தமிழக அரசின் ஆன்லைன் மணல் விற்பனை திட்டத்தில், முறையாக பதிவு செய்து கட்டணம் செலுத்தினாலும், ஒரு லோடு மணல் பெற, 38 நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளதாக புகார் எழுந்து உள்ளது.
தமிழகத்தில், தனியார் தலையீடு இன்றி, பொது மக்களுக்கு நியாயமான விலையில், மணல் கிடைக்கச் செய்யவும், மணல் விற்பனையில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும், ஆன்லைன் வாயிலாக, மணல் விற்கும் திட்டத்தை அரசு அறிவித்தது.
இதன்படி, லாரி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள், ஆன்லைன் முறையில் இணையதளம் அல்லது, மொபைல் ஆப் வாயிலாக, கட்டணம் செலுத்தி, முன்பதிவு செய்யலாம்.
முன்பதிவு நிலவரம் அறிந்து, மணல் வழங்கப்படும் இடத்துக்கு லாரிகள் சென்றால் போதும்.
இத்திட்டத்தில் மணல் வழங்க, 30 குவாரிகள் திறக்கப்படும் என, அரசு அறிவித்தது. ஆனால், 10 இடங்களில் மட்டுமே குவாரிகள் செயல்படுகின்றன.
இவையும், தொடர்ந்து இயங்குவதில்லை. அதனால், லாரி உரிமையாளர்களுக்கு மணல் கிடைப்பதில், கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, மணல் லாரி உரிமையாளர்கள் கூறியதாவது:
ஆன்லைன் திட்டத்தில் பதிவு செய்தவர்களுக்கு, மணல் கிடைப்பதில் ஏற்படும் தாமதம் தவிர்க்க, மணல் லாரிகள் எளிதில் சென்று வரும் இடங்களில், மணல் விற்பனை டெப்போக்களை, பொதுப் பணித்துறை துவக்கியது.
மொத்தம் எட்டு டெப்போக்கள் துவக்கப்பட்டு உள்ளன. இந்த டெப்போக்களிலும், மணல் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
தற்போதைய நில எட்டு வரப்படி, திருச்சி மாவட்டம், கோனலை பகுதியில் உள்ள டெப்போவில், மணல் பெற, 12 ஆயிரத்து, 852 லாரிகள் காத்திருக்கின்றன.
இன்றைய தேதியில் முன்பதிவு செய்தால், 38 நாட்களுக்கு பிறகே, மணல் கிடைக்கும் என, கூறப்படுகிறது.
கரூர் மாவட்டம், மாயனூர் டெப்போவில், 7,951 லாரிகள் காத்திருப்பதால், புதிதாக முன்பதிவு செய்வோருக்கு, 21 நாட்களுக்கு பிறகே மணல் வழங்கப்படும் என, பொதுப் பணித்துறை அறிவித்து உள்ளது.
எட்டு டெப்போக்களிலும் சேர்த்து, 51 ஆயிரம் லாரிகள், மணலுக்காக நாள் கணக்கில் காத்திருக்கின்றன.
போதிய எண்ணிக்கையில் புதிய குவாரிகள் திறக்கப்படாதது, இருக்கும் குவாரிகளிலும், ஆன்லைன் திட்டத்துக்கு குறைந்த அளவிலேயே மணல் வழங்குவது போன்றவையே, இப்பிரச்சனைக்கு காரணம்.
எனவே, அரசு நேரடியாக தலையிட்டு, இப்பிரச்சனையை தீர்க்க வேண்டும்; தவறினால், ஆன்லைன் மணல் விற்பனை திட்டம் முடங்கும் நிலைமை உருவாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.