மனை, கட்டட மேம்பாட்டாளர்கள் திட்ட பதிவு' இ-சேவை வசதி அறிமுகம்..! கட்டண விவரங்கள் இதோ..!
மனை மற்றும் கட்டட மேம்பாட்டாளர்கள் தங்கள் திட்டங்களை பதிவு செய்ய இ- சேவை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கென சிறப்பு உதவிக்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
இது குறித்து தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய செயலர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மனை மற்றும் கட்டட மேம்பாட்டாளர்கள் தங்கள் திட்டங்களை பதிவு செய்ய இ- சேவை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கென சிறப்பு உதவிக்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மனைப்பிரிவை பொறுத்தவரை 20 ஆயிரம் சதுர மீட்டர் அதாவது 2 எக்டேர் வரை ஒரு திட்டத்துக்கு ரூ.6 ஆயிரம், 2 எக்டேருக்கு அதிகமாக இருந்தால் ரூ.10 ஆயிரமும் செலுத்த வேண்டும்.
கட்டடங்களை பொறுத்தவரை 20 வீடுகள் வரை திட்டத்துக்கு ரூ.10 ஆயிரமும், 21 முதல் 50 வீடுகள் வரை ரூ.15 ஆயிரம், 51 முதல் 100 வீடுகள் வரை ரூ.10 ஆயிரம், 100 வீடுகளுக்கு மேல் உள்ள குடியிருப்பு என்றால் ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும்.
மேலும், வர்த்தக கட்டடங்களாக இருந்தால், தரைப்பகுதியில் 1000 சதுர மீட்டர் வரை திட்டம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம், 1001 முதல் 5 ஆயிரம் சதுர மீட்டர் என்றால் ரூ.15 ஆயிரம், 5001 முதல் 10 ஆயிரம் வரை ரூ.20 ஆயிரம், 10 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல் ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும்.
திட்டம் கலவையாக இருந்தால் அவற்றுக்குரிய கட்டணங்கள் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலமோ அல்லது தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்தின் அலுவலகத்தில் உள்ள விற்பனை முனைய இயந்திரம் மூலமோ செலுத்தலாம்.
ஏற்கெனவே ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்வதற்கு மட்டுமே இந்த வசதியானது பொருந்தும். விண்ணப்பங்களுடன் ஆவணங்களை நகல்களாக வழங்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.