நாட்டின், மிகப்பெரிய ரியல் எஸ்டெட் நிறுவனங்களில் ஒன்றான, ‘யூனிடெக்’ நிறுவனத்தின் நிர்வாகத்தை, மத்திய அரசு எடுத்துக் கொள்ளும் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
‘ரியல் எஸ்டேட் நிறுவனமான, ‘யூனிடெக்’ நிறுவனம், உறுதியளித்தபடி வீடுகளை ஒப்படைக்க வில்லை’ என, வீடு வாங்க முன்பணம் கொடுத்தவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
அதன்படி, அதன் உரிமையாளர், சஞ்சய் சந்திரா கைது செய்யப்பட்டார். ஜாமின் கோரி, அவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘ஜாமின் வழங்க வேண்டுமானால், வீடு வாங்க முன்பணம் கொடுத்தவர்களுக்கு கொடுப்பதற்காக, 750 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என,’ உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், யூனிடெக் நிறுவனத்தின் நிர்வாகத்தை எடுத்துக் கொள்ள அனுமதி கோரி, மத்திய அரசு சார்பில், தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
அதை விசாரித்த தீர்ப்பாயம், நிறுவனத்தின் 8 இயக்குனர்களை, ‘சஸ்பெண்ட்’ செய்தும், மத்திய அரசு புதிதாக, 10 இயக்குனர்களை நியமிக்க அனுமதி அளித்தும், சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.
தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து, யூனிடெக் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, தீர்ப்பாயத்தை நாடியதற்கு, உச்ச நீதிமன்ற அமர்வு அதிருப்தி தெரிவித்தது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், கே.கே. வேணுகோபால், “உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்தை நாடியது தவறு தான்,” என்றார். அதை ஏற்ற அமர்வு, தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதித்தது.