மவுலிவாக்கத்தில், 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்த நிலையில், அதில் வீடு வாங்கியோருக்கு, வீட்டுக்கடன் வழங்கிய வங்கிகள், கடன் வசூல் தீர்ப்பாயம் வாயிலாக, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை, போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில், 11 மாடி தனியார் குடியிருப்பு கட்டடம், 2014 ஜூன், 28ல் இடிந்து விழுந்தது. இங்கு எஞ்சி இருந்த, ஏ பிளாக் கட்டடம், 2016 நவ., 2ல், வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது.
மொத்தம், 86 வீடுகள் அடங்கிய இத்திட்டத்தில், 72 வீடுகளை வாங்கியோர், இந்த விபத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வங்கிகளில் வீட்டுக்கடன் பெற்று, அதன் அடிப்படையிலேயே, இவர்கள் வீடு வாங்கி இருந்தனர்.
இதில் பெரும்பாலானோர், பொதுத் துறை வங்கிகளிலேயே, வீட்டுக்கடன் பெற்றுள்ளனர். கட்டட விபத்து குறித்து, வீட்டுக்கடன் வழங்கிய வங்கிகளுக்கு, இவர்கள் தகவல் தெரிவித்தனர்.
ஆனால், அரசு தரப்பில், இது தொடர்பான அதிகாரப் பூர்வ உத்தரவு வராத நிலையில், இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது என, வங்கிகள் தெரிவித்துவிட்டன.
விசாரணை கமிஷன், உயர் நீதிமன்றம், தமிழக அரசு என, பல்வேறு நிலைகளிலும், வீடு வாங்கியோர் முறையிட்டும், ஆக்கப்பூர்வமான பதில் கிடைக்கவில்லை. இதனால், பாதிக்கப்பட்டோர், தேசிய நுகர்வோர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதில் கடன் வழங்கிய வங்கிகளும் சேர்ந்துள்ளன.
இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், வீடு வாங்கியோர், மாதாந்திர தவணை செலுத்துவதை நிறுத்தினர். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த வங்கி அதிகாரிகள், இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கையில் இறங்கியது.
இது குறித்து, இத்திட்டத்தில் வீடு வாங்கியோர் கூறியதாவது;
வீட்டுக்கடன் தவணை செலுத்தாத நிலையில், வங்கிகள் கடன் வசூல் தீர்ப்பாயத்தில், எங்கள் மீது வழக்கு தொடுத்தன.
இதில் ஆஜராகி, எங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்தோம். ஆனால், வங்கிகளுக்கு சாதகமான உத்தரவு, தீர்ப்பாயத்தில் வந்துள்ளது.
இதனால், கடனாக பெற்ற தொகையை, வட்டியுடன் உடனடியாக செலுத்த வேண்டும் என்றும், மீறினால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், கடன் வசூல் தீர்ப்பாய பெயரில், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீசால், பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம்.
ஒரு பெரும் விபத்தால் பாதிக்கப்பட்டோரிடம், கடனை வசூலிப்பதில், வங்கிகள் நடந்துக்கொள்ளும் முறை இது தானா என, கேள்வி எழுகிறது.
அரசு அல்லது நீதிமன்றம் தலையிட்டு, எங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.