தமிழகத்தில், தற்போதைய நிலவரப்படி, சூரியசக்தி மின் நிலையங்களின் மொத்த உற்பத்தி திறன், 2,000 மெகாவாட்டை தாண்டியுள்ளது. தமிழகத்தில், ஆண்டுக்கு, 300 நாட்களுக்கு மேல், சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தியாகும் வாய்ப்பு உள்ளது.
இருப்பினும், அந்த மின் நிலையங்கள் அமைக்கும் முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்த, தமிழக அரசு, முழு வீச்சில் ஆர்வம் காட்டவில்லை.
மானியம்
மத்தியில், 2014ல், பிரதமர் மோடி தலைமையிலான, நாடு முழுவதும், சுற்றுச்சூழலை பாதிக்காத, சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைப்பதை ஊக்கப்படுத்தி வருகிறது.
இதற்காக, சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைப்பவர்களுக்கு, மானியம் வழங்கப்படுகிறது.
இதையடுத்து, தமிழகத்தில் சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைக்கும் நிறுவனங்களிடம் இருந்து, மின் கொள்முதல் செய்வதற்கான பணிகளை, மின் வாரியம் துரிதப்படுத்தியது.
தற்போது, தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள, சூரிய சக்தி மின் நிலையங்களின் உற்பத்தித் திறன், 2,000 மெகா வாட்டை தாண்டி, 2,122 வாட் என்றளவில் உள்ளது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஒரு யூனிட் சூரிய சக்தி மின்சாரத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள விலை; மின் வாரியம், டெண்டரில் நிர்ணயம் செய்து உள்ள விலை என, பல விலைகளில், தனியாரிடம் இருந்து, சூரிய சக்தி மின்சாரம் வாங்கப்படுகிறது.
7,100 பேர்
இதுவரை, 184 நிறுவனங்கள், 2,022 மெகா வாட் உற்பத்தித் திறனில், சூரிய சக்தி மின் நிலையங்களையும், 207 நிறுவனங்கள், 100 மெகா வாட்டிற்கு, மேற்கூரை சூரிய சக்தி மின் நிலையங்களையும் அமைத்துள்ளன.
இவற்றில் இருந்து, தினமும், 1,500 மெகா வாட்டிற்கு மேல் மின்சாரம் கிடைக்கிறது.
இதுதவிர, வீடு, கல்வி நிறுவனங்கள் என, 7,100 பேர், தங்களின் சொந்த பயன்பாட்டிற்காக, 28 மெகா வாட்டிற்கு, மேற்கூறை சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைத்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.