Q: வீடுகளுக்கு யூபிவிசி ஜன்னல்கள் போடலாம் என்கிறார்கள். ஆனால், எனக்கோ மர ஜன்னல்கள் மீது தான் பிரியம். மேலும், ரீ சேல் வேல்யூ, யூபிவிசி ஜன்னல்களுக்கு இல்லை என்பது என் கருத்து. உங்கள் சிபாரிசு என்ன? - சங்கமேஸ்வர அய்யங்கார், திருவான்மியூர், புரோகிதம்
சாதாரண வீடுகளுக்கு UPVC சன்னல்கள் போடுவது செலவை மிகுதியாக்கும். எனவே குடியிருப்பு வீடுகளுக்கு மரச் சன்னல்கள் போட்டால் போதுமானது. பெரிய அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் இவற்றிற்கு UPVC போடலாம்.
Q: கான்கிரீட் கலவையில் எம் 10 முதல் எம் 25 வரை பல கான்கிரீட்டுகள் உள்ளன என்கிறார்கள். கலவை விகிதப்படி இப்படி வேறுபடுகிறதா? அல்லது சிமென்ட் தரத்தின் அடிப் படையில் வேறுபடுகிறதா? நான் கட்டும் ஜி+ 1 கட்டுமானத்திற்கு எந்த வகை கலவையை பயன்படுத்த வேண்டும்? எந்தெந்த இடங்களுக்கு, பணிகளுக்கு எந்த கலவை தயார் செய்ய வேண்டும்? - பொற்கைபாண்டியன், லேத் பட்டறை உரிமையாளர், மதுரை
கான்கிரீட் கலவைகளில் தரம் M10 லிருந்து M80 வரை பல்வேறு வகையான கான்கிரிட் கலவைகள் இருக்கின்றன. இவையயல்லாம் கான்கிரீட் உருவாக்கும் சிமெண்ட், கருங்கல் சல்லிகள், மணல் மற்றும் தண்ணீர் கலவை விகிதப்படி மாறுபடுகிறது. நீங்கள் கட்டும் G+1 கட்டுமானத்திற்கு மிகக் குறைந்தது M20 கான்கிரீட் தரத்தைப் பயன்படுத்த வேண்டும். கடற்கரை ஓரங்களிலிருந்தால் கான்கிரீட் தரம் M30 முதல் M40 வரை பயன்படுத்த வேண்டும். உங்கள் ஊர் உட்புறத்தில் இருப்பதால் கான்கிரீட் தரம் M20 கலவை போதுமானது.
Q: நாங்கள் கட்டும் வீட்டிற்கு படிகட்டுகளுக்கு சிமென்ட் காரையிலான கைப்பிடிச் சுவர் வைக்க விரும்பு கிறோம். அது வீட்டின் வெளியிலிருந்து மொட்டை மாடிக்குச் செல்லும் படிக்கட்டு வழியாகும். ஆனால், நமது கண்ட்ராக்டர் கிரில் கம்பிகளை வைக்க சொல்கிறார். எதை நான் தேர்வு செய்வது? ஏன்? - ஆறுமுகச்சாமி. ஹோட்டல் ஊழியர், ராஜபாளையம்,
நீங்கள் கட்டும் வீட்டுப் படிக்கட்டுகளுக்கு சிமெண்ட் காரையினாலான கைப்பிடிச்சுவர் வைக்கக் கூடாது. இந்த கைப்பிடிச் சுவரில் வலிமையும் இல்லை; உறுதியும் இல்லை. காலப்போக்கில் விரிசல்கள் விழுந்து உடைந்து போக வாய்ப்புண்டு. எனவே உங்களின் ஒப்பந்தகாரர் சொல்வதைப் போல மெல்லெஃகு கிரில் கம்பிகளை வைத்து கட்டுங்கள். வலிமையுடனும் உறுதியுடனும் நீண்ட காலத்திற்கு உழைக்கும்.
Q: அய்யா! என் வீடு 5 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஆர்.சி.சி கட்டமைப்பு தான். 800 ச. அடி வீடு அது. G+ 1 கட்டுமானம் அது. சுற்றிலும் 2 மீட்டரும் பின் பகுதி மட்டும் அரை மீ இடைவெளி விட்டு கட்டினோம். அப்போது பின்மனை காலி மனையாக இருந்தது. பின் பக்கம் பில்லர் அமைக்கும் போது ஒரு மீ நீளத்தில் கம்பி நீட்டிக்கப்பட்டு அப்படியே விடப்பட்டது. இப்போது வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் கம்பியை பின் மனையின் சொந்தக்காரர் வெட்டி எடுக்க சொல்கிறார். (அவர்கள் வீடு கட்ட ஆயத்தமாக உள்ளனர்) இதை நாங்களே ராட் கட்டர் வைத்து வெட்டி விடலாமா? அல்லது கம்பியை வர்ணம் தீட்டி, மடக்கி வைத்து காபந்து செய்ய வேண்டுமா? இது போல் ஏன் கம்பிகளை நீட்டி விடுகிறார்கள். எல்லா கட்டுமானங்களிலும் இது போல் தான் செய்வார்களா? - திரு. தினகரன், ஓய்வு பெற்ற தபால் ஊழியர், மணவாளன் நகர் , திருவள்ளூர்
சட்டக்கோப்பு கட்டடங்களில் தூண்களிலும் விட்டங்களிலும் Development Length வேண்டும் என்பதற்காக எஃகு உறுதியூட்டிகளை 1 மீட்டர் நீளத்திற்கு / உயரத்திற்கு நீட்டி விடுவார்கள். இது ஒரு பழைய கால தொழில்நுட்ப முறை. நீங்கள் தூண்களிலிருந்து நீட்டிக் கொண்டுள்ள உறுதியூட்டிகளை உங்கள் பகுதியில் வளைத்து அதன் மீது துரு எதிர்ப்பு வேதியியல் சேர்மானத்தை பூசி விடலாம் அல்லது 1/2 அடி உயரத்திற்கு கம்பியை விட்டு மீதி கம்பிகளை வெட்டி விடலாம்.
நீங்கள் மேலே கட்டடம் கட்டும்போது மேலிருந்து வரும் புதிய கம்பிகளை 1/2 அடி உயரத்திற்குள்ள பழைய கம்பிகளோடு பற்றவைப்பு (Fillet Welding) மூலம் ஒட்டிவிடலாம். இது புதிய முறை. செலவும் அதிகமாகாது. கம்பிகளும் துருப்பிடித்து இற்றுப் போகாது. நீங்கள் இதில் ஏதாவது ஒரு முறையை முயன்று பார்க்கலாம்.
Q: முன்பெல்லாம் காங்கிரீட் கட்டுமான உறுப்புகளுக்கு (பலகம், விட்டம், தூண், அடித்தளம் போன்றவைகட்கு) 1:2:4 அல்லது 1:1.5:3 விகித காங்கிரீட்டையே பயன்படுத்திக் கட்டினோம். ஆனால், சில வடிவமைப்புப் பொறியாளர்கள் குறிப்பாக சென்னையில் கட்டப்படும் கட்டடங்களுக்கு ஆர்எம்சி M25 Grade / M30 Grade காங்கிரீட்டைப் பயன்படுத்தச் சொல்லி வடிவமைத்து வற்புறுத்துகிறார்கள். இது ஏன் இப்படி ? 1:2:4/1:1.5:3 விகித காங்கிரீட்டுக்குப் பதிலாக M25/ M30 தரக்காங்கிரீட்டைப் பயன்படுத்துவதால் கட்டுமானச் செலவு கூடத்தானே செய்யும். இதை எப்படிச் சரிக்கட்டுவது?
பதில்: கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக (2000 ஆண்டிற்கு முன்பு ) மட்டுமானத்துறியில் கொள்ளளவு முறையில் 1:2:4/1:1.5:3 விகிதக் காங்கிரீட்டையே வலிமை தாங்குதிறனுக்காக மட்டுமே பயன்படுத்தி வந்தோம்.
அப்போது அந்தக் கட்டுமானம் எந்தப் பகுதியில் எத்தகைய சூழலில் (கடற்கரையோரமா / தொழிலகக் கட்டடங்களா / அனல் மின்சார / அனுமின்சார கட்டமைப்பா) என்றெல்லாம் கருதாமல் கட்டி வந்தோம். அனுபவத்தில் கடற்கரையோரக் கட்டடங்கள் / அனல் மின் நிலையங்கள் குறைந்த காலத்திலேயே (60/100 ஆண்டுகளுக்கு பதிலாக 5/10 ஆண்டுகளிலேயே) பழுதடைந்தன. குறிப்பாக காங்கிரீட் உறுப்புகளின் மேலுறை விரிவடைந்து விரிசல்களும் உள்ளிருக்கும் உறுதியூட்டிக் கம்பிகள் குறிப்பாக CTD எனப்படும் குளிர்முறுக்குக் கம்பிகள் துருபிடித்து வலிமை இழந்தன. மேலும் காங்கிரீட் உறுப்புகளில் பாரத்தைச் சுமத்தும்போது ஏற்படும் வளைவிறக்கம் (Deflection) மற்றும் விரிசல்களின் அளவு பற்றி முன்பெல்லாம் விரிவாகக் கணக்கிட்டு அமைப்பதில்லை.
கட்டடங்கள் பாதுகாப்புடன் வலிமையுடன் (Strength & Safety) மட்டும் இருந்தால் போதாது. அவை அமைந்திருக்கும் இடச் சூழலுக்கேற்ப - தாக்கப்படும் கடற்காற்று/ வேதிப்பொருள்கள் கலந்த வாயுக்கள், இன்றியமையாதது இவற்றிற்கேற்ப - வலிமையோடு கூட நீடித்துழைக்கும் உறுதியையும் (Durability) கணக்கில் எடுத்துக் கொண்டு கட்டடங்கள் வடிவமைக்கப்படவேண்டும், சரியாகக் கட்டப்பட வேண்டும் என்பதைல் கட்டுமான ஆராய்ச்சியாளர்கள் / வல்லுநர்கள் வலியுறுத்தினார்கள்.
அதன் அடிப்படையில் சுற்றுச்சுழலைக் (Exposure Condition) கணக்கில் கொண்டு - Mild, Moderate, Severe, Very Severe, Extrreme எனப் பாகுபடுத்தி அதற்கேற்ப எடையளவு முறையில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட உறுதிபெறு கான்கிரீட் M20 / M25 / M30 / M35 / மற்றும் M40 தரத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதை IS:456-2000 Code of Practise for Plain & Reinforced Concrete (Foruth Revision) என்ற தரக் கையேடு மூலம் விளக்கி அதற்குரிய வழிமுறைகளை (அனுமதிக்கப்படும் விரிசல் அகலம், கீழிறக்கம், மேலுறைக்கனம் தீத்தடுப்புத்தன்மை போன்றவைகளை) தெளிவாகத் தெரிவித்திருக்கிறது. அதனடிப்படையில் NBC - 2009 (National Building Code - 2009) 1:1.5:3 காங்கிரீட்டுகள் குறிப்பிடும் தேவையான வலிமையை உறுதியைத் தருவதில்லை. மாற்றாக M20/ M25/ M30 முதலிய தரக் காங்கிரீட்டுகள் தேவைப்படும் வலிமையைத் தருகின்றன.
எனவே, தான் நாம் எடையளவுடைய (RMC உட்பட) M20, M25, M30 தரக்காங்கிரீட்டுகளைப் பயன்படுத்த முன்வர வேண்டும். சென்னை மாநகர் Severe Exposure Condition இல் இருப்பதால் னி30 காங்கிரீட் தேவைப்படுகிறது. எடையளவு காங்கிரீட்டில் Super Plasticizer Admixture கலக்கும் போது தேவைப்படும் சிமெண்ட்டின் அளவு (300 கிலோ முதல் 350 கிலோ மட்டுமே) குறைகிறது. எனவே, 1:1.5:3 கொள்ளளவு காங்கிரீட்டின் விலையை விட M25 தர எடையளவு காங்கிரீட்டின் விலை...6 முதல் 8% வரை குறைவே.
Builders Line : Prompt Publication
Editor, Subramanyam
No:6, Aishwarya Nagar,
First Floor,
(Behind Chennai Health Foundation),
Thirumullaivayal,
Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
185000
|