MEMBER LOGIN

User Name :
Password :
Forgot Password        New Registration

Join as Premium User

உங்கள் கேள்விக்கான பதில்கள் உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Q: உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். சர்தார் வல்லபாய் படேலின் அதி உயர் கான்கிரீட் சிலையை நீங்கள் இந்திய கட்டுமானப் பொறியியலின் சின்னமாகப் பார்க்கிறீர்களா? அல்லது வளர்ச்சி நோக்கற்ற அரசியலின் ஆடம்பரப் பொருளாகப் பார்க்கிறீர்களா? - பொறி. ஆடலரசு, வேலூர்


Answer:

சர்தார் வல்லபாய் படேலின் மிகு உயர் சிலைக் கட்டுமானத்தை கட்டுமான பொறியியலின் வளர்ச்சி சின்னமாகவே கருதுகிறேன்.

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையின் வடிவமைப்பில் என்னுடைய பங்கும் உண்டு.

 



Q: அய்யா வீரப்பன் அவர்களே? உங்கள் கைக்குள்ளே கட்டுமானத்தொழில் என்கிற ஒரு நூலை வாங்கிப் படித்தேன். அது எனக்கு பயனுள்ள பொறியியல் நூலாக இருக்கிறது. ஆனால் என் மகன் ஆங்கிலம் வழி படித்த பொறியாளன் என்பதால், அவனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே உங்கள் ஆங்கில பொறியியல் கட்டுரைகளின் தொகுப்பையும் விரைவில் எதிர்பார்க்கலாமா? அல்லது இதே நூலை ஆங்கிலத்திலும் வெளியிடும் திட்டம் இருக்கிறதா? - பொறி. முத்து பிச்சை, ஆவடி


Answer:

கைக்குள்ளே கட்டுமானத் தொழில் என்ற என்னுடைய நூல் பயனாக உள்ளது என்று பாராட்டுரை வழங்கியமைக்கு நன்றி.

இந்த நூலின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு நூல் வெளியிடும் திட்டம் ஏதுமில்லை. தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டில் வாழும் உங்களின் உங்கள் மகனும் இந்த நூலைப் படித்து புரிந்து கொள்ளலாம். 

 



Q: கட்டுமானப் பணிகளுக்கு எம்.சாண்டை பயன்படுத்தினால் ஏதோ ஆட் மிக்சர்கள் (வேதியியல் சேர்மானங்கள்) சேர்க்க வேண்டும் எனச் சொல்கிறார்களே இது எந்த அளவிற்கு பயன் தரக்கூடியது? இது கூடுதல் செலவு தானே? ஆற்றுமணலுக்கு இது போல் எந்த கட்டாயமும் இல்லையே? - பொறி. ரகான்.. ஆம்பூர்


Answer:

எம். சேண்ட் பயன்படுத்தும் போது - மிகு நெகழி இளக்கி (Super Plasticiser ) எனும் வேதியியல் சேர்மானத்தை - காங்கிரீட் என்றால் ஒரு மூட்டை சிமெண்ட்டுக்கு 300 மி.லிட்டரும் - கட்டுக் கலவை ஃ பூச்சுக் கலவைக்கு 150 மி.லிட்டரும் தண்ணீரோடு சேர்;த்திட வேண்டும்.

1. எம்.சேண்ட் கன சதுரவடிவில் இருப்பதால் இதன் கலக்கும் தன்மை குறைவு. மிகு நெகிழி இளக்கி கலக்கும் தன்மையைக் கூட்டுவதால் தயிர்போல காங்கிரீட்டைக் கலக்கலாம்.

2. கலக்கும் தன்மை கூடுவதால் காங்கிரீட் கெட்டிப்படும் தன்மையும் (Compaction) சிறக்கும். இதனால் தேன் கூடற்ற கெட்டிக் காங்கிரீட் கிடைக்கும்.

இதன் செலவு ஒரு மூட்டை சிமெண்ட்டுக்கு ரூ.20 அளவில் கூடுதல் செலவாகும். சிறந்த வலிமையும், உறுதியும் வாய்ந்த காங்கீரிட்டைப் பெற இந்தக் கூடுதல் செலவைப் பார்க்கக் கூடாது.

ஆற்றுமணல் பயன்படுத்திய காங்கிரீட்டுக்கும் மிகு நெகழி இளக்கி வேதியியல் சேர்மானத்தைச் சேர்ப்பது சிறந்தது. நல்ல காங்கிரீட் பெற இந்த வேதியியல் சேர்மானம் கட்டாயம். (இது புதிய தொழில்நுட்பம் நமக்குத் தெரியாமையால் ஆற்று மணலில் சேர்ப்பதில்லை) 



Q: அய்யா. நீங்கள் ஒரு கட்டுரையில் வீட்டு சீலிங்கிற்கு சிமெண்ட் பூச்சு வீண் வேலை., வீண் செலவு என்கிறீர்கள்..திருமண மண்டபங்க்கள் , அரங்க்குகளுக்கு சிமெண்ட் பூச்சு பூசுவது இல்லை என்கிறீர்கள். ஆனால்., ஒரு வீட்டின் கட்டுமானத்தின் எல்லா பாகங்களுக்கும் சிமெண்ட் பூச்சுதான் சிறந்த மலிவான பாதுகாப்பு கவசமாகும். சிமெண்ட் மேற்பூச்சு தருகிற பாதுகாப்பை.. ஜிப்சம் பட்டிகள் தராது.. பக்கச் சுவர்களுக்கான உட்புற பூச்சில் சிமெண்டுக்கு பதிலாக ஜிப்சம் பட்டி இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், கான்கிரிட் தளத்திற்கு கீழ் புறம் (அதாவது சீலிங்க் ) கட்டாயம் சிமெண்ட் பூச்சு இருக்க வேண்டும் என்பது தான் என் அனுபவ கருத்து. ஜிப்சம் வெகு சீக்கிரம் அறையின் உள் உஷ்ணத்தால் உறிந்து கீழே விழும்.. பின் கான்கிரிட் மற்றும் கம்பிகளுக்கு எவ்வித காப்பும் இருக்காது.என்பது என் நேரடி அனுபவமாகும்., எம்.சந்தானம். காண்ட்ராக்டர், சேலம


Answer:

பழக்கத்தின் / புழக்கத்தின் காரணமாகவே இப்படிக் கூறுகிறீர்கள் எனக் கருதுகிறேன். எல்லாக் காங்கிரீட் உறுப்புகளுக்கும் போடும் போது 15 மிமீ / 20 மிமீ / 25 மிமீ  / 40 மி.மீ என மேலுறை (கவசம் :Cover) கொடுத்தே தான் காங்கிரீட் வார்க்கப் படுகிறது. இந்த மேலுறை வலிமையானது உறுதியானது. இதற்கு மேலும், எந்தக் கவசமும் தேவையில்லை என்பதே கட்டடத் தொழில் நுட்பம். இதற்கு மேலும் 12 மிமீ கனமுடைய வலிமையற்ற சிமெண்ட் கலவை தேவையற்றது. 

ஜிப்சம் பட்டி உதிர்ந்து விழாமல் இருக்க காங்கிரீட் தள மேற்பரப்பில் பிணைப்புத் திரவம் (Bonding Agent) பூசுக. 

அறையின் உள் வெப்பத்தால் ஜிப்சம்பட்டி உதிர்ந்து விழாது. காங்கிரீட் மேலுறையிருப்பதால் உறுதியூட்டிக் கம்பிகளுக்கு தேவையான உரிய பாதுகாப்பு கிடைக்கவே செய்கிறது.



Q: அய்யா. சிமெண்ட் உலகில் எப்போதும்., ஓபிசியா? பிபிசியா என்கிற சர்ச்சை இருக்கத்தான் செய்கிறது. அது போலவே. கான்கிரீட் Mix 1:2:4 அதாவது M 15 கான்கிரீட் சிறந்ததா? அல்லது M 20 (1:1.5:3) சிறந்ததா? என்கிற கருத்து மோதல்களும் எங்கள் களத்தில் இருக்கிறது... அது பற்றி விளக்க முடியுமா? - சிவகுரு நாதன்., ஒப்பந்தக்காரர், திருச்சி.


Answer:

காங்கிரீட்டில் M 15 காங்கிரீட்டை சட்டக் கோப்பு காங்கிரீட் உறுப்புகளுக்குப் பயன் படுத்தக் கூடாது. M 20 காங்கிரீட்டை விட M 25 / M 30 காங்கிரீட் கூடுதல் வலிமையும், உறுதியும் தரமும் கொண்டவை. M 25 / M 30 காங்கிரீட்டைப் பயன்படுத்தும் போது தேவைப்படும் எஃகு உறுதியூட்டிகளின் தேவை குறைந்து சேமிப்பு கிடைக்கும். 

M 20 காங்கிரீட் +  எஃகு உறுதியூட்டிகளின் செலவை விட  M 25 / M 30  காங்கிரீட் +  எஃகு உறுதியூட்டிகளின் செலவு   குறைந்தது. சென்னை போன்ற கடற்கரை நகரங்களில்  M 25 / M 30 காங்கிரீட்டையே (as per exposure condition) பயன்படுத்திட வேண்டுமென IS : 456 - 2000 வலியுறுத்துகிறது.



உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Builders Line : Prompt Publication Editor, Subramanyam No:6, Aishwarya Nagar, First Floor, (Behind Chennai Health Foundation),
Thirumullaivayal, Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 185000