MEMBER LOGIN

User Name :
Password :
Forgot Password        New Registration

Join as Premium User

உங்கள் கேள்விக்கான பதில்கள் உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Q: சார்... நீங்கள் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது, காங்கிரீட் காப்பு பூச்சு என்பது கடற்கரை ஓரக் கட்டுமானங்களுக்கு கண்டிப்பாக தேவை எனச் சொல்கிறீர்கள்.. நான் சென்னை எண்ணூர், கத்திவாக்கம் பகுதியில் உள்ள அரசு கட்டுமானங்களை ஆய்வு செய்ய வந்த போது அவை பெரும்பாலும் அரித்து, சிதில மடைந்து இருந்தன... (அவற்றின் வயது 10 முதல் 12 ஆண்டுகள்) அப்படியெனில் அந்தக் கட்டுமானங்கள் கட்டப்படும்போது காங்கிரீட் காப்பு பூச்சு செய்திருந்தார்களா? இல்லையெனில் ஏன் செய்ய வில்லை அந்த மெத்த படித்த பொறியாளர்கள்? ஒருவேளை அவர்கள் செய்திருந்தால் கான்கிரீட் காப்பு பூச்சு வேலை செய்யவில்லையா? விரிவான விளக்கம் தேவை...


Answer:

திருமதி. புவனா அவர்கள் என் பதிலின் முழுப் பொருளையும் புரிந்து கொள்ளாமல் கேள்வி கேட்கப்பட்டிருப்பதில் எனக்கு வருத்தமே.
கேள்வியாளர் ஒரு சிவில் பேராசிரியர் என்பதால் IS:456Š2000 Durability criteria according exposure conditions (Table 3 & Table 5) பற்றிக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.  பொதுவாக சுற்றுப்புறச் சூழலுகேற்ற காப்பு நடவடிக்கைகள் கட்டுமானங்களில் எடுக்கப்பட வேண்டும் என்பதே அண்மைக் காலத்து விழிப்புணர்வு; இன்னும் முழுமையாக அரசுப் பொறியாளர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படாதது வேதனையே.  எனவே கடற்கரை ஓரக் கட்டடங்களில் M 30 தர காங்கிரீட் உப்பு அரிப்பினை எதிர்க்கும் வேதியியல் பூச்சு - எஃகு உறுதியூட்டிகளுக்கு அடித்தல் (steel guard nano coating - corrosion inhibitor) அல்லது CRS எஃகு உறுதியூட்டிகள் முதலியன இன்றும் கூட (2018 இல்) நடைமுறைக்கு வரவில்லை.  எனவே 10 முதல் 12 ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமானங்களில் அரசுக் கட்டடங்களில் இந்தக் காங்கிரீட் காப்புப் பூச்சு பூசப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.  இந்த நிலையை ஒரு சிவில் பேராசிரியை கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டுமென நான் எதிர்பார்க்கிறேன்.  இத்தகைய சுற்றுப்புறச் சூழலுடைய காங்கிரீட் கட்டடங்களுக்கு காப்புப் பூச்சு அடித்தல் நல்லது என்பது ஒரு பரிந்துரையே. செலவைக் கணக்கிடும் போது பலரும் செய்வதில்லை என்பதே எதார்த்தம்.  



Q: நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்.. சென்ற மாதம் வண்டலூர் - மீஞ்சூர் வெளி வட்டச் சாலையில் கட்டி முடிக்கப்படாத பாலத்தில் ஏற்பட்ட கார் விபத்திற்கு அரசு பொறியாளர்கள் தானே காரணம்..? அதே போல் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் முதலாவது மதகின் கதவு உடைந்ததற்கும் அரசு பொறியாளர்களின் அலட்சியம் தானே காரணம்?


Answer:


மணப்பாறை மதிவாணனுக்கு வணக்கமும் வாழ்த்தும்.
1. வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் கட்டி முடிக்கப்படாத பாலத்தின் மீது கார் சென்றதற்குக் காரோட்டி பொறுப்பில்லையா?  முழுமையாகாத பாலத்தில் கார் ஓட்டியதே தவறு.  உரிய அறிவிப்புகள் மாற்றுவழி பதாகைகள் அமைக்கப்படாமலிருந்திருந்தால் அரசு நெடுஞ்சாலை (தேசிய நெடுஞ்சாலை) பொறியாளரும் பொறுப்பேற்க வேண்டும்.

2. திரு. மதிவாணன் கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத் தளத்திற்குச் சென்று நேரே விசாரிக்காமல் செய்தித்தாள் தொலைகாட்சி தகவலின் அடிப்படையில் மேலும் அரசுப் பொறியாளர்கள் மீது உள்ள வெறுப்புணர்வு காரணமாகவும் அரசுப் பொறியாளர்களின் அலட்சியமே காரணம் என்ற முடிவுக்கு வருகிறார்.

அணைக்கட்டுகள், நீர்த்தேக்கங்களின் பொறுப்பிலுள்ள பொறியாளர்களின் சங்கடங்களைச் சொன்னால் இந்தப் பக்கம் போதாது.  10 பணியாளர் இருக்க வேண்டிய இடத்தில் ஒரே ஒரு பணியாளர் இருக்கிறார்.  ஆண்டுப் பராமரிப்பிற்காகத் தரவேண்டிய தொகை ரூ. 50 இலட்சத்தில் வெறும் ரூ. 2.00 லட்சம் மட்டுமே தரப்படுகிறது.  அரசினர்க்கே அணைகளை ஒழுங்காகப் பராமரிக்க வேண்டும் என்ற அக்கறையே இல்லை என்ன செய்வது?


கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் முதலாவது மதகின் இருப்புக் கதவு உடைந்ததற்கு  அந்த தகடு சாக்கடை கலந்த தண்ணீரால் அரிக்கப்பட்டு பலவீனம் அடைந்ததே உண்மையான காரணம்; மற்ற மதகுகளின் கதவுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.  குறிப்பாக கெலவரப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி அணைக்கு வரும் தண்ணீர் - பெங்களூரு வழியாக வரும்போது அவர்கள் சாக்கடைத் தண்ணீரை (Sewage waste water) இந்நதித் தண்ணீரில் கலந்து விடுகிறார்கள்.  இந்தச் சாக்கடைத் தண்ணீர் தான் மதகின் இருப்புக் கதவுகளை அரித்துவிடுகிறது.  எனவே கிருஷ்ணகிரி அணையில் எல்லா மதகுக் கதவுகளையும் புதிதாகப் போடப் போகிறார்கள்.  அப்படிப் போடும்போது சாக்கடைத் தண்ணீர் அரிக்காத Epoxy paint ஐ இருப்புக் கதவுகளில் அடிக்கப் போகிறார்கள்.  இப்பொழுது திரு.மதிவாணன் அவர்களுக்கு மகிழ்ச்சி தானே!

 



Q: சென்னைக்கு அருகே உள்ள வண்டலூர், கிளாம்பாக்கத்தில் அமைய உள்ள புறநகர் பேருந்து நிலைய வடிவமைப்பு தோற்றத்தினப் பற்றி உங்கள் கருத்து என்ன? ஒரு பொறியாளராக என் கண்ணில் ஏகப்பட்ட குறைபாடுகள் தெரிகின்றன.


Answer:

சென்னைக்கு அருகே உள்ள வண்டலூர் - கேளம்பாக்கத்தில் அமைய உள்ள புறநகர்ப் பேருந்து நிலைய வடிவமைப்புத் தோற்றத்தை வாட்ஸ் அப்பில் தான் பார்த்தேன். தெளிவான விவரமான வடிவமைப்பு வரைபடங்கள் பார்த்தால்தான் கருத்து சொல்ல முடியும். 
ஒரு நல்ல புறநகர் பேருந்து நிலையம் எப்படி  இருக்க வேண்டும் என்பதற்கு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாமண்டூரில் அமைத்துள்ள பழைய TPTC (Thanthai Periyar Transport Corporation)   கட்டியுள்ள பேருந்து நிலையத்தைப் பாருங்கள். அதன் வடிவமைப்பு 1995 - ல் நான் அக்கட்டுமானத்தை வடிவமைத்தேன். அதேப்போல கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலையமும் ஊர்திப் போக்குவரத்துக்குச் சிறப்பாகவே அமைந்துள்ளது என்பது என் கருத்து.



Q: கட்டி முடிக்கப்பட்ட வீட்டை வாங்க இருக்கிறோம். ஆவணங்கள் எல்லாம் சரிபார்த்தாகி விட்டது. ஆனால் கட்டுமானத்தின் தரம், அந்த குடியிருப்பின் கட்ட வடிவமப்பின் தரம் ஆகியவற்றை எங்ஙனம் தெரிந்து கொள்வது?


Answer:

அன்புள்ள சகோதரி பவித்ரா அவர்களே, நீங்களே புதிய வீட்டை வாங்குவதற்கு முன்பாக கட்டுமானத்தின் தரம், அதன் வடிவமைப்பின் தரம் இவற்றை அறிய 10 ஆண்டுகளுக்கு 
மேலாக கட்டடத் துறையில் திறமையும் அனுபவமும் உள்ள கட்டுமானப் பொறியாளரை அணுகுங்கள்.



Q: அய்யா வணக்கம் திருவளூரில் மேல் நல்லாட்டூரில் ஜி+2 வீடு கட்ட இருக்கிறேன். 11 மீ உயரம் வரக்கூடும். கட்டடம் கட்டும்போதே இங்கே செல் டவர் அமைக்க என்னை அணுகி இருக்கிறார்கள் . செல் டவர்கள் தரக்கூடிய அதிர்வு, எடை காரணமாக இப்பகுதியில் யாரும் டவர்களை அமைக்கவிடவில்லை. ஒருவேளை செல்டவர் அமைப்பதற்கான கட்டட வடிவமைப்பு, அடித்தளம் ஆகியவற்றை அமைத்துக்கொண்டால் செல்டவர் பொருத்த விடலாம் அல்லவா? மாதம் 30 ஆயிரம் வாடகை வரக் கூடிய சூழல் இருப்பதால் கேட்கிறேன்.


Answer:

உங்களுடைய  புதிய வீட்டுக் கட்டடத்தின் மீது (11.00 மீட்டர்க்கு மேலே செல் டவர் அமைக்க ஒப்புதல் தராதீர்கள். செல் டவரால் ஏற்படும் அதிர்வுகளினாலும் புயல் காலங்களில் பலமாக 
காற்று வீசுவதானாலும் செல் டவர் பொருத்தியக் கட்டடங்களுக்குச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே மாதம் ரூ. 30,000க்கு ஆசைப்பட்டு ரூ. 50 இலட்சம் செலவழித்துக் கட்டிய வீடு சேதமடைவதற்கு நீங்களே காரணமாக இருக்காதீர்கள். வீடுகளின் மொட்டை மாடியில் இப்படிப்பட்ட செல் டவர்களை அமைப்பது பாதுகாப்புடையதன்று.



உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Builders Line : Prompt Publication Editor, Subramanyam No:6, Aishwarya Nagar, First Floor, (Behind Chennai Health Foundation),
Thirumullaivayal, Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 185000