கட்டடப் பணிகளில் தரமற்ற எம்.சாண்ட்: ஆன்-லைன் முறை விற்பனைக்கு வலியுறுத்தல்
21 ஜூலை 2018   02:18 PM



தமிழகம் முழுவதும் செயற்கை மணல் எனப்படும் எம்.சாண்ட் மணல் தரமற்ற முறையில் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, கட்டுமானத்துக்குப் பயன்படுத்தும் ஆற்று மணலை ஆன்-லைன் முறையில் விற்பது போன்று, எம்.சாண்ட் மணலையும் விற்க வேண்டும் எனப் பெரும்பாலானோர் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் சட்ட விரோத மணல் குவாரிகள் மூடப்பட்டது, ஆன்-லைன் குவாரிகள் மூடப்பட்டது, ஆற்று மணலுக்கு தட்டுப்பாடு போன்ற காரணங்களால் கட்டுமானத்துக்கான மணல் தேவை அதிகரித்தது. ஆற்று மணலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் தமிழகத்தில் பெரும்பாலான கட்டுமானப் பணிகள் பாதியிலேயே நின்றன. குறிப்பாக, அரசுத் துறைகளில் நடந்த கட்டுமானப் பணிகளிலும் சிக்கல் ஏற்பட்டது. கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கு போதுமான மணல் கிடைக்காமல் பெரும் அவதிப்பட்டனர். இந்த நிலையில், ஆற்று மணலுக்குப் பதிலாக, செயற்கை மணலான எம்.சாண்டை பயன்படுத்த தமிழக அரசு முன்முயற்சி எடுத்தது. இதற்காக கட்டுமான ஒப்பந்ததாரர்கள் உள்பட பலரும் எம்.சாண்டை பயன்படுத்த முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது. 

எப்படித் தயாராகிறது?
கருங்கல்லை ஜல்லிக்காக உடைத்தது போக மீதமுள்ள தூள் போன்ற நிலையைத்தான் சுத்தம் செய்து எம்.சாண்டாக விற்பனை செய்கின்றனர். இந்த மணலை விற்பனை செய்யும் உரிமையாளர்கள் அனைவரும் தமிழக அரசின் பொதுப்பணித் துறையில் பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 9 மாதங்களுக்கு முன்பு, அதாவது ஆற்று மணலுக்கு தட்டுப்பாடு ஏற்படாத காலகட்டத்தில் எம்.சாண்ட் என்பது டன்னுக்கு ரூ.450, ரூ.400 என தரத்தின் நிலைக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், இப்போதுள்ள தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி எம்.சாண்டை டன்னுக்கு ரூ .900 முதல் ரூ.1,100 வரை விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரண்டு மடங்கு விலை வைத்து விற்கப்படுவதாகவும், கழிவு மணலைக் கூட எம்.சாண்ட் என விற்பனை செய்வதாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து, தமிழ்நாடு எம்-சாண்ட் லாரி உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் எஸ்.யுவராஜ் கூறியது:- ""பொதுப்பணித் துறையில் பதிவு செய்த பிறகே எம்.சாண்டை விற்பனை செய்ய வேண்டும். ஆனால், இதுவரை 10 சதவீதம் பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். அரசு நிர்ணயித்த ஆழத்தைவிட பன்மடங்கு பள்ளம் தோண்டி, அதிகமாக கருங்கற்களை உடைத்து, எம்.சாண்ட் என அதிக விலைக்கு விற்கின்றனர். அதிக லாபத்தில் எம்.சாண்ட் விற்கும் உரிமையாளர்கள் எவரிமுடம் அதற்கான உரிய இயந்திரம் இல்லை. இதனால் தரமற்ற கலப்பட எம்.சாண்ட் விற்பனை செய்யப்படுகிறது'' எனத் தெரிவித்தார்.
ஆன்-லைன் மூலம் விற்க கோரிக்கை 

ஆற்று மணலைப் போன்றே எம்.சாண்ட் மணலையும் ஆன்-லைன் மூலம் விற்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இதன் மூலம், தரமான மணல் வெளிமாநிலங்களுக்குச் செல்வது தடுக்கப்படும் எனவும், தரமற்ற மணல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது நிறுத்தப்படும் என்றும் மணல் விற்பனையாளர்கள் தெரிவித்தனர். எம்-சாண்ட் மணலையும் அரசே ஏற்று ஆன்-லைனில் விற்பனை செய்தால் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்ட வழி ஏற்படும் எனவும் அவர்கள் கூறினர்.

ஆற்று மணல் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் கட்டப்படும் பெரும்பாலான கட்டடங்களுக்கு செயற்கை மணல் எனப்படும் எம்-சாண்ட்தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த மணலை கட்டுமான ஒப்பந்ததாரர்களே கொள்முதல் செய்து கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். எனவே, அரசு கட்டடங்களில் ஒப்பந்ததாரர்களால் பயன்படுத்தப்படும் செயற்கை மணல் எத்தகைய தரம் வாய்ந்தது என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும், தரமான மணலைப் பயன்படுத்துவதை உறுதி செய்திட வேண்டும் எனவும் மணல் உற்பத்தியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுதொடர்பாக, அரசுத் தரப்பில் கேட்டபோது, எம்.சாண்டை ஆன்-லைனில் விற்பது தொடர்பாக கோரிக்கைகள் வந்துள்ளன. இதுகுறித்து, பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

வெளி மாநிலம் செல்லும் மணல்

தமிழகத்துக்குள் தரமற்ற எம்.சாண்ட் விற்பனை செய்யப்படுவது ஒருபுறம் இருக்க, தரத்துடன் தயாரிக்கப்படும் எம்.சாண்ட் மணல் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தமிழக அரசின் முறையான அனுமதி பெற்று, சரியான இயந்திரங்களுடன் எம்.சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் தமிழகத்துக்குட்பட்ட ஒசூர் பகுதியில் இயங்கி வருகின்றன.

இந்த நிறுவனங்கள் மூலம் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை லோடு வரை எம்.சாண்ட் தயாரிக்கப்படுகிறது. இந்த மணல் வெளி மாநிலங்களுக்கே அதிக அளவு எடுத்துச் செல்லப்படுவதாக ஒசூர் பகுதியைச் சேர்ந்த மணல் விற்பனையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

இந்தச் செயல்பாடுகளால் தரமான மணல் தமிழகத்தின் பயன்பாட்டுக்குக் கிடைக்காமல் போகிறது என விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087362