'ஆன்லைன்' முறையை அமல்படுத்தியும் பயனில்லை: கட்டட அனுமதி வழங்குவதில் உள்ளாட்சிகள் தாமதம்
ஆன்லைன்' முறை அமலுக்கு வந்தும், கட்டுமான திட்ட அனுமதி விண்ணப்பங்கள் மீது முடிவு எடுப்பதில், உள்ளாட்சி அமைப்புகள் தாமதம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் பொது கட்டட விதிகள், 2019ல் அறிவிக்கப்பட்டன. இதன்படி, 10,000 சதுர அடி வரையிலான குடியிருப்பு திட்டங்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் ஒப்புதல் வழங்கலாம். இதுதொடர்பாக, பொதுமக்கள் விண்ணப்பங்களை நேரடியாக அளிக்கும் போது, குறிப்பிட்ட காலத்தில் அனுமதி கிடைப்பதில்லை என்ற புகார் எழுந்தது.
30 நாட்களில் முடிவு :
இதையடுத்து, அனைத்து உள்ளாட்சிகளிலும், ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள், வரைபடங்கள், கட்டணங்கள் பெறும் நடைமுறை அமலுக்கு வந்தது. இதில், விண்ணப்பம் மீது அதிகபட்சம், 30 நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும்.
பொறியாளர்கள் இல்லை :
ஆனால், பெரும்பாலான உள்ளாட்சிகளில் விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதில், அதிகாரிகள் மிகவும் தாமதம் செய்கின்றனர். இதனால், வீடு வாங்க முன்வரும் மக்கள், பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, கட்டுமான துறையினர் கூறியதாவது: உள்ளாட்சி பகுதிகளில், 3,500 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு, தானியங்கி முறையில் உடனடி ஒப்புதல் கிடைக்கிறது. அதற்கு மேல், 10,000 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு ஒப்புதல் கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில், கட்டட அனுமதி விண்ணப்பங்களை ஆய்வு செய்ய, தேவையான அளவுக்கு கட்டுமான துறைக்கான, சிவில் இன்ஜினியரிங் பொறியாளர்கள் இல்லை.
இதனால், ஆன்லைன் முறையில் தாக்கலாகும் விண்ணப்பங்களை சரி பார்க்க, வெளி நபர்கள் உதவியை நாடுகின்றனர். அவர்கள் உதவியுடன், தங்கள் கண்காணிப்பில், விண்ணப்பங்களை அதிகாரிகள் பரிசீலனை செய்கின்றனர். எனினும், பெரும்பாலான விண்ணப்பங்கள் மீது, 30 நாட்களுக்குள் முடிவு எடுப்பதில்லை.
இதில், 30 நாட்கள் கடந்த நிலையில், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரை அழைத்து, விண்ணப்பத்தை திரும்ப பெற்று புதிதாக தாக்கல் செய்ய அறிவுறுத்துகின்றனர். இதற்கு ஒப்புக்கொண்டு புதிதாக விண்ணப்பம் தாக்கல் செய்தால் மட்டுமே, அதிகாரிகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கின்றனர். இதனால், கட்டுமான திட்ட அனுமதிக்காக, மாத கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.
ஓரிரு நாளில் கிடைக்கும்
எங்கள் திட்டங்களில், முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்தவர்கள், வீடு வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. 'ஆன்லைன்' விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'ஆன்லைன் முறையில் தாக்கலாகும் விண்ணப்பங்கள் தொடர்பாக, கூடுதல் விபரங்கள் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. அனைத்து விபரங்கள், இணைப்பு ஆவணங்களை முறையாக அளித்தால், ஓரிரு நாட்களிலேயே ஒப்புதல் பெற முடியும்' என்றனர்.