சிமெண்ட் நிறுவனங்கள், 6,700 கோடி ரூபாய் அபராதம் தொடர்பாக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை, தேசிய நிறுவனங்கள் சட்ட மேல் முறையீட்டு தீர்ப்பாயம் தள்ளுபடி செய்துள்ளது.
சிமெண்ட் நிறுவனங்கள், கூட்டு சேர்ந்து, விலையை உயர்த்தி கொள்ளை லாபம் அடித்த வழக்கில், 11 நிறுவனங்களுக்கு, 6,700 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த 2016, ஆகஸ்டில், சந்தை போட்டி கட்டுப்பாட்டு ஆணையம், இந்த தீர்ப்பை வழங்கியது. இதை எதிர்த்து, ஆணையத்தின் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில், சிமெண்ட் நிறுவனங்கள் மேல்முறையீடு செய்தன.
அதில், அபராத தொகையில், 10 சதவீதத்தை, ஒரு மாதத்திற்குள் செலுத்தும் உத்தரவுக்கு, நவ., 22ல், இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கு, தற்போது, சந்தை போட்டி கட்டுப்பாட்டு ஆணையத்தின் உயர் அதிகார அமைப்பான, தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்பாயத்தின் முன், விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி, எஸ்.ஜே முகோபாத்யாயா தலைமையிலான அமர்வு, 'ஆணையத்தின் உத்தரவு செல்லும்' எனக் கூறி மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது.
இதனால், 'அல்ட்ராடெக், ஏ.சி.சி., அம்புஜா, ராம்கோ, ஜே.கே சிமெண்ட் உள்ளிட்ட, 11 நிறுவனங்கள் அபராதம் செலுத்த வேண்டும்.
இவற்றில், அல்ட்ராடெக், அதிகபட்சமாக, 1,175 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.