சென்னை சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலம் அருகே, அடையாறு ஆற்றோரம் ஆக்கிரமித்து, அடுக்கு மாடி கட்டடம் கட்டுவதாக, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, கட்டுமான நிறுவனமான, 'காசா கிராண்ட்'டை வழக்கில் சேர்த்து, அனைத்து ஆவணங்க்களுடன், சைதை மண்டல மாநகராட்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை, வருவாய் துறை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் ஆஜராகும்படி, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.
இவ்வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் கூறியதாவது:
அடையாறு ஆற்றின் கரையில், இவ்வளவு பெரிய கட்டடம் கட்ட, எப்படி அனுமதி வழங்கப்பட்டது.
சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, இதே மறைமலை அடிகள் பாலத்தில், எவ்வளவு வெள்ளம் சென்றது.
அடுக்குமாடி கட்டடத்தில், 100க்கும் மேல் வீடுகள் கட்டியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. வீடுகளில் குடியிருப்போர் பாதுகாப்பை பற்றி, நாங்கள் அக்கறை கொள்கிறோம்.
அதிர்ச்சி
எங்களுக்கு உள்ள கவலை என்னவென்றால், மீண்டும் ஒரு மவுலிவாக்கம் சம்பவம் நடந்து விடக் கூடாது. இந்த சம்பவத்தில் இருந்து, அதிகாரிகளும், 'பில்டர்'களும், பாடம் பெற்றதாக தெரியவில்லை.
ஆற்றின் ஓரம், இப்படி ஒரு பெரிய கட்டடம் கட்ட அனுமதிக்கப்பட்டது, எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த வழக்கில், கடலோர ஒழுங்குமுறை மண்டல நிர்வாக ஆணையம் மற்றும் சென்னை ஆறுகள் மீட்பு அறக்கட்டளை ஆகியோரை சேர்க்கிறோம்; அவர்கள், பதில் அளிக்க வேண்டும்.
அடுக்குமாடி கட்டடத்துக்கு தடையில்லா சான்றிதழ், ஒப்புதல் வழங்கிய அதிகாரிகளும், ஆவணங்களுடன், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
கட்டட நிறுவனம் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், "விதிகளுக்கு உட்பட்டு, கட்டடம் கட்டப்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பு அம்சங்கள், பின்பற்றப்பட்டுள்ளன. அதிகாரிகளும் ஆய்வு செய்துள்ளனர்," என்றார்.
பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை, வரும், 20ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.