சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில், நீலாங்கரையில் இருந்து மகாபலிபுரம் வரை, அனுமதியின்றி கட்டுமானங்கள் செய்யப்படுகிறதா என்பதை, மாநகராட்சியும், சி.எம்.டி.ஏ.,யும் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, சென்னை, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கரை கிராமத்தை, கடலோர ஒழுங்குமுறை மண்டலமாக வகைப்படுத்தக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நோட்டீஸ் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சென்னை மாநகராட்சியும், சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமமும் இணைந்து, நீலாங்கரையில் இருந்து உத்தண்டி வரை, ஆய்வு நடத்தியது. ஆய்வைத் தொடர்ந்து, 138 கட்டடங்களின் உரிமையாளர்களிடம், கட்டடத்துக்கான திட்ட அனுமதியை தாக்கல் செய்யும்படி, மாநகராட்சி தரப்பில், நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
உத்தண்டியில், நீச்சல் குளத்துடன் கூடிய பங்களா கட்டப்பட்டிருப்பதற்கு, நடிகர் கமல் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலருக்கும், நோட்டீஸ் அனுப்பப்பட்டது. உத்தண்டி மற்றும் சோழிங்கநல்லூரில், திட்ட அனுமதியின்றி, அனுமதி மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கும், நோட்டீஸ் அனுப்பி, ஆட்சேபனைகள் தாக்கல் செய்யவும் கோரப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஜி.கே. இளந்திரையன் அடங்கிய, டிவிஷன் பெஞ்ச், முன், விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட, வழக்கறிஞர் டி.மோகன் ஆஜராகி, கிழக்கு கடற்கரை சாலையில், நீலாங்கரை முதல் மாகபலிபுரம் வரை ஆய்வு மேற்கொண்டால், அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமானங்கள் குறித்த விபரங்கள் தெரிய வரும்.
இன்னும், அனுமதியின்றி கட்டுமானங்கள் நடக்கின்றன. மாநகராட்சியும், சி.எம்.டி.ஏ.,யும் அதை கவனிக்காமல் உள்ளன, என்றார்.
இதையடுத்து, டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
கிழக்கு கடற்கரை சாலையில், நீலாங்கரை முதல் மகாபலிபுரம் வரை, அனுமதியின்றி கட்டுமானங்கள் நடக்கிறதா என்பதை, சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். முதல் கட்டமாக, நீலாங்கரையில் இருந்து உத்தண்டி வரையில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பின், இதுகுறித்து, உரிய ஆவணங்கள், புகைப்படங்களுடன், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அறிக்கையில், கட்டுமானம் செய்த தனியார் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள்; அந்த கட்டடங்களுக்கு அனுமதி பெறப்பட்டதா; விதி மீறல் செய்யப்பட்டதா; மின்சாரம், தண்ணீர், கழிவுநீர் வடிகால் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதா என்பதை குறிப்பிட வேண்டும்.
நீதிமன்றம்
கடலோர ஒழுங்கு முறை மண்டல பகுதிகளில், அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொள்வதை தடுக்கும் வகையில், முறையான, கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமை, மாநகராட்சிக்கும், சி.எம்.டி.ஏ., க்கும் உள்ளது. சட்டப்படி, அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்வர் என நம்புகிறோம். கடலோர ஒழுங்குமுறை மண்டல வரையறைக்குள் கட்டுமானம் உள்ளது என்கிற முடிவுக்கு, நீதிமன்றம் வந்தால், அதை இடிக்க வேண்டும். இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டு உள்ளது. விசாரணையை, ஜூலை, 27க்கு தள்ளி வைத்துள்ளது.