நாடு முழுவதும், ரியல் எஸ்டேட் திட்டங்களை, மாநில ஆணையங்களில் பதிவு செய்ய, ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, மாநில அரசுகளிடம் கருத்துகளையும் கேட்டுள்ளது.
வீடு, மனை விற்பனையில் முறைகேடுகளை தடுக்க, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தை, மத்திய அரசு, 2016ல் நிறைவேற்றியது. இதை அமல்படுத்துவதற்காக, தமிழகத்தில், ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையம், 2017 ஜூனில் துவக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவாகரங்கள் துறையில், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்ட கண்காணிப்பு குழு கூட்டம், சமீபத்தில் டில்லியில் நடந்தது.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, நகர்ப்புற விவகாரங்கள் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகம் உள்ளிட்ட, 19 மாநிலங்களில், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையங்கள், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை, ஜூன், 30 க்குள், முழு நேர ஆணையங்களாக மாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.
ரியல் எஸ்டேட் திட்டங்களை பதிவு செய்வதுடன், விரைவாக திட்ட அனுமதி வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில், மத்திய அரசின் சட்டத்தை அமலாக்க, மாநில அரசுகள் தயாரிக்கும் விதிமுறைகள், சட்டத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும். குறிப்பாக, கட்டண விகிதங்களில் அதிக வேறுபாடு இருக்கக் கூடாது.
தற்போது, ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு வகையாக கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டணங்களில் நிலவும் வேறுபாடுகளை களைந்து, நாடு முழுவதும், ஒரே மாதிரியான கட்டணத்தை அமல்படுத்த ஆலோசித்து வருகிறோம்.
இதற்காக, மாநில அரசுகளிடம் கருத்து கேட்டு, கடிதங்கள் அனுப்பப்ட்டுள்ளன. மேலும், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை நிதிக்கு, வருமான வரி சட்டத்தில் இருந்து விலக்கு அளிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.