நடப்பாண்டில், 42 அடுக்குமாடி கட்டுமான திட்டங்களுக்கு மட்டுமே, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., ஒப்புதல் அளித்து உள்ளது.
படிப்படியாக குறைவு
நகரமைப்பு சட்டப்படி, சிறப்பு, அடுக்குமாடி, தொழிலக கட்டடங்கள் மற்றும் மனைப்பிரிவுகளுக்கு திட்ட அனுமதி வழங்கும் அதிகாரம், சி.எம்.டி.ஏ., வுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதில், சிறப்பு கட்டடங்கள், தொழிலக கட்டடங்கள், மனைப்பிரிவுகளுக்கு, சி.எம்.டி.ஏ., நேரடியாக ஒப்புதல் வழங்கும்.
அடுக்குமாடி திட்டங்களுக்கு, அரசின் ஒப்புதல் அடிப்படையில் திட்ட அனுமதி வழங்கப்படும். சராசரியாக, ஆண்டுக்கு, 400 சிறப்பு கட்டடங்கள், 90 அடுக்குமாடி கட்டடங்கள், 60 தொழிலக கட்டடங்கள், 80 மனைப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால், சில ஆண்டுகளாக திட்ட அனுமதி வழங்கும் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
புள்ளி விபரம்
இது குறித்து, சி.எம்.டி.ஏ., உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டில், 306 சிறப்பு கட்டடங்கள், 81 அடுக்குமாடி, தொழிலக கட்டடங்கள், 38 மனை பிரிவுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நடப்பாண்டில், 273 சிறப்பு கட்டடங்கள், 42 அடுக்குமாடி திட்டங்கள், 50 தொழிலக கட்டடங்கள், 55 மனைப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
திட்ட அனுமதி வழங்கும் பணிகள், நவ., முதல், ‘ஆன் லைன்’ முறைக்கு மாற்றப்பட்ட நிலையில், திட்ட அனுமதி தொடர்பான பணிகள் முடங்கி உள்ளன. ஆண்டின் கடைசி மாதங்களில் வழங்கப்பட்ட திட்ட அனுமதி தொடர்பான புள்ளி விபரங்கள் வரும்போது தான், இறுதி நிலவரம் தெரியவரும். மேலும், 2016ல், 312 திட்டங்களுக்கு மட்டுமே பணி நிறைவு சான்று வழங்கப்பட்டது. இது, 2017ல், 320ஆக அதிகரித்துள்ளது.