தமிழகத்தில், சொத்து பரிமாற்ற பத்திரங்களை முழுமையாக, ‘ஆன்லைன்’ முறையில் பதிவு செய்யும் நடைமுறை, 578 சார்-பதிவாளர் அலுவலகங்களிலும், அமலுக்கு வந்துள்ளது.
வீடு, மனை விற்பனை தொடர்பாக, சொத்து பரிமாற்றங்களை பதிவு செய்வதற்காக, தமிழகத்தில், 578 சார்-பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில், காகித வடிவில் பத்திரப்பதிவு பணிகள் நடந்து வந்தன. இதில், பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டன. இக்குறைபாடுகளை தடுக்க, பத்திரப்பதிவு பணிகளை, ‘ஆன்லைன்’ முறைக்கு மாற்ற, ‘ஸ்டார்’ திட்டம் ஏற்படுத்தப்பட்டது.
சொத்து வாங்குவோர், கிரையப் பத்திர தயாரிப்பு நிலையில் இருந்தே, அனைத்து பணிகளையும், ஆன்லைன் முறையில், ஒவ்வொரு கட்டத்திலும் மேற்கொள்ளும் வகையில், இத்திட்டம் தயாரிக்கப்பட்டது. முதல் கட்டமாக, சோதனை முறையில், 154 சார்-பதிவாளர் அலுவலகங்களில், ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்களிலும், இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இது குறித்து, பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆரம்பத்தில் இருந்த குறைபாடுகள் சரி செய்யப்பட்டு, 578 சார்-பதிவாளர் அலுவலகங்களிலும், இது துவங்கப்பட்டுள்ளது.
இதன்படி தற்போது, 5,000 பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அனைத்து பத்திரங்களும், ஆன்லைன் முறையில் மட்டுமே பதிவு செய்யும் நடைமுறை, புத்தாண்டில் அமலுக்கு வரும்.