ஜி.எஸ்டி., ரியல் எஸ்டேட் சட்டம் உள்ளிட்ட காரணங்களால், சுணக்கம் கண்டிருந்த கட்டுமான பணிகள் வரும் மாதங்களில் சூடுபிடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சிமென்ட்டுக்கான தேவை அதிகரிக்கும் என்ற போதிலும், உற்பத்திச் செலவு உயர்வு காரணமாக, தயாரிப்பு நிறுவனங்களின் லாப வரம்பு குறையும் என, தெரிகிறது. 2017-18ம் நிதியாண்டில், பெரும்பாலும், சிமென்ட்டுக்கான தேவை குறைவாகவே இருந்தது.
ஏப்.,-செப்., வரையிலான, முதல் காலாண்டில், ஜி.எஸ்.டி., அறிமுகம், மணல் பிரச்னை, ஒருசில மாநிலங்களில் தொழிலாளர் பற்றாக்குறை, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய சட்டம் அமல் போன்றவற்றால், கட்டுமானப் பணிகள் மந்தமாக இருந்தன.
இதனால், சிமென்ட் தேவையும் குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக, மே மாதத்தில், சிமெண்ட் விலை சரிவடைந்தது. இந்நிலையில், அக்டோபரில், வடக்கு பிராந்தியத்தில், சுற்றுச்சூழல் மாசு காரணமாக, பெட்கோக் எனப்படும், உயர் வகை நிலக்கரி பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், சிமென்ட் நிறுவனங்களின் எரிபொருள் செலவு உயர்ந்ததை அடுத்து, அவற்றின் உற்பத்திச் செலவு அதிகரித்தது. இதனால், சிமென்ட் விலை உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், பண்டிகை காலம் முடிந்ததை அடுத்து, நவம்பரில், சிமென்ட்டுக்கான தேவை அதிகரித்தது. இதை பயன்படுத்தி, சிமென்ட் விலை மேலும் உயர்த்தப்பட்டது. இந்திய அளவில், சிமென்ட் விலை, 0.4 சதவீதம், அதாவது, மூட்டைக்கு, 25-50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் துவக்கம். சிமென்ட் நிறுவனங்களுக்கு நன்றாகவே இருந்தது. அனைத்து பிராந்தியங்களிலும், சிமென்ட் விலை அதிகரித்தது. ஆனால், ஜி.எஸ்.டி., அறிமுகத்திற்கு முந்தைய தாக்கம் காரணமாக, மே முதல், சிமென்ட் விலை சரிந்தது. எனினும், இந்தாண்டு துவக்கத்தில் நிலவிய, சிமென்ட் விலையுடன் ஒப்பிடும் போது, இன்னும், சிமென்ட் விலை மூட்டைக்கு, 16 ரூபாய் குறைவாகவே உள்ளது என, கோட்டக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்யுட்டிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வு, போக்குவரத்து செலவு அதிகரிப்பு போன்றவற்றால், சிமென்ட் விலை உயர்த்தப்பட்ட போதிலும், நிறுவனங்களின் லாப வரம்பு குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அம்புஜா சிமென்ட்ஸ், அல்ட்ரா டெக், ஏ.சி.சி., உள்ளிட்ட முன்னணி சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு விலை சரிவடைந்து உள்ளது.
நல்ல காலம் பிறக்குது
அடிப்படை கட்டமைப்பு துறை மற்றும் வீட்டுவசதி திட்டங்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. ஜி.எஸ.டி., தாக்கமும் குறைந்துள்ளது. இது போன்ற காரணங்களால், வரும் மாதங்களில், சிமென்ட் தேவை அதிகரிக்கும். நடப்பு நிதியாண்டில், சிமென்ட் தேவை, 1 சதவீதம் உயரும்.