தரமற்ற, எம் - சாண்ட் விற்பவர்களுக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில், புதிய விதிகளை வகுக்க, பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில், ஆறு, ஓடைகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் இருந்து மணல் எடுப்பதை படிப்படியாக குறைக்க, அரசு திட்டமிட்டு உள்ளது.
இதற்கு மாற்றாக, வெளிநாடுகளில் இருந்து, மணல் இறக்குமதி செய்யப்பட உள்ளது.
ஆற்று மணலுக்கு மாற்றாக, எம் - சாண்ட் என்ற, செயற்கை மணலை பயன்படுத்தவும், விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தரமான எம் - சாண்ட் உற்பத்தி செய்து விற்பனை செய்ய, பொதுப்பணித் துறையால், அனுமதி வழங்கப்படுகிறது.
இதை நடைமுறைப்படுத்த, எம் - சாண்ட் கொள்கை வகுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, பொதுப் பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாநிலம் முழுவதும், தற்போது 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், எம் - சாண்ட் தயாரித்து, விற்பனை செய்கின்றன.
இதில், 24 நிறுவனங்கள் மட்டுமே, பொதுப் பணித் துறையின் அனுமதி பெற்று, தரமான எம் - சாண்ட் தயாரிக்கின்றன.
கட்டடங்களின் பாதுகாப்பு கருதி, தரமான எம் - சாண்ட் விற்பனையை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.
இதற்காக, பொதுப் பணித்துறை கட்டடங்கள் பிரிவு சார்பில், எம் - சாண்ட் கொள்கை வகுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தரமற்ற எம் - சாண்ட் விற்பனை செய்பவர்களுக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட உள்ளது. விரைவில், கொள்கை இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.