MEMBER LOGIN

User Name :
Password :
Forgot Password        New Registration

Join as Premium User

உங்கள் கேள்விக்கான பதில்கள் உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Q: சார், நான் 1200 சதுர அடி மனையில் ஜி+ 1 தளமாக 1350 ச.அடி வீடு கட்டி வருகிறேன். மண் பரிசோதனை செய்து தான் வீடு கட்டினேன். இப்போது பிரிகேஸ்ட் ஸ்லாப் முறையில் காம்பவுன்ட் சுவர் அமைக்கச் சொன்னால், கற்கள் வைத்து தான் சுற்றுச் சுவர் கட்ட வேன்டும் என்கிறார் பொறியாளர். மேலும், காம்பவுண்டுக்கு என தனியே மண் பரிசோதனை செய்ய வேண்டும் என செலவைக் கூட்டுகிறார். அவருக்கு நான் என் நிலையை எப்படி விளக்குவது? லோக் சுந்தர், வில்லிவாக்கம்.


Answer:

பில்டர்ஸ்லைன் இதழில் கேள்வி கேட்பவர்கள் தங்களைப் பற்றிய சொந்த விவரம் தரப்பட வேண்டும். அப்பொழுது தான் அவர்களின் நிலைமையை அறிந்து மிகச் சரியான பதிலைச் சொல்வதற்கு வாய்ப்பு ஏற்படும். வீடு கட்ட மண்பரிசோதனை செய்திருந்தால் அதில் 5 அடி/8அடி/12 அடியில் என்ன வகையான மண் கிடைத்தது என்பது தெரிய வேண்டும்.
எங்களுக்குத் தெரிந்து வில்லிவாக்கத்தில் களிமண்ணும் சிறிது மணல் கலந்த களிமண்ணும் கிடைக்கிறது. உங்கள் வீட்டுக்கு என்ன வகையான அடித்தளம் அமைத்தீர்கள்? என்று தெரியப்படுத்தவில்லை. சுற்றுச்சுவர் கட்டுவதற்கு என்று தனியாக மண்பரிசோதனை செய்ய வேண்டிய அவசிய மில்லை. வீடு கட்ட செய்த மண்பரிசோதனையே போதுமானது.
தாங்கள் கூறுவது போல முன்வார்த்த கான்கீரிட் பலகம் கொண்டு சுற்றுச்சுவர் தாராளமாக அமைக்கலாம். ஆனால் சுற்றுச்சுவரில் இடையேயுள்ள கான்கீரிட் தூண்களுக்கு கீழே அடிபெருத்த குத்துத்தூண் (SURP) அடித்தளம் போட வேண்டும். இல்லாவிடில் 4/5 ஆண்டுகளில் சுற்றுச்சுவர் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.
 
------------------------------------------------------------------------
 
பதிலளித்தவர் : மூத்த பொறியாளர் திரு. அ.வீரப்பன்
 
2020, டிசம்பர் மாத , பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து.



Q: அய்யா வணக்கம் ! எனக்கு மதுரவாயல் - துறைமுக பறக்கும் பாலம் பற்றி புரியாத விrயம் பற்றி உங்களிடம் கேட்கவேண்டும். 10 ஆண்டுகளாக கட்டப்படாமல் கைவிடப்பட்ட அப்பாலத்தை, இப்பொது ஈரடுக்கு பாலமாக கட்டப் போகிறார்களாம். அது உண்மையில் சாத்தியமானதா? ஏனெனில் இதற்கு முன் கட்டப்பட்டு, கைவிடப்பட்ட தூண்கள் மீது தான் புதிய பாலம் வரப்போகிறது. அப்படியயனில் கூடுதல் எடையை அத்தூண்கள் சுமக்கும் வண்ணம் கட்டப்படுவது ஏற்புடையயதா? எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அப்படி கட்டக்கூடாது,பழைய வடிவமைப்பே சரி என சொல்கிறார். அரசு ஈரடுக்கு பாலம் தான் கட்டுவோம் என்கிறது. அனுபவ அரசு பொறியாளர்கள் உங்கள் கருத்து என்ன?


Answer:

பொறி. ராம்குமார் அவர்கள், நீங்கள் ஒரு கட்டுமானப் பொறியாளராக இருக்கும்பட்சத்தில் - 10 ஆண்டுகளாக கட்டப்படாமல் கைவிடப்பட்ட சென்னை - மதுரவாயல் துறைமுக பறக்கும் பாலம் வேண்டுமென்றே அரசியல் காழ்புணர்ச்சியில் பழைய தமிழ்நாடு அரசால் நிறுத்தப்பட்டது பொறியியல் கராணங்களுக்காக அல்ல.
கைவிடப்பட்ட பாலத்தை இப்பொழுது 2 அடுக்கு பாலமாகக் கட்டப் போகிறார்கள் என்று செய்திகள் வெளியிடப்படுகின்றன. கட்டுமானப் பொறியியலில் இப்படிப்பட்ட மாற்றங்களை எளிதாகவும் இயல்பாகவும் கூடுதல் எடையைத் தாங்கும் வண்ணம் கட்டமுடியும் என்பதே பொறியியல் நிலைப்பாடு. சிறந்த அனுபலமும் பொறியியல் திறமையும் கட்டுமான வடிவமைப்பும் தெரிந்த யாரிடமும் கேட்டாலும் 2 அடுக்கு பாலத்தை புதிய மாற்றங்களோடு செய்ய முடியும் என்று கூறுவர். என்னுடைய கருத்தும் அதுதான். அரசியல்வாதிகள் சொல்லும் கருத்துகளைப் புறந்தள்ளுங்கள்.
 
பதிலளித்தவர் : மூத்த பொறியாளர் திரு. அ.வீரப்பன்
 
 
பில்டர்ஸ் லைன் டிசம்பர் 2020 இதழிலிருந்து..



Q: திருவளூரில் மேல் நல்லாட்டூரில் ஜி+2 வீடு ஒன்றில் நாங்கள் செல் டவர் பொருத்த கட்டட உரிமையாளர் ஒருவரிடம் அனுமதிக் கேட்டிருந்தோம். முதலில் சரி என்றவர் இப்போது பில்டர்ஸ் லைன் என்ற பத்திரிகையை காட்டி உங்கள் ஆலோசனையாக செல்டவரை வைக்க விடாதீர்கள் என சொல்லி இருப்பது எங்கள் கவனத்திற்கு வந்தது. ஒரு செல்டவர் கனம் என்ன? காற்று அதிர்வு என்ன? அதை ஒரு கட்டடம் தாங்குமா? தாங்காதா? என்பது குறித்தெல்லாம் விவரம் திரட்டாமல் பொத்தாம் பொதுவாக செல்டவரை அனுமதிக்காதீர்கள் என அனுபவம் வாய்ந்த நீங்களே சொல்வது சரியா? யாரும் செல்டவரே வேண்டாமென்றால், பின் சிக்னல் எப்படி வரும்? உங்கள் கைபேசியை அணைத்து விடுவீர்களா? உங்களைப் போன்ற கட்டட வடிவமைப்பாளர்கள் சரியாக வழிகாட்டுங்கள் - துரைக்கண்ணு, ஆர்.ஆர். டவர் இன்ஸ்டாலே­ன்ஸ், ஆவடி


Answer:

 
திரு. துரைகண்ணு அவர்களே நீங்கள் என்ன படித்து, எந்தத் தொழில் செய்கிறீர்கள்? என்பது உங்களுடைய நீளமான கேள்வியில் தெரிவிக்கப்படவில்லை. கட்டடங்களினுடைய வலிமை மற்றும் உறுதித்தன்மை (வாழ்நாள் காலம்) என்பதைப் பற்றி எல்லாம் ஒரு சிறிதும் தெரியாமல் பொத்தாம் பொதுவாக செல் டவர் கட்டடங்களின் மேல் பொருத்தினால் கட்டடம் தாங்குமா, தாங்காது பற்றி என்பது எல்லாம் உங்களுக்குத் தெரியாத காரணத்தால் இப்படி கேட்டுள்ளீர்கள்.
நாங்கள் / கட்டட வடிவமைப்பிலும் கட்டடக் கட்டுமானத்திலும் 50 ஆண்டுகளாக மேலாக அனுபவம் உள்ளவர்கள் - செல் டவர் எப்படி கட்டடங்களை புயல், மழைக் காலங்களில் சேதப்படுத்தும் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்துள்ளோம். கஜா புயலின் போது செல் டவர் மட்டுமல்ல உயர்மின் கோபுரக் கம்பங்களும் தகரக் கொட்டகைகளும் எப்படி காற்றில் பறந்தன என்பதை நீங்கள் படித்ததுமில்லை, பார்த்ததுமில்லை என்று தெரிகிறது. செல் டவரை கட்டடத்தின் மேல் கட்டாமல் கட்டாந் தரையின் மேலே கட்டலாம். அப்படி நிறைய செல் டவர்கள் கட்டப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதற்காக உங்கள் கைப்பேசியை அணைத்து வைக்கத் தேவையில்லை.
உறுதியாகவும் தெளிவாகவும் சொல்லுகிறோம். குடியிருப்பு கட்டடங்களின் மீது செல் டவரை அமைத்தால் கண்டிப்பாக அந்த வீடுகள் மின்காந்த அதிர்வுகளால் புயல், மழை, காற்றினாலும் கண்டிப்பாகப் பாதிக்கப்படும். பொருட் சேதமும் உயிர் சேதமும் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன. எனவே வீடுகளின் மீது செல்டவரை அமைக்க அனுமதிக்கக் கூடாது.
பதிலளித்தவர் : மூத்த பொறியாளர் திரு. அ.வீரப்பன்
பில்டர்ஸ் லைன் டிசம்பர் 2020 இதழிலிருந்து..
 
 



Q: அய்யா, தாங்கள் தவறாக எண்ண வேண்டாம். நீங்கள் ஒரு கட்டுரையில் 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழங்கட்டடங்களை முற்றிலும் இடித்து விட்டு புதியதாக சட்டக் கோப்புடைய உறுதிபெறு காங்கிரீட் கட்டடம் கட்ட வேண்டும் என்கிறீர்கள். அப்படியெனில் ஒரு கட்டடத்தின் ஆயுள் என்பது 50 ஆண்டுகள் தானா? (நான் பணிபுரியும் கல்லூரி கட்டடத்தின் வயது 65 ஆண்டுகள். பாரம் தாங்கும் சுவர் கட்டடம் தான் இது. நன்றாக உறுதியாகத் தான் உள்ளது) எனது இன்னொரு அய்யம் என்னவெனில், பழங்கட்டடங்களை இடித்துத் தள்ளுங்கள் எனச் சொல்லும் நீங்கள் தான் தீப்பற்றி எரிந்த கட்டடங்களை இடிக்காமல் சீரமைக்கலாம் என வேறு கட்டுரையில் சொல்கிறீர்கள். எது சரி...?


Answer:

அன்பிற்குரிய ராம் மனோகர், சிவில் பேராசிரியர் அவர்களே; தவறாக எண்ணவில்லை.  

1. பழமையான - பராமரிப்பே இல்லாத பாழடைந்த (சேதமடைந்த) 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கட்டடங்களை இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டலாம் என்பது ஒரு கருத்துரை.  ஏனென்றால் பழுதடைந்த பழைய கட்டடங்களை அதுவும் பாரந்தாங்கும் அமைப்புடையவைகளை வலிமைப்படுத்தி சீரமைப்பது கடினமான, காசு செலவழிக்கும் செயல்.  எனவே அப்படி பதில் சொல்லப்பட்டது.  மேலும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டடங்களில் தேவையற்ற ரிஸ்க் எடுப்பது கூடாது.


நான் பொதுப்பணித்துறையில் சேப்பாக்கம் வளாகத்தில் 25 ஆண்டுகள் பணியாற்றிய கட்டடம் 150 ஆண்டுகள் பழைமையானது.  அவ்வாறே சேப்பாக்கம் வளாகத்திலுள்ள மாநிலக் கல்லூரி, சென்னைப் பல்கலைக் கழகம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றக் கட்டடம் எல்லாமே பாரந்தாங்கும் பழமையான கட்டடங்கள்; 100 ஆண்டுகளுக்கு மேலானவை.  ஆனால் ஆண்டுதோறும் சிறந்த பராமரிப்புப் பெற்றவை; பெறுபவை.

  எனவே இன்றும் பயன்பாட்டில் சிறப்பாக உள்ளன.  இடிக்க வேண்டிய அவசியம் இல்லை.  சேப்பாக்கத்திலுள்ள பழமையான கல்சா மகால் தீயினால் சேதமடைந்த போது இடிக்கக் கூடாது; சீரமைத்துப் பயன்படுத்தலாம் என்று கருத்துரைத்தவன்..  அவ்வாறே சீரமைக்கப்பட்டு இன்று தென் மண்டல பசுமைத் தீர்ப்பாய் அலுவலகம் இயங்குகிறது.


2. தீயினால் பாதிக்கப்பட்டவை அனைத்தும் பழமையானவை அல்ல. (சென்னை சில்க்ஸ், தி.நகர்); ஒழுங்காகப் பராமரிக்கப்பட்டவை.  எனவே அவை தீயினால் சேதமடையும் போது - சிறப்பு கட்டுமான நுட்பங்களின் மூலம் வலிமை படுத்தி சீரமைத்துப் பயன்படுத்தலாம் என்று உறுதியான கருத்துரைக்கிறேன்.  எனவே இரண்டும் வேறனவை.  தங்களின் பொறியியல் திறன்படி அவற்றின் தன்மைக்கேற்ப முடிவு எடுக்க வேண்டும்.

 



Q: அய்யா, நான் வாங்கியுள்ள மனை தெருவாட்டத்தில் பார்த்தோமெனில் சரியாக இருக்கிறது. ஆனால், மனைக்குள் பார்த்தோமெனில் கிராஸாக உள்ளது. 20க்கு 40 உடைய என் மனையில் நேராக வீடு கட்டினால் நாலாபுறமும் மனை வீணாகும் என்கிறார்கள். எனவே, தெருவுக்கு ஏற்றபடியே நான் வீடு கட்டிவிடலாமா? ஆலோசனை தேவை...


Answer:

தெரு அமைப்பிற்கு ஏற்றவாறே உங்கள் கட்டடத்தை நேராகவே கட்டுங்கள்.  மனை அமைப்பினை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.  பயன்பாடே மிக முக்கியம்.  யாராவது வாஸ்துவுக்கு சரியாக இல்லை என்றால் ஒரு சிஷீதும் கவலைப்படாதீர்கள்.  வாஸ்து என்பதே ஒரு மனநிலை தான்.  வாஸ்து எப்பொழுதும் கெடுதல் செய்யாது என்று நம்புங்கள்.



உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Builders Line : Prompt Publication Editor, Subramanyam No:6, Aishwarya Nagar, First Floor, (Behind Chennai Health Foundation),
Thirumullaivayal, Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 185000