தரை மற்றும் சுவர்களைக்காக்கும் பிபி கோட்டிங்
வழக்கமாக பிபி என்றால் இரத்த அழுத்தம் என்பதுதான் பெரும்பாலானவர்கள் தெரிந்து வைத்திருக்கும் சொல்லாக இருக்கிறது. கட்டுமானத் துறையில் இதற்கு அர்த்தமே வேறு. இந்தப் பிபி வேறு.இது பாலிஅஸ்பார்டிக் பாலியூரியா என்பதன் சுருக்கம். உண்மையில் இதை பிஏபி என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் பாலிஅஸ்பார்டிக் அலிபாடிக் பாலியூரியா (Polyaspartic aliphatic poly urea) என்பதுதான் இதன் முழுப் பெயர்.
வழக்கமாகப் பாலியூரியா வகைப் பூச்சுக்கள் ஒரு சில நொடிகளிலேயே இறுகிப் படிந்து விடும். இந்த வேகம் காரணமாகவே இவற்றைப் பயன்படுத்துவதற்குத் தனி வகைச் சாதனங்களைத் தேட வேண்டிய நிலை ஏற்படுகிறது.இக் குறையைத் தீர்ப்பதற்கு பிபி பெரிதும் பயன்படுகிறது. ஏனெனில் இது இருபது முதல்முப்பது நிமிடங்கள் கழிந்தபிறகே படியத் தொடங்கும். ஆகவே மெது
வாகப் பயன்படுத்தலாம். தனிப்பட்ட கருவிகள் தேவையில்லை.சாதாரண பிரஷ்கள் அல்லது ரோலர்களைக் கொண்டே பரப்பிவிடலாம். இவை அவ்வளவாகப் பிசுபிசுப்புத் தன்மை அற்றவை. ஏறக்குறைய தண்ணீரைப் போலவே பயன்படுத்தலாம்.
இத்தகைய தன்மை இருப்பதால் மிகக் குறைந்த அளவு பூச்சை மிக அதிகமான பரப்பிற்குப் பயன்படுத்த முடியும். ஆகவே அதிகப்படி சிக்கனம் உறுதி செய்யப்படுகிறது. ஒரே ஒரு கோட் அடித்தாலே போதும் என்கிற நிலை உருவாகிறது.
வேலையும் மிச்சம் . செலவும் மிச்சம். மேலும் புற ஊதாக் கதிர்களையும் எதிர்த்து நிற்கும் படலத்தை உருவாக்கும். கீறல்கள், சிராய்ப்புகள் ஏற்படாது. வெயில், மழை, பனி என எந்தப் பருவ காலத்திலும் பயன்படுத்தலாம். எல்லா வகைக் கான்கிரீட் பரப்புகளின் மேலும் பயன்படுத்தலாம்.அடித்து முடித்த அரை மணி நேரத்தில் தயாராகிவிடும். சிறு சிறு வெடிப்புகளையும் அடைத்துவிடும். பக்குவமடைந்த பின் காட்சிக்கு இனிய தோற்றத்தை அளிக்கும். புற ஊதாக் கதிர்களை எதிர்க்கும். கொப்புளங்கள் வெடிக்காது. கண்ணாடியைப் போன்ற பளபளப்பையும் தரும்.ஒரே தடவையில் வேலையை முடித்துவிட முடியும். அடிக்கடி கிடங்கிற்கும் வேலைத் தளத்திற்கும் அலைய வேண்டிய தேவையைக் குறைக்கும். எது நல்லது?
தரைகள் மற்றும் சுவர்களுக்கான கோட்டிங் முறைகளுள் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் உங்களுக்குக் குழப்பம் ஏற்படுகிறதா? கவலையே வேண்டாம். நீங்களே ஒப்பிட்டுப் பார்க்கலாம். எபாக்சி வகைக் கோட்டிங்கா? பாலிஅஸ்பார்டிக் வகையா?
எடுத்த எடுப்பிலேயே எபாக்சி வகையைக் காட்டிலும் பாலிஅஸ்பார்டிக்தான் சிறந்தது என்று சொல்லிவிடலாம். வழக்கமான எபாக்சி வகைப் பூச்சு எவ்வளவு கடினமான கீறலைத் தாங்கும் என்பதைக் கவனியுங்கள்.அதைப் போல் மூன்று மடங்கு அழுத்தமான கீறலைப் பாலிஅஸ்பார்டிக் வகைப் பூச்சு தாங்கும். பூசப்படும் போது நன்றாக ஒட்டிப் பரவும் தன்மையும் இதற்கு அதிகம். வெயில் அடிப்பதால் ஏற்படும் விரும்பத்தகாத விளைவுகளைக் குறைக்கும்.
யூரித்தேன் வகைப் பூச்சுக்களைப் பயன்படுத்தினால் அறவே ஈரம் இருக்கக் கூடாது. கொப்புளங்கள், வெடிப்புகள் தோன்றும். இது பார்வை அழகைக் கெடுக்கும். இந்தக் குறையும் பாலி அஸ்பார்டிக் வகையில் ஏற்படாது.
இரண்டு அல்லது அதற்கு அதிகமான பொருட்களைப் யயன்படுத்தி அடுத்தடுத்த கோட்அடிக்க வேண்டிய தேவையையும் தவிர்க்கும்.