திருச்சியில், ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்ததாக எழுந்த புகாரில், வி.ஏ.ஓ., அலுவலக உதவியாளரும், அவரது மகனும் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி, கரூர் பைபாஸ் ரோட்டில், இரண்டேகால் ஏக்கர் காலி நிலம் உள்ளது. இந்த நிலம் தற்போது, திருச்சி வெள்ளிமுத்தம் கிராம உதவியாளர் பிச்சைமுத்து, 58, என்பவர் பெயரில் உள்ளது.
ஆனால் அந்த இடம், தென்னூரைச் சேர்ந்த வைத்தியநாதன், 65, என்பவருக்கு சொந்தமானது என்று தெரிகிறது.
தன் நிலம் போலி ஆவணங்கள் மூலம் வேறு நபர்களின் பெயருக்கு மாறியுள்ளது என்பதை அறிந்த வைத்தியநாதன், இது குறித்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பிச்சை முத்துவும், அவரது மகன்கள் மோகன்ராஜ், 33, உதயமூர்த்தி, 28, ஆகிய மூவரும், போலி ஆவணங்கள் தயாரித்து, அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து பிச்சைமுத்து, அவரது மகன் மோகன்ராஜ் அகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
தலைமறைவான உதய மூர்த்தியை போலீசார் தேடி வருகின்றனர். போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்யப்பட்டுள்ள நிலம். ஐந்து கோடி ரூபாய் மதிப்புடையது.