சென்னையை அடுத்த பெருங்குடி அருகே கந்தன்சாவடியில் உள்ள கோவிந்தராஜ் நகரில் தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் பின்புறம் ஜெனரேட்டர் வைப்பதற்காக பிரமாண்ட அறை கட்டப்பட்டு வந்தது.
இந்த பணியில் 28-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இதற்காக 10க்கும் மேற்பட்ட இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த தூண்களின் மேல் இரும்பு சாரம் அமைக்கும் பணி நடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அங்கு அமைக்கப்பட்டு இருந்த இரும்பு சாரம் திடீரென சரிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளுக்குள் அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது பலியானவர் ஒருவர் உடல் மீட்கப்பட்டது. அவர் பீகாரை சேர்ந்த கட்டுமான தொழிலாளி பப்லு என்பது தெரிய வந்தது.
இந்த விபத்தில் 10 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள். 28 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கட்டுமான நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், சாரம் சரிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வடைந்து உள்ளது.