் இரண்டு மாடி கட்டலாம் என்று என்னுகின்றோம். ஆனால் வருபவர்கள் எல்லாம், இதன் அடித்தளம், இரண்டு மாடி கட்டடம் அளவு பற்றாது .ஆகையால் கட்டாதீர்கள் என்று கூறி விடுகின்றனர். இதன் மேல் கட்டிடம் கட்ட ஏதாவது வழி இருக்குகிறதா?. இல்லை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டுமா.? -பிராபகர், வேலூர், மின் பொறியாளர்.
உங்கள் வீட்டுக் கட்டடத்திலும் முழு விவரங்கள். தேவையான தகவல்கள் தரப்படவில்லை. அடித்தளத்தின் அளவுகள், அடிமனை மண்ணின் வகை முதலியன தரப்படவில்லை. எங்கெங்கே தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன (Column Layout) என்ற தகவலும் தரப்படவில்லை. அவை தெரிந்தால் தான் உங்கள் கேள்விக்குச் சரியான பதிலைச் சொல்ல முடியும். வேலுரில் உள்ள ஒரு கட்டுமானப் பொறியாளரைப் பார்த்து கருத்துரை பெறுங்கள்.
Q: எங்கள் வீடு கட்டப்பட்டு சுமார் 35 ஆண்டுகள் ஆகிவிட்டது, அவர் வானம் தோண்டி கருங்கல் கட்டிடம் கட்டி அதன்மேலே செங்கல் சுவர் அமைத்து கட்டியுள்ளார். இன்று வரை அந்த கட்டுமானத்தில் எந்த விதமான வெடிப்போ, மற்ற குறைபாடோ ஏதும் வரவில்லை. நாங்கள் இப்போது அதன்மேல் வீடு கட்டலாம் என்று எண்ணியுள்ளோம், வீடு கட்டலாமா, மேலும் எத்தனை மாடி கட்டலாம்? அதை எப்படித் கட்டலாம்? என்பது குறித்து அறிய விரும்புகின்றோம். - சிவகாமி நாதன், செய்யாறு
உங்கள் கட்டடம் ஒரு பாரந்தாங்கும் அமைப்புடையது. அடித்தளத்தின் அகலம், கீழுள்ள அடி மண்ணின் வகை முதலியன தெரிந்தால் தான் மேலே ஒரு மாடி கட்டலாமா அல்லது இரண்டு மாடி கட்ட முடியுமா என்பது பற்றிச் சொல்ல முடியும். உங்கள் வீட்டின்/ அடித்தளத்தின் முழு விவரங்களைத் தெரிவியுங்கள்.
வீட்டு வரைபடம் முதல்தளம் / இரண்டாம் தள வரைபடங்கள் தேவை.
Q: சார். நான் தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன்.சென்ற இதழில் பால்கனியில் ஒரு சிறிய தண்ணீர் தொட்டியை (சுமார் 200 லிட்டர் கொள்ளளவு) வைக்கக் கூடாது என விளக்கம் சொல்கிறீர்கள். ஆனால் மும்பையில் வீட்டுக்கு வீடு ஒவ்வொரு பால்கனியிலும் நீச்சல்குளம் வைத்துக் கட்டியிருக்கிறார்களே? அது எப்படி சாத்தியம்? (படத்தை இத்துடன் அனுப்பியுள்ளேன்) - சௌம்யா, பிஇ.சிவில் மூன்றாம் ஆண்டு.
பொறியாளர் செளம்யா அவர்கள். பி இ சிவில் படித்துக் கொண்டே இப்படிப்பட்ட கேள்வியை எப்படி கேட்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை.என்னுடைய முந்தைய பதிலில் பால்கனிப் பலகம், தண்ணீர்த் தொட்டியைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. எனவே கூடாது என்கிறேன். நீங்கள் அனுப்பியுள்ள வரைபடத்தில் பால்கனி பலகம், தாங்கும் அமைப்புகள் எல்லாம் முறையாக -சரியாக வடிவமைக்கப்பட்டு நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. எனவே அந்தப் பயன்பாட்டிற்கென வடிவமைத்தால் நீச்சல் குளத்தையும் கட்டலாம்.
Q: நான் ஒரு இளம் பொறியாளன். என் தந்தை கட்டியுள்ள எனது வீடானது 10’ X 10’அளவுள்ள ஐந்து அறைகள் கொண்டதாக உள்ளது. இப்போது அந்த அறையில் பயன்பாட்டிற்கு இடையூறாகவும், கஷ்டமாகவும் இருப்பதால் அதை பெரிய அறைகளாக (10’ X 20’) மாற்றி அமைக்க விரும்புகின்றோம், அதை எப்படி அமைப்பது? என்பதை கொஞ்சம் விளக்கினால் நன்று. - இளங்கோ, திருச்சி
தங்களை ஓர் இளம் பொறியாளன் என்கிறீர்கள். ஆனால், வீட்டு வரைப்படம் அனுப்பாமல் எப்படி அறைகளை மாற்றி அமைப்பது? என்று கேட்டால் எப்படி பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் மாதிரி வரைபடத்தில் இதைப்பற்றி எழுதுகிறேன்.
1) உங்கள் கட்டடம், சட்டக் கோப்பு அமைப்பாக இருந்தால் இடையிலுள்ள சுவரை இடித்து விட்டால் 10’ x 20’ அறை பெரியதாகக் கிடைக்கும்.
2) பாரந்தாங்கும் சுவர் அமைப்பு (Load Bearing Structure ) ஆக இருந்தால் அப்படிக் செய்யக் கூடாது. பதிலாக படத்தில் காட்டியுள்ளது போல இடிக்கப் படும் சுவரின் இருபுறமும் பலகை அடித்து எஃகு முட்டுக்கள் கொடுத்து சுவரின் மீது வரும் பாரத்தை மாற்றி விட வேண்டும். அதற்கு பிறகு வரும் பாரம் அளவு, வளையுந்தம் இவற்றிற்கேற்ப ஒரு எஃகு விட்டத்தை ( I Section or RHS) தேர்ந்தெடுத்து சுவரின் மீது சொருக வேண்டும். அந்தக் தாங்கும் இடங்களில் RC Bed Block வைத்திட வேண்டும். திருச்சியுள்ள நல்ல கட்டுமானப் பொறியாளரை அணுகவும்.
Builders Line : Prompt Publication
Editor, Subramanyam
No:6, Aishwarya Nagar,
First Floor,
(Behind Chennai Health Foundation),
Thirumullaivayal,
Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
185000
|