புதுடில்லி, மார்ச் 16- ரியல் எஸ்டேட் துறை, மந்த நிலையில் இருந்து விடுபட்டு, வளர்ச்சி பாதையில் நடைபோடத் துவங்கி உள்ளது, என, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு தெரிவித்து உள்ளார்.
அவர், கிரெடாய் அமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது:
ரியல் எஸ்டேட் துறை, சில காலமாக மந்த நிலையில் இருந்தது; தற்போது, சூடுபிடித்துள்ளது.
நிலத்தின் விலை
அதே சமயம், நிலத்தின் விலை, கவலை அளிக்கிறது, விஜயவாடா போன்ற நகரங்களில், நிலம் விலை, வாஷிங்டன், நியூயார்க் நகரங்களுக்கு இணையாக உள்ளது ஆச்சரியமளிக்கிறது.
நிலம் விலை உயர்வால், வீடு விலை அதிகரிக்கிறது. இடைத்தரகர்களிடம் தான், பெருவாரியான நிலம் உள்ளது; நிலம் விலை குறைய வேண்டும்.
தற்போது, 1.90 கோடி வீடுகளுக்கு பற்றாக்குறை உள்ளது. இது, 2030ல், 3.80 கோடியாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
மத்திய அரசு, அனைவருக்கும் நியாயமான விலைவில், வீடு கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது, வரும் மாதங்களில், ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
வீட்டுவசதி திட்டங்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் விரைவாக அனுமதி வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில், வளர்ச்சி திட்டங்களுக்கு தடையாக இருக்கக் கூடாது.
வேளாண் துறையை அடுத்து, ரியல் எஸ்டேட் துறை தான், அதிக வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.
விதிமுறைகள்
நம்பகத்தன்மையை இழைக்கும், கட்டுமான நிறுவனங்கள் வழக்குகளை சந்திக்க நேர்கிறது.
இதற்குத் தான், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டம், ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத் தன்மைக்கு வித்திட்டுள்ளது. எந்தவொரு துறைக்கும், கட்டுப்பாட்டு விதிமுறைகள் அவசியம். அதே சமயம், அவை, துறையின் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் மிகக் கடுமையாக இருக்கக் கூடாது.