MEMBER LOGIN

User Name :
Password :
Forgot Password        New Registration

Join as Premium User

உங்கள் கேள்விக்கான பதில்கள் உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Q: சார்! நான் சென்னை புரசையில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிக்கிறேன். வீட்டிற்கு பின்புறம் ஓரு வீட்டு வீடு வெகு நாட்களாக இருந்தது. இப்போது அதை இடித்து புது வீடு கட்டுகிறார்கள். ஆனால் வீட்டை சுற்றி இடம் விடாமல் கட்டடம் கட்டுகிறார்கள். இதனால் எங்கள் வீடுகளுக்கு காற்று, வெளிச்சம் வசதி கிடைக்காது. “செட் பேக்’ விடாமல் கட்டும் அவர்கள் செயலை எங்கள் குடியிருப்புச் சங்கம் பலமுறை எச்சரித்தும் அவர்கள் வீட்டை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எங்கு போய் புகார் தெரிவிக்க வேண்டும்? - கா. ஜானகிராம், நகைக்கடை அதிகாரி, சென்னை


Answer:

கட்டட கட்டுமானக் கட்டுப்பாட்டு விதிகளின் படி Side Set Back விட்டுத் தான் எந்த புதிய வீட்டையும் கட்ட வேண்டும்.

 

Side Set Back விடாமல் கட்டினால் அது வீதிமீறலாகும். மாநகராட்சியிலும் CMDA - விலும் புகார் தெரிவியுங்கள்.



Q: அய்யா! என் வீடு சென்னை புது வண்ணைப் பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அரை கிரவுண்டில் உருவான ஜி+2 கட்டுமானம் அது. முழுதும் பாரம் தாங்கும் கட்டுமானமாகவே அதைக் கட்டி இருக்கிறோம். வீட்டில் நுழையும் போது இடது பக்கம் வராந்தாவாகவும் ( நடை) வலது பக்கம் ஒரு காலி அறையாகவும் கட்டி இருந்தோம் ( தட்டு முட்டு சாமன்கள் போட்டு வைப்பதற்கு) அதன் அளவு 14 அடிக்கு 11 அடியாகும். இப்போது அந்த காலி அறையின் கீழே பூமிக்குள் ஒரு நிலவறைத் தொட்டி (8 X 10 X 6 அளவில்) அமைக்க இருக்கிறோம் . இந்தக் கட்டுமானத்தினால் அஸ்திவாரத்திற்கு ஏதும் ஆபத்து வருமா? இது போல் சிறிய தொட்டி அமைக்க நாங்கள் ஏதும் நகராட்சியிடம் சிறப்பு அனுமதி வாங்க வேண்டுமா? உங்கள் பாதுகாப்பு ஆலோசனை மற்றும் கட்டுமானப் பணி ஆலோசனை என்ன? ச.டேவிட், புது வண்ணை, பத்திரிகையாளர்


Answer:

உங்களுடைய பாரம் தாங்கும் பழைய கட்டுமானத்தைப் பற்றிய தகவல்கள் போதாது. அந்த கட்டடத்தின் அடித்தள ஆழம் எவ்வளவு? என்பது தெரிந்தால் ஒழிய உங்கள் வீட்டின் காலி அறையின் கீழே கீழ்நிலை தண்ணீர்த் தொட்டி கட்டுவதைப் பற்றி தெளிவாக ஏதும் தெரிவிக்க இயலாது. பழைய அடித்தளத்திற்கு மேலே புதிய தண்ணீர் தொட்டியினுடைய அடித்தளம் இருக்குமானால் கட்டலாம். அதற்கும் நகராட்சியிடம் அனுமதி வாங்க வேண்டும்.



Q: சார் நான் என் சிவில் அறிவை தங்கள் பதில்கள் மூலம் மேம்படுத்தி வருகிறேன். 6 ஆண்டுகள் சைட் சூப்பர் வைசராக இருந்து சமீபத்தில் புராஜெக்ட் பொறியாளராக பணி ஏற்க இருக்கிறேன். ஒரு நல்ல திட்டப் பொறியாளரின் தகுதி மற்றும் கடமைகள் என்ன? என்பதை தாங்கள் கூற வேண்டுகிறேன். பொறி. வினீத், மதுராந்தகம்


Answer:

தள மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற்றுள்ள திரு. வினித் அவர்களுக்கு எங்களின் நல்வாழ்த்துகள். திட்டப் பொறியாளராக பணி செய்ய இருக்கும் உங்களுக்கு புதியனவற்றைக் கற்றுக் கொள்ளும் தணியாத ஆர்வம், திட்ட வேலையில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை ஒருங்கிணைக்கும் திறமை மற்றும் திட்ட வேலைகளைத் தரத்தோடு கால அட்டவணைப்படி முடிக்கும் திட்ட மேலாண்மையும் தங்களுக்குத் தேவை.

 

உங்களின் மேலுள்ள மற்றும் கீழுள்ள சக தோழர்களிடமிருந்து ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். களப் பணியில் அவர்களோடு பழகிக் குறைகளைக் கேட்டு அவற்றைப் போக்கிட முயற்சி செய்ய வேண்டும். உங்களை பணியில் அமர்த்தியுள்ள நிறுவனத்தாருக்கும் உடன் பணிபுரியும் பணியாளர்களுக்கும் உண்மையாக உழைத்து உயரவேண்டும்.



Q: வீடுகளுக்கு யூபிவிசி ஜன்னல்கள் போடலாம் என்கிறார்கள். ஆனால், எனக்கோ மர ஜன்னல்கள் மீது தான் பிரியம். மேலும், ரீ சேல் வேல்யூ, யூபிவிசி ஜன்னல்களுக்கு இல்லை என்பது என் கருத்து. உங்கள் சிபாரிசு என்ன? - சங்கமேஸ்வர அய்யங்கார், திருவான்மியூர், புரோகிதம்


Answer:

சாதாரண வீடுகளுக்கு UPVC சன்னல்கள் போடுவது செலவை மிகுதியாக்கும். எனவே குடியிருப்பு வீடுகளுக்கு மரச் சன்னல்கள் போட்டால் போதுமானது. பெரிய அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் இவற்றிற்கு UPVC போடலாம்.



Q: கான்கிரீட் கலவையில் எம் 10 முதல் எம் 25 வரை பல கான்கிரீட்டுகள் உள்ளன என்கிறார்கள். கலவை விகிதப்படி இப்படி வேறுபடுகிறதா? அல்லது சிமென்ட் தரத்தின் அடிப் படையில் வேறுபடுகிறதா? நான் கட்டும் ஜி+ 1 கட்டுமானத்திற்கு எந்த வகை கலவையை பயன்படுத்த வேண்டும்? எந்தெந்த இடங்களுக்கு, பணிகளுக்கு எந்த கலவை தயார் செய்ய வேண்டும்? - பொற்கைபாண்டியன், லேத் பட்டறை உரிமையாளர், மதுரை


Answer:

கான்கிரீட் கலவைகளில் தரம் M10  லிருந்து M80 வரை பல்வேறு வகையான கான்கிரிட் கலவைகள் இருக்கின்றன. இவையயல்லாம் கான்கிரீட் உருவாக்கும் சிமெண்ட், கருங்கல் சல்லிகள், மணல் மற்றும் தண்ணீர் கலவை விகிதப்படி மாறுபடுகிறது. நீங்கள் கட்டும் G+1 கட்டுமானத்திற்கு மிகக் குறைந்தது M20 கான்கிரீட் தரத்தைப் பயன்படுத்த வேண்டும். கடற்கரை ஓரங்களிலிருந்தால் கான்கிரீட் தரம் M30  முதல் M40 வரை பயன்படுத்த வேண்டும். உங்கள் ஊர் உட்புறத்தில் இருப்பதால் கான்கிரீட் தரம் M20  கலவை போதுமானது.



உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Builders Line : Prompt Publication Editor, Subramanyam No:6, Aishwarya Nagar, First Floor, (Behind Chennai Health Foundation),
Thirumullaivayal, Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 185000