புது வீடு கட்டுவோரின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு, செங்கல் சூளைகள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. இடம்: பள்ளிப்பட்டு அருகே.
ஆர்.கே.பேட்டை, பிப்.5- மழையின் பாதிப்பு இன்றி, தொடர்ச்சியாக வெயில் காய்வதால், செங்கல் தயாரிப்பிற்கு இது உகந்த காலமாக அமைகிறது.
தை மாதம் முதல், வைகாசி வரை செங்கல் தயாரிப்பு விறுவிறுப்பாக நடக்கும். தை மாதத்தில் வீடு கட்ட அடிக்கல் நாட்டியோர், தங்கு தடையின்றி கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளனர். புது வீடு கட்டுவதற்காக, தை மாதத்தில் அடிக்கல் நாட்டியோரின் செங்கல் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு சுற்றுப்பகுதியில் ஏராளமான செங்கல் சூளைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மழையின் பாதிப்பு இன்றி, தற்போது இதமான வெயில் நிலவுவதால், செங்கல் அச்சுவார்ப்பு மற்றும் சூளையில் அடுக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள், உற்சாகமாக செயல்பட்டு வருகின்றனர். வரும் வைகாசி மாதம் வரை மழைக்கு வாய்ப்பு குறைவு என்பதால், தொய்வு இன்றி செங்கல் தயாரிப்பு நடக்கும்.
புது வீடு கட்டுவதற்காக, கடந்த கார்த்திகை மற்றும் தை மாதத்தில் அடிக்கல் நாட்டியவர்கள், தற்போது கட்டட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் தேவையை கருத்தில் கொண்டு செங்கல் சூளைகள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. இதனால், கட்டுமான பணிகள் தங்கு தடையின்றி நடந்து வருகின்றன. மணல் கிடைப்பது தான் அரிதாக உள்ளது. அதற்கு மாற்றாக வந்துள்ள, ‘எம் சாண்ட்’ கொண்டு, மக்கள் நிலைமையை சமாளித்து வருகின்றனர்.