சீட் நிரம்பவில்லை - ? இலவசங்களை காட்டுகின்றன இன்ஜி.. கல்லூரிகள்
14 ஜூலை 2018   05:00 PM



இன்ஜினியரிங் படிப்புகளுக்கான கவுன்சிலிங், நாடு முழுவதும் நடந்து வருகிறது.
 
நூற்றுக்கணக்கான புதுப் புது பாடப்பிரிவுகள் வந்துவிட்டாலும், தனியார், இன்ஜி., கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை மந்தமாகவே இருப்பதாக, கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
 
ஆர்வம்
இரண்டு ஆண்டுகளுக்கு முன் கூட, இன்ஜினியரிங் பாடப்பிரிவுகளில் சேருவதற்கு, மாணவர்கள் மத்தியில், கடுமையான போட்டியும், ஆர்வமும் இருந்தது.
 
ஆனால், இரண்டு ஆண்டுகளாக, தனியார், இன்ஜி., கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை பெருமளவில் குறைந்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டில் மொத்தமுள்ள, 3,291 இன்ஜினியரிங் கல்லூரிகளில், 15.5 லட்சம் இடங்கள் உள்ளன.
 
இவற்றில், 2016- 17ம் ஆண்டில், 50 சதவீத இடங்கள் காலியாகவே இருந்ததாக, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குஜராத்தில் தான், நிலைமை மோசமாக உள்ளது.  இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையிலும், இதே நிலை தொடருவதாக, கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து, மாணவர்களை கவர, தனியார் கல்லூரிகள், பல வித்தியாசமான முயற்சிகளில் இறங்கி உள்ளன.
 
இது குறித்து, குஜராத் மாநிலம், ஆமதாபாதில் இருந்து வெளியாகும், மிரர் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;
குஜராத் மாநிலத்தில், இன்ஜினியரிங் பாடத்துக்கான, முதல் கட்ட மாணவர் சேர்க்கை முடிவடைந்து உள்ளது.
 
இதில், மொத்தமுள்ள, 55 ஆயிரத்து, 422 இடங்களில், 34 ஆயிரத்து, 642 இடங்கள் காலியாகவே உள்ளன.  இதனால், தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
 
ஆடி தள்ளுபடி
இந்த நிலைமையை சமாளிக்க, பல்வேறு புதுப்புது திட்டங்களை அறிவித்து, மாணவர்களை கவர முடிவு செய்துள்ளனர்.  முதல் கட்டமாக, கல்வி உதவித் தொகை என்ற பெயரில், கல்வி கட்டணத்தில் பெரும் அளவில், தள்ளுபடி தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
முதல், செமஸ்டருக்கான கட்டணம் தள்ளுபடி, கல்லூரி பேருந்து மற்றும் விடுதிக்கு பாதி கட்டணம், இலவச லேப்டாப் போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை, தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் அள்ளி வீசி உள்ளனர்.
 
இதன் உச்சகட்டமாக, நான்கு ஆண்டு கல்வி கட்டணத்தையும், ஒரே தவணையில் செலுத்தும் மாணவர்களுக்கு, நான்காம் ஆண்டு படிப்பு முடிந்ததும், இரு சக்கர வாகனம் இலவசமாக வழங்கப்படும் என, பல கல்லூரிகள் அறிவித்து உள்ளன.
 
சில கல்லூரிகள், ஆண்டுக்கு, 2,500 ரூபாய் கல்வி கட்டணம் செலுத்தினால் போதும் என, ஆடித் தள்ளுபடி போன்ற சலுகை அறிவிப்பை வெளியிட்டு உள்ளன.
 
கமிஷன்
மேலும் சில கல்லூரிகள், மாணவர்களை சேர்த்துவிட, கமிஷன் ஏஜன்ட்களை நியமித்துள்ளன.  ஒரு மாணவனை சேர்த்துவிட்டால், 10 ஆயிரம் ரூபாய் கமிஷன் தரப்படும் என, அறிவித்துள்ளன.
 
இவ்வாறு அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
 
போதிய மாணவர் இல்லாமல், கல்லூரியை நடத்தி, நஷ்டமடைவதை விட, இது போன்ற சலுகை மற்றும் இலவச அறிவிப்புகளை வெளியிட்டு, மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நிலைக்கு, குஜராத் கல்லூரிகள் தள்ளப்பட்டுள்ளதாக, கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
 

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087395