ஏழைகள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கான, பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில், மானியம் பெறுவதற்கான வீட்டு அளவை, 2,152 சதுர அடியாக, மத்திய அரசு உயர்த்தியதற்கு, கட்டுமான தொழில் நிறுவனங்களும், துறை சார் நிபுணர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். மத்திய அரசு அளித்துள்ள சலுகையால், வீடுகள் விற்பனை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நகர்ப்புறத்தை சேர்ந்த, குறைந்த வருவாய் உள்ளோர் வீடுகள் வாங்க, பி.எம்.ஏ.ஒய்., திட்டத்தில், வீட்டுக் கடனுக்கு செலுத்தும் வட்டிக்கு மானியம் அளிக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில், நடுத்தர வருவாய் பிரிவு-1 ன் கீழ், 120 சதுர மீட்டர் அல்லது, 1,291 சதுர அடி, ‘கார்பெட் ஏரியா’ உள்ள வீட்டுக்கான வட்டிக்கு மானியம் அளிக்கப்பட்டு வந்தது.
இந்த சலுகை, 160 சதுர மீட்டர் அல்லது, 1,722 சதுர அடி கார் பெட் ஏரியா உள்ள வீடுகள் வரை உயர்த்தப்படுவதாக, மத்திய அரசு அறிவித்து உள்ளது.
நடுத்தர வருவாய் பிரிவு-2ன் கீழ், 150 சதுர மீட்டர் அல்லது, 1,614 சதுர அடி, ‘கார்பெட் ஏரியா’ உள்ள வீட்டுக்கான வட்டிக்கு, மானியம் அளிக்கப்பட்டு வந்தது.
இந்த சலுகை, 200 சதுர மீட்டர் அல்லது. 2,152 சதுர அடி கார்யட் ஏரியா உள்ள வீடுகள் வரை உயர்த்தப்படுவதாக, மத்திய அரசு அறிவித்து உள்ளது.
கார்பெட் ஏரியா என்பது, வீட்டின் சுவர்கள் தவிர்த்த, நாம் புழங்கக் கூடிய தரைப்பகுதி. மத்திய அரசின் புதிய அறிவிப்பின்படி, மானியம் பெறக்கூடிய வீட்டின் கார்பெட் ஏரியா அளவு, 30 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால், பயனாளிகள், 2.35 லட்சம் ரூபாய் வரை மானியம் பெற முடியும்.
மத்திய அரசின் அறிவிப்பால், வீடுகள் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என, கட்டடத் தொழில் நிறுவனங்களும், இத்துறை சார்ந்த நிபுணர்களும் எதிர்பார்க்கின்றனர். ‘கிரெடாய்’ எனப்படும், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர், ஜக்ஸே ஷா, ‘டுவிட்டர்’ சமூக தளத்தில் வெளியிட்ட பதிவில், அரசின் புதிய அறிவிப்பு, நடுத்தர வருவாய் பிரிவில் வீடுகள் வாங்குவோருக்கு, பெரிய வரப்பிரசாதம்.
‘இதனால், இரண்டு மற்றும் பிரிவு நகரங்களில், வீடுகள் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்’ என, கூறியுள்ளார்.
‘நரெட்கோ’ எனப்படும். தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சில் தலைவர், ராஜிவ் தல்வார், “நாட்டில், நடுத்தர வகுப்பு பிரிவில் வீடுகள் வாங்குவோர் எண்ணிக்கையே அதிகம். “இந்த பிரிவினர் வீடுகள் வாங்குவதை எளிதாக்கும் வகையில், அரசின் புதிய அறிவிப்பு உள்ளது,” என்றார்.
‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசு உறுதி
டி.எச்.எப்.எல்., நிறுவன தலைமை நிர்வாகி, ஹார்´ல் மேத்தா கூறியதாவது:
பி.எம்.ஏ.ஓய்., திட்டத்தில், மானியம் வழங்கப்படும் வீடுகளுக்கான அளவை அதிகரித்து, மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவும், வீட்டுக்கடன் பெறுவதற்கான உச்ச வரம்பை அதிகரித்து, ரிசர்வ் வங்கி சமீபத்தில் பிறப்பித்த உத்தரவும், 2022க்குள், அனைவருக்கும் வீடு திட்டத்தை நிறைவேற்றுவதில், மத்திய அரசு உறுதியாக உள்ளதை காட்டுகிறது. இந்த உத்தரவுகளால், வீடுகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
குல்ஷான் ஹோம்ஸ் நிறுவன இயக்குனர், தீபக் கபூர் கூறுகையில், “அரசின் உத்தரவால், குறைந்த விலை வீடுகள் விற்பனை கணிசமாக அதிகரிக்கும். வீடுகள் கட்டும் பணிகள் பல மடங்கு அதிகரிக்கும்,” என்றார்.
எஸ்.ஜி.எஸ்டேட்ஸ் நிறுவன இயக்குனர், கவுரவ் குப்தா, “சிறு நகரங்களில் உள்ள நடுத்தர வருவாய் பிரிவினர், பெரிய வீடுகள் வாங்கும் வகையில், மத்திய அரசின் உத்தரவு அமைந்து உள்ளது,” என்றார்.