நிலத்தின் வகைப்பாடு விபரங்களை வெளியிடுவது போல, மண்ணின் சுமை தாங்கும் திறன் குறித்த தகவல்களையும். இணையதளத்தில் வெளியிடுவது குறித்து, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
சென்னை, போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில், 2014 ஜூன், 28ல், 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், 61 பேர் உயிரிழந்தனர்.
இடியும் கட்டடங்கள்
இந்த சம்பவத்துக்கு பின், அடுக்குமாடி கட்டடங்களின் அனமதிக்கு பரிந்துரைக்கு உயர் அதிகாரிகள் குழுவில், பொதுப்பணித்துறை மற்றும் கட்டட அமைப்பியல் வல்லுனர்களை சேர்க்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டது.
இருப்பினும், நெருக்கடியான இடங்களில், மண்ணின் சுமை தாங்கும் திறன் குறைபாடு காரணமாக, கட்டடங்கள் இடிந்து விழுந்து, விபத்துகள் ஏற்படுகின்றன.
சென்னை, திருச்சி, மதுரை, கோவை, வேலூர் போன்ற இடங்களில், சாதாரன கட்டடங்ளே இடிந்து விழும் விபத்துகளும் அதிகரித்துள்ளன.
அதனால், மண் பரிசோதனையை கட்டாயமாக்குவது குறித்து, அரசு பரிசீலிக்க துவங்கியுள்ளது.
இது குறித்து, கட்டட அமைப்பியல் வல்லுனர், பாலமுருகன் கூறியதாவது:
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம.டி.ஏ., மற்றும் நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., பகுதிகளில், நிலங்கள், சர்வே எண் வாரியாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த விபரங்கள், நவீன முறையில் தொகுக்கப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தான், கட்டட அனுமதி வழங்கப்படுகிறது.
அதே போல, மண் பரிசோதனை, மண்ணின் சுமை தாங்கும் திறன் குறித்த விபரங்களையும், மாநில அரசின், வேளாண் துறை, பொதுப்பணித் துறை மற்றும் மத்திய அரசின், புவியியல் ஆய்வு நிறுவனம் போன்றவை தனித்தனியாக வைத்துள்ளன.
அவற்றை, பகுதி வாரியாக தொகுத்து, நில பயன்பாட்டு தகவல் தொகுப்பில் சேர்க்கலாம். புதிதாக கட்டடம் கட்ட அனுமதி பெறுவோர், இதன் அடிப்படையில், கட்டட அமைப்பின் வரை படத்தை தீர்மானிக்கலாம். நிலத்தின் சுமை தாங்கும் திறனுக்கு மாறான, கட்டடங்களை ஆரம்ப நிலையிலேயே தடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய கட்டுப்பாடுகள்
இது குறித்து, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மண் பரிசோதனை, சுமை தாங்கும் திறன் அடிப்படையில், கட்டடங்களை தீர்மாணிக்கும் பரிந்துரைகளை, தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை பரிசீலித்து வருகிறது.
இது தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் விரைவில் பிறப்பிக்கப்படும்.