சென்னை, ஜூன் 20, தமிழ்நாடு, அந்தமான் - நிகோபார் தீவுகளுக்கான, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில், புகார்களை பதிவு செய்வதற்கான கட்டணம், 5,600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
கட்டுமான திட்டங்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க, அனைத்து மாநிலங்களிலும், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில், 2017 ஜூனில், தற்காலிக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் துவக்கப்பட்டது.
இதில், பதிவு செய்த கட்டுமான திட்டங்களில், வீடு மனை வாங்குவோர், அதில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து புகார் அளிக்கலாம். இந்த புகார்களை, முறையாக பதிவு செய்ய, முதலில், 100 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
பின், இந்த கட்டணம், 500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. தற்போது, இதில், சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, ஆணையத்தின் தற்காலிக தலைவரும், வீட்டுவசதி துறை செயலருமான கிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு:
ரியல் எஸ்டேட் சட்டப் பிரிவு, 31, விதி, 37 ஆகியவற்றின் அடிப்படையில், எம் படிவத்தில் அளிக்கப்படும் புகார்களை பதிவு செய்ய, 1,000 ரூபாய் கட்டணமாகவும், 600 ரூபாய், தபால் செலவு கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.
மேலும், ஆணையிடும் அதிகாரி முன்னிலையில், விசாரணை மேற்கொள்ள, என் படிவத்தில் அளிக்கப்படும் புகார்களுக்கு 5,000 ரூபாய் கட்டணமாகவும், 600 ரூபாய் தபால் செலவு கட்டணமாகவும் செலுத்த வேண்டும். இந்த புதிய கட்டண விகிதங்கள், ஜூன், 13ல், அமலுக்கு வந்துள்ளன.
இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.