MEMBER LOGIN

User Name :
Password :
Forgot Password        New Registration

Join as Premium User

உங்கள் கேள்விக்கான பதில்கள் உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Q: சார் ஏஏசி கற்களை பயன்படுத்தாதீர்கள் என சொல்லும் நீங்கள் அதன் அமுக்க தகவு குறைவு எனக் கூறுகிறீர்கள். மேற்பூச்சு செய்தால் நிற்காது என்கிறீர்கள். விலை அதிகமான ஏஏசி கற்கள் சிறந்த கட்டுமானக் கற்கள் இல்லை எனவும் தொடர்ந்து வலிய பிரச்சாரம் செய்கிறீர்கள். A.) ஏஏசி கற்களுக்கு தாங்குதிறன் குறைவு என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், சுவர் தாங்கு கட்டுமானங்கள் வகைக்கு தான் தாங்கு திறன் பற்றி கவலைப்பட வேண்டும்.. பிரெம்ட் ஸ்ட்ரக்சர் கட்டுமானங்க்களுக்கு அந்த தேவை இல்லையே? B). மேற்பூச்சு என்று பார்த்தால் கலவையில் ஒரு சில ஆட்மிக்சர்களை சேர்த்தால் மேற்பூச்சு உறுதியாக நிற்கும் என்பது பலரும் அறிந்த ஒன்று. அது தவிர ஜிப்சம் மேற்பூச்சுக்கு ஏஏசி சுவர் மிகவும் ஏற்றது. அது தவிர, வால் டைல்கள்..,வால் மார்பிள் கற்கள் பொருத்தும் போது வழக்கமான கலவை மேற்பூச்சு பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை C) விலை அதிகமானது என ஏஏசி கல்லை குறை கூறும் நீங்கள் போரோதெர்ம் கற்களை மட்டும் சிபாரிசு செய்கிறிர்கள்.. களிமண்ணை எடுத்து சுற்று சூழலை கெடுக்கும் விலை அதிகமான போரோதெர்ம் கற்களை விட ஏஏசி கற்கள் மிகவும் சிறந்தது. மேலும் இது கட்டட எடையைக் குறைக்கிறது.. ஏஏசி கற்கள் ஒலி தடுப்பு, தீத்தடுப்பு குணநலன் மிக்கவை. இது ஏஏசி கற்கள் பற்றிய என் பார்வை அவ்வளவு தான்.. - பொறி.ஆர். ஜி. குமார்.. கோவை


Answer:

அன்புள்ள பொறிஞர் குமார் அவர்களே. AAC கட்டுக் கற்களைக் கட்டுமானத்தில் பயன்படுத்துவதால் ஏற்படும் குறைபாடுகளை பல நிகழ்வுகளில் பட்டியலிட்டுள்ளேன். (விளக்கம் வேண்டுவோர் நாங்கள் வெளியிடும் கட்டுமானப் பொறியாளர் - ஆகஸ்ட் 2020 இதழ் பக்கங்கள் 17 முதல் 20 வரை அன்பு கூர்ந்து படித்திடுக.) 
 
ஒரு சிறந்த செலவு குறைந்த சிக்கனமான கட்டுமானப் பொருளாக இல்லாமையால் AAC  கட்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள் என்று கருத்துரைக்கிறேன்.
 
20 ஆண்டுகளாக - பெரும்பாலான பெரிய கட்டுநர்களால் பன்மாடிக் கட்டடங்களில் எடைகுறைந்த AAC  கட்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இது சரியான மிகச் சிறந்த கட்டுமானப் பொருளன்று என்று மாறுபட்ட கருத்தை நான் எடுத்துரைக்கும்போது உங்களைப் போன்றவர்கள் உணர்ச்சி வயப்படுகிறார்கள் என்பதைப் பார்க்கிறேன். இக்கற்களின் கட்டுமானச் செலவு - எரிசாம்பல் கற்கள் மற்றும் முன்வார்த்த காங்கிரீட் கட்டுகளைவிட (24% மற்றும் 27% சதவீதம் கூடுதல் விலை). AAC கட்டுகளைவிடச் சிறந்த கட்டுமானப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும் போது - தேவையின்றி எதற்காக விலை மிகுந்த, குறைபாடுகளை உடைய AAC கட்டுகளைத் தெரிந்தெடுக்க வேண்டும்? AAC கட்டுகளின் எடை குறைவால் அடித்தளம், தூண்கள், விட்டங்களில் 3% முதல் 5% வரையே சேமிப்பு கிடைக்கிறது. 
 
- போரோ தெர்ம் கற்களைப் பயன்படுத்துமாறு நான் பரிந்துரைக்கவில்லை. ஒப்பீட்டு விலைக்காகவே எடுத்துச் சொல்லப்பட்டது. 



Q: சார் ! நான் ஒரு மாணவன். பொதுவாக கான்கிரீட் தளம் அமைக்கும் போது., ஆங்காங்கே மின்தேவைக்காக பிவிசி குழாய்கள் பதிக்கிறோம். இதனால் கான்கிரீட் தளத்தின் தடிமன் பாதிக்கப்படாதா? ஆறு அங்குல தளத்தில் கான்கிரீட் ஒரு அங்குலம் பைப் இடையில் வந்தால்., கான்கிரீட் அடர்த்தி பாதிக்குமே?

ஆர். வினோத் சம்பத், சிவகாசி


Answer:

காங்கிரீட் கூரைப்பலகத்தினுள் மின்சார பிவிசி குழாய்களை எடுத்துச் செல்வதால் காங்கிரீட்டின் அடர்த்தி ஒரு சிறிது (குழாய்கள் செல்லுமிடத்தில் மட்டும்) பாதிக்கப்படவே செய்கிறது.

அப்படி பிவிசி குழாய்களைச் சுற்றியுள்ள காங்கிரீட்டோடு பிணைப்புத் தன்மையும் குறைவதால் பிணைப்பு விரிசல்களும் (Bond Cracks) ஏற்படவே செய்கின்றன.

ஆனால்,  இந்தப் பாதிப்பு குறிப்பிடத்தக்க பெரிய அளவுக்குக் காங்கிரீட்டின் தாங்குதிறனைக் குறைப்பதில்லை.

எனவே, அச்சமின்றி காங்கிரீட் கூரைப்பலகத்தினுள் மின்சார பிவிசி குழாய்களைப் பதித்து எடுத்துச் செல்லலாம்.



Q: சார் ! நாங்கள் ஜி+2 கட்டுமானம் ஒன்றை மேற்கொள்ள இருக்கிறோம். சந்தையில் சிடிடிரீ-பார்கள், டிஎம்டி பார்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.நாங்கள் எதைப் பயன்படுத்த வேண்டும்? ஏன்? - ஸ்டானிஸ்லைஸ் டேனியல் , அம்பத்தூர்.


Answer:

சந்தையில் கிடைக்கும் குளிர் முறுக்குக் கம்பிகள் (Cold Twisted Deformed bars - CTD) காங்கிரீட் உறுப்புகளில் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும்.

ஏனென்றால், CTD கம்பிகளைப் பயன்படுத்திய காங்கிரீட் உறுப்புகளில் - (பலகம், விட்டம் மற்றும் தூண்கள்) விரைவில் (5 ஆண்டுகளுக்குள்ளே) துருப்பிடித்து இவ்வுறுப்புகளை வலுவிழக்கச் செய்கின்றன. குளிர் முறுக்கலின் போது வெளிப்புற புடைப்புகளில் (outer surface ribs) நுண்ணிய விரிசல்கள் ஏற்பட்டு காற்றிலுள்ள மற்றும் தண்ணீரிலுள்ள உயிர் வளியை (Oxygen) உறிஞ்சி துரு பிடிப்பு நிகழ்கிறது.

எனவே தான், CTD உறுதியூட்டிக் கம்பிகளைப் பயன்படுத்தக்கூடாது. 


மாறாக TMT (Thermo Mechanically Treated)  உறுதியூட்டிகளின் மேற்பரப்பில் due to Quenching process) நுண்ணிய விரிசல்களும் -அதன் காராணமாகத் துருப்பிடித்தலும் நடப்பதில்லை.

எனவே TMT  கம்பிகளைப் பயன்படுத்துவதே பாதுகாப்பானது. 

 



Q: சார். இதுநாள் வரை செப்டிக் டேங்க் என்றால் அதன் பாகமும் (கீழ்பகுதி உட்பட) சரியாக மூடப்பட்டிருக்க வேண்டும். அப்போது தான் அசுத்தமான நீர் நிலத்தடி நீருடன் கலக்காது என நினைத்திருந்தேன். சென்ற இதழில் செப்டிக் தொட்டியின் கீழ்பாகத்தை அப்படியே விட்டு விட வேண்டும் என ஈரோடு சேர்ந்த பொறியாளர் ஹரி கூறுகிறார். எது சரியானது அய்யா? - டேவிட், திருநின்றவூர்


Answer:

திரு.டேவிட் அவர்களே, உங்களுடைய தகவல்களுக்காக Septic Tank -யையும், Soak Pit  யையும் இணைந்த ஒரு வரை படத்தை இணைத்துள்ளேன். பொதுவாகவே Septic Tank ல் அடிப்பகுதியில் Concrete போடப்பட்டு நன்றாக மூடப்பட்டிருக்கும்.

அதில் விழும் கழிவு நீரும், கழிவுகளும் அந்த அறையில் தங்கிக் கொள்ளும். வெறும் கழிவு நீர் மட்டும் அருகிலுள்ள Soak Pit உறிஞ்சு குழிக்குள் போய் அதில் போடப்பட்டுள்ள செங்கல், சல்லி இவற்றால் உறொஞ்சப்பட்டு விடும். அதிகமாக கழிவு நீர் இருந்தால் தனியாக அதை பம்பின் மூலம் வெளியே எடுத்துவிடுவார்கள்.

Septic Tank ன் அடிப்பாகத்தில் Concrete போடாமல் அப்படியே விட்டுவிடுவது சரியல்ல. பக்கத்திலிருக்கும் நிலத்தடி நீர் மாசுபட வாய்ப்புண்டு. ஈரோடு  பொறியாளர் ஹரி அவர்களின் கருத்து சரியானதல்ல .  



Q: சமீபத்தில் ஒரு கேள்விக்கு பதிலளித்த நீங்கள். மர பேனல்களால் வெளிப்புறச் சுவர்களை கவர் செய்தால் கட்டடத்திற்குள் வெப்பம் வராது என சொல்கிறீர்கள். இதே எனது இன்னொரு கேள்விக்கு (1 ஆண்டுக்கு முன் கேட்ட கேள்வி) அதாவது வெளிப்புறச் சுவற்றில் வெர்டிபைடு டைல் (சிறிய டைல்கள்) பதிப்பது சரியா? எனகேட்ட போது, அப்படி செய்தால் சுவரின் விரிசல், வெடிப்பு, பலமின்மை வெளியில் தெரியாது. எனவே அதைத் தவிர்க்க வேண்டும் என்றீர்கள். வெளிப்புற மேற்பரப்பை கவர் செய்யலாமா? வேண்டாமா? இரண்டில் எது சரி ? - ம. நாகராசன், ஆவடி, பிரேக்ஸ் இந்தியா


Answer:

அன்பு நண்பர் திரு. நாகராஜன் அவர்களே, உங்கள் கேள்வி தெளிவாக இல்லை; சரியாகவும் பொருந்தவில்லை, ஒன்று மரச் சட்டங்களால் வீட்டிற்குள் வெப்பம் அதிகம் வராது. இது சரியானது தான். அடுத்தது வெளிப்புறச் சுவர்களில் குறிப்பாக Balcony பகுதியில் Vitrified Tiles பதித்தால் சுவரின் விரிசல் வெடிப்பு வெளியே தெரியாது. சுவருக்கு வலிமையும், பாதுகாப்பும் தரும். இதுவும் சரிதான்.

 

 இந்த கேள்விக்கும் முன்னால் சொன்னதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதீர்கள்.



உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Builders Line : Prompt Publication Editor, Subramanyam No:6, Aishwarya Nagar, First Floor, (Behind Chennai Health Foundation),
Thirumullaivayal, Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 185000