விதிமுறைப்படி பதிவு செய்யாத, 13 கட்டுமான திட்டங்களுக்கு, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
தமிழகத்தில், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், 2017 ஜூனில் அமலுக்கு வந்தது. இதற்காக, தற்காலிக ஆணையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆணையம் ஏற்படுத்தப்பட்ட போது, பணி நிறைவு சான்று பெறாத நிலையில் உள்ள கட்டுமான திட்டங்களை பதிவு செய்ய வேண்டும். இதன்படி, 500க்கும் மேற்பட்ட கட்டுமான திட்டங்கள் பதிவாகி உள்ளன.
ஆனால், 2015ல், திட்ட அனுமதி பெற்று, இதுவரை பணிகள் முடியாமல், சென்னை புற நகரில், 13 திட்டங்கள் தொடர்வது கண்டறியப்பட்டுள்ளது. இந்த திட்டங்களுக்கு, ஏன் அபராதம் விதிக்கக்கூடாது எனக்கேட்டு, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
'உரிய விளக்கம் அளிக்காவிட்டால், 13 கட்டுமான நிறுவனங்களுக்கும், விரைவில் அபராதம் விதிக்கப்படும்' என, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.