குறைந்த வருவாய் பிரிவினருக்கான வீடுகள் விலையை, 67 லட்சம் ரூபாயாக, வீட்டுவசதி வாரியம் நிர்ணயித்துள்ளது. இது, பொது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வீட்டு வசதி வாரியத்தின், சென்னை, பெசன்ட் நகர் கோட்டத்துக்கு உட்பட்ட, அடையாறு இந்திரா நகர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் பகுதிகளில், சுயநிதி திட்டத்தில் வீடுகள் கட்டப்படுகின்றன. விலை அதிகம் என்பதால், வீடுகளை வாங்க, மக்கள் முன்வரவில்லை. ஆனால், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்கள் வீடு வாங்க முதலீடு செய்து விட்டதாக கூறி, கட்டுமான பணிகளை வாரியம் துவக்கியது.
அறிவிப்பு
மக்கள் பதிவு செய்யாத வீடுகளுக்கான செலவு, வாரிய நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்டது. வாரிய நிதியை முதலீடாக செய்த வீடுகளை, குலுக்கல் முறையில் விற்க, வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது.
அடையாறு இந்திரா நகர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் பகுதிகளில், குறைந்த வருவாய் பிரிவில், 37 வீடுகளும், நடுத்தர வருவாய் பிரிவில், 47 வீடுகளும் குலுக்கல் முறையில் ஒதுக்கப்பட உள்ளன. இதில், குறைந்த வருவாய் பிரிவினருக்கான வீட்டின் விலை, 26 லட்சம் முதல், 67 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வீட்டின் விலை, 59 லட்சம் ரூபாய் முதல், 1.75 கோடி ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடுகளை வாங்க விரும்புவோர், ஜன., 4 முதல், 25க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, வாரியம் அறிவித்துள்ளது.
மக்கள் அதிர்ச்சி
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:
வாரிய மக்கள் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி, மாதம், 18 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுவோர், குறைந்த வருவாய் பிரிவினராக வரையறுக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு, 20 லட்சம் ரூபாய்க்கு மேல், வீட்டுக்கடன் கிடைக்காது. அப்படி இருக்கும் போது, எப்படி, 67 லட்சம் ரூபாய் விலையில் வீடு வாங்க முடியும். அதிகாரிகளுக்கு, இந்த அடிப்படை விஷயம் கூட தெரியவில்லை. இதே போன்று, மாத சம்பளம், 37 ஆயிரம் ரூபாய் வரை உள்ள நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வீடுகள் விலை, 1.75 கோடி ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தனியார் கட்டுமான நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் விலை நிர்ணயிக்கும் போக்கை, வாரியம் கைவிட வேண்டும். அடிப்படை நோக்கத்தை விட்டு விலகும் வாரியத்தின் செயல்பாடுகளை, தமிழக அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்.