தமிழகத்தில், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில், ஒற்றைச் சாளர முறையில், வீட்டுக்கடன் வழங்கும் திட்டம், விரைவில் அறிமுகமாக உள்ளது.
தமிழகத்தில், ஏழை எளிய மக்கள், மிக குறைந்த வட்டியில், வீட்டுக்கடன் பெறவும், நியாயமான விலையில் வீட்டு மனைகள் பெறவும், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் துவக்கப்பட்டன.
தற்போது, 733 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 688 சங்கங்கள், கூட்டுறவு வீட்டு வசதி இணையத்துடன் இணைந்துள்ளன.
இந்தச் சங்கங்களில், வீட்டு கடன் பெற்றோர், கடனை முறையாக செலுத்தாததால் பெரும்பாலான சங்கங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, அபராத வட்டி தள்ளுபடி திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. நிதி நிர்வாக குளறுபடிகள் சீரான சங்கங்கள், புதிய கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், பல்வேறு கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் முன்னேறி வருகின்றன.
இச்சங்கங்களில், வீட்டுக்கடன் வழங்கும் முறையையும், வரவு, செலவு கணக்கு நடைமுறைகளையும், ஆன்லைன் முறைக்கு மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இதையடுத்து, பல்வேறு புதிய திட்டங்கள் விரைவில், அறிவிக்கப்பட உள்ளன.
இதுகுறித்து, கூட்டுறவு வீட்டுவசதித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது;
கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில், ஒற்றைச் சாளர முறையில், புதிய கடன்கள் வழங்கவும், கடன் வசூல் பணிகளை கண்காணிக்கவும், புதிய திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டம், விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால், தனியார் வங்கிகள் போல, கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில், உறுப்பினர்கள் எளிதாக கடன் பெறலாம்.
மேலும், இச்சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள, பயன்படுத்தப்படாத நிலங்களில், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் கட்டவும் அனுமதி வழங்கப்பட உள்ளது.
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், நகராட்சிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், குறைந்த வருவாய் பிரிவினருக்கான புதிய மனைப்பிரிவுகளும் உருவாக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.