ஆரா என்றால் என்ன என்பது? பற்றி ஓரளவு ரோபோ 2.0 பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். அல்லது குழம்பியும் போயிருக்கலாம். அந்தப் படம் வெளியானபோதே சர்ச்சைகளும் விமர்சனங்களும் ஏராளமாக வெளியானது. ஆனால், இப்போது சமீபத்தில் கேரளாவில் நடந்த ஒரு ஆர்க்கிடெக்ட் கருத்தரங்கில் சீனியர் ஆர்க்கிடெக்ட் மைத்ரேயன் மேனன் என்பவர் ‘ஒவ்வொரு கட்டடத்திற்கும், வீட்டிற்கும் ஆரா உண்டு. அந்த ஆராவில் இருந்து எதிர்ப்படும்
எதிர்மறை சக்தி தான் ஒரு கட்டடத்தை இடிந்து விழவும் செய்கிறது. அதில் வசிக்கும் மனிதர்களை அலைகழிக்கிறது ’எனக்கூறி கேரள கட்டுமானத்துறையில் பெரும் திகைப்பை உண்டாக்கி இருக்கிறார். அக்கருத்தை அவர் முன்வைப்பதற்கு காரணம் என்ன?.
கட்டுமானத்துறைக்கு இருக்கும்சோதனையில் என்னடா இது புது சோதனை? என்று ஆராவை விசாரிக்க கிளம்பினோம்.
முதலில் அந்த கேரள ஆர்க்கிடெக்ட் மைத்ரேயன் மேனனை போனில் தொடர்பு கொண்டோம் .
ஆரா மனிதர்களுக்கு மட்டுமன்றி கட்டடங்களுக்கும் இருக்கிறதா?
'நான் எதையுமே புதிதாக சொல்லவில்லை. ஏற்கெனவே இருப்பதுதான். ஒரு இடம் அல்லது வீடு அல்லது கட்டடத்திற்கு நுட்பமான அதிர்வுகள் உண்டு. அது தான் ஆரா. கோயில்கள் போன்ற திருத்தலங்களை கட்டுவதற்கு அப்படிப்பட்ட நல்ல அதிர்வுகள் இருக்கும் இடத்தில் தான் கட்டுவார்கள்".
அது சரி ஆரா எனர்ஜி என்பது என்ன?
'இயற்பியலைப் பொறுத்தவரையில் இது வரை ஈர்ப்பு விசை, மின்காந்த விசை, வலிமையற்ற இடைவினை, வலிமையான இடைவினை என்ற நான்கு ஆற்றல்கள் மட்டுமே கண்டறியப் பட்டுள்ளன. ஆனால் ‘ஆரா எனர்ஜி’ ஐந்தாவது ஆற்றல்;.
ஆரா (Aura) எனர்ஜி என்பது ஒரு உயிரினம் அல்லது பொருளிலிருந்து வெளிப்படும் ஒருவகையான ஆற்றலாகும். ஒவ்வொரு உயிரினத்திலிருந்தும் பொருளில் இருந்தும் ஒரு ஆற்றல் வெளிப்படுகிறது. அந்த உயிரினம் அல்லது பொருளை அந்த ஆற்றல் எப்போதும் சூழ்ந்திருக்கும்".
ஆரா எனர்ஜியைப் பார்க்க முடியுமா?
'ஆரா என்பது நமது சூட்சம உடலே ஆகும்.ஒரு நல்ல ஆரோக்கியமான உடலில் இருந்து வெளிப்படும் ஆரா 10 அடி முதல் 15 அடி வரை கூட விரிவடையும் தன்மை உடையது. இதை நமது சூட்சம பாதுகாப்பு வளையம் என்று கூட குறிப்பிடலாம். ஏன் என்றால் நமது ஆரா எவ்வளவு தூரம் விரிவடைகிறதோ அவ்வளவு தூரம் வரை உணர்வு நிலை பரவி இருக்கும்.நாம் கண்களை மூடிய நிலையில் கூட நமது ஆரா வட்டத்திற்குள் வரும் நபர்களை நாம் உணர முடியும். இவ்வுணர்வை கண் தெரியாத மனிதர்கள் முதல் அனைத்து ஜீவராசிகளும் உணர்கின்றன.
ஞானிகள், மகான்கள், ரிஷிகள் போன்றோர்களின் ஆரா 100 அடி முதல் 300 அடி வரை கூட விரிவடைந்து காணப்படும். குறிப்பாக கௌதம புத்தரின் ஆரா இரண்டு கிலோ மீட்டர் அளவுக்கு விரிவடைந்து காணப்பட்டதாக நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாம் தீய எண்ணங்கள் கொண்டிருந்தாலும் தீயவர்களோடு சேர்ந்து பழகும் போது நமது ஆரா வலுவிழக்கிறது. நமது எண்ணங்கள் எதிர்மறையாக இருக்கும் போதும், நமது சூல உடல் நோய்வாய்ப்படும் போதும் நமது ஆரா வலிமை குறைகிறது. கோவில்கள், சித்தர்கள், ஜீவசமாதிகள் போன்ற இடங்களில் அருகில் இருக்கும் போது நமது சூட்சம உடல் வலுப்பெறுகிறது. குழந்தைகள், சிறுவர், சிறுமியர்கள் அருகில் இருக்கும் போதும் நமது ஆரா வலுப்பெறுகிறது. மனதாலும், உடலாலும் இயற்கையை விட்டு விலகும் போதும்,
நோயாளிகளுடன் அதிக நேரம் செலவழிப்பதாலும், இறந்தவர்களின் அருகில் சென்றாலும், பிற உயிரினங்களிடம் மனதாலும், உடலாலும் துன்பம் விளைவிப்பதாலும், அதீத சினம், காமம், குரோதம் போன்றவற்றாலும் நமது ஆரா வலுவிழக்கிறது.
இந்த ஆற்றலை வெற்றுக்கண்களால் பார்க்க முடியாது. ஆனால், ஒரு சில திறன்களை வளர்த்துக் கொண்டால், அதனைக் காண முடியும் என கூறப் படுகிறது. கிர்லியன் போட்டோகிராபி முறையை பயன்படுத்தி ஆரா எனர்ஜியை பார்க்க முடியும் என கூறப்படுகிறது.இதுபற்றி தெரியாதவர்கள் என்னைப் போன்றோரை கிண்டல் செய்கிறார்கள்".
மனிதர்களுக்கு சரி. ஆனால் ஆரா எப்படி கட்டடத்தை பாதிக்கிறது? டெக்னிகல்லாக விளக்குங்களேன்..
'நமது பூமி ஈர்ப்பு விசை (Magnetic Power) கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த ஈர்ப்பு விசையின் அளவு சுமார் 7.83 (Hz) ஹெர்ட்ஸ் கொண்டதாகும். நாம் இந்த பூமியை இயற்கையாக இல்லாமல் செயற்கையாக சல்லடை போல் துளையிட்டு நீரை உறிஞ்சி எடுத்தும் பள்ளத்தாக்காக இருந்த ஏரி, குளங்களை மேடுபடுத்தி வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் அமைத்தும் அதன் கழிவுகள் பூமியில் ஊடுருவ செய்தும் பூமியின் இயல்பு தன்மையை மாற்றி அமைத்து விட்டோம்.
இதன் காரணமாக பூமியின் அடியில் நாம் பயன்படுத்தும் கழிவு நீர், தொழிற்சாலைகளின் இரசாயன கழிவுகள் போன்றவை நாம் துளையிட்டு நீரை எடுத்து இடைப்பட்ட பகுதிகளில் நிரம்பி வருகின்றன. இவ்வாறு பூமிக்கு அடியில் தேங்குகின்ற கழிவுகளும் இரசாயனங்களும் ஒன்று கலந்து வேதியல் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
இதன் காரணமாக நாம் வசிக்கும் இடங்களில் ஒரு விதமான கதிர் வீச்சுகளை ஏற்படுத்துகின்றன. எனவே, பூமியின் இயல்பு நிலையான 7.8 ஹெர்ட்ஸில் இருந்து 100 ஹெர்ட்ஸ்க்கும் மேல் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றது. அதிலும் குறிப்பாக இரண்டு அதிர்வலைகள் குறுக்கிடும் இடங்களில் 250 ஹெர்ட்ஸ்கும் மேல் வெளிப்படுத்துகிறது. இந்த பாதிப்பையே ஜியோபதிக் ஸ்ட்ரெஸ் (GEOPATHIC STRESS) என்பர். இதன் காரணமாக ஜியோபதிக் கதிர்வீச்சு உள்ள இடங்களில் வீடு மற்றும் அலுவலகம் கட்டி அங்கு வசிப்பவர்களுக்கு: உடல் நிலை, மன
நிலை மற்றும் பொருளாதார நிலை பாதிக்கப்படும்.
இதன் காரணமாக மன நிம்மதியின்மை, கணவன் மனைவி ஒற்றுமையின்மை, குழந்தையின்மை, குழந்தைகள் பெற்றோரின் சொல் கேளாமல் பிடிவாதம் செய்தல், குழந்தைகள் படிப்பில் மந்த நிலை,
தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமை ஆகுதல், திருமணத்தடை, அதிகப்படியான கடன் சுமை, அடிக்கடி விபத்துக்குள்ளாகுதல் மற்றும் மன அழுத்தம், கோபம்,
பயம், எல்லோர் மீதும் எரிந்துவிழுதல் போன்ற எண்ணற்ற பிரச்சனைகள் உருவாகக்கூடும். இதைச் சொன்னால் நான் மூட நம்பிக்கையை பரப்புகிறேன் என்று சொல்கிறார்கள்
வீடாக இருந்தால், அந்த வீட்டில் GEOPATHIC STRESS பாதிப்பு இருந்தால் ஆண்களுக்கு ஆண்மை இன்மை, பெண்களுக்கு மலட்டுத்தன்மை மற்றும் கர்ப்பப்பை சம்மந்தமான பிரச்சனை,
தூக்கமின்மை, சிறுநீரகம், இருதயம், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகள் செயல் இழப்பு, கேன்சர் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு அதிகப்படியான மருந்து செலவுகளுக்கு காரணமாகக் கூடும்.
தொழில் மந்த நிலை, வாடிக்கையாளர்கள் திருப்தியின்மை, கடன், வட்டி தொல்லைகளால் அங்குள்ளவர்களின் தொழிலில் ஈடுபாடு குறைவு, வேலை செய்பவர்களின் மனநிலை பாதிக்கப்படும். வேலை செய்ய விருப்பமின்மை, செய்த வேளைகளில் ஏற்பட்ட நிறைய தவறுகளால் அதிக நஷ்டங்களை ஏற்படுத்தி தொழில் முடங்கும் நிலை உருவாகும்".
நிலத்திற்கு ஓகே.. ஆனால் கட்டடங்களுக்கும் ஆரா உண்டு என்கிறீர்களே
'ஆரா என்பது ஆன்மா. ராசியான வீடு, ராசியான வண்டி சொல்வதில்லையா?. அது தான் ஆரா. இவ்வளவு ஏன் சாலைகளுக்கும் ஆரா உண்டு. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் எத்தனை கவனமாக இருந்தாலும் விபத்துகள் ஏற்படுகிறதே. அந்த இடத்தின் அமைப்பு தாண்டி அங்கே ஒரு தப்பான ஆரா இருக்கிறது என்பது தானே பொருள்.
அந்த இடத்தில் ஜியோபதிக் ஸ்ட்ரெஸ் லைன்கள் ஒன்றோடு ஒன்று குறுக்கிட்டால் அந்த இடத்தில் 300(Hz) ஹெர்ட்ஸ்கும் மேல் கதிர் வீச்சை ஏற்படுத்தும். அந்த இடத்தில் நாம் போகும் போது நமது மூளையை ஒரு சில வினாடிகள் செயல் இழக்கச் செய்கிறது. இதன் காரணமாக நாம் நம்மை அறியாமல் எதிரில் வாகனங்கள் அல்லது தடுப்பணைகள் மீது மோதி விபத்துகள் ஏற்பட காரணமாக அமைகின்றது.
தோட்டம் மற்றும் காடுகளில் கூட ஆரா உண்டு. பூங்கா மற்றும் காடுகளில் ஒரு சில மரங்கள், செடிகள் சரிவர பூக்காமல் காய்கள் காய்க்காமல், செழுமையில்லாமலும் இருப்பதை கவனித்திருப்போம். இதற்கு GEOPATHIC STRESS கதிர் வீச்சே முக்கிய காரணமாகும். இது போன்ற இரண்டு ஜியோபதிக் ஸ்ட்ரெஸ் உள்ள இடங்களில் மரங்கள் இருந்தால் அந்த இடத்தில் ஏற்படும் எதிர்மறை ஆற்றலிடம் வானில் உள்ள நேர்மறை ஆற்றலை ஈர்க்க செய்து அங்குள்ள மரத்தில் இடி, மின்னல் பாதிப்பை ஏற்படுத்தும்".
இதை இந்த நவீன உலகம் எப்படி ஏற்பது?
'அது என் கவலை இல்லை. ஏற்காதவர்களின் கவலை. இந்த அறிவியலுக்கு எதையுமே நிரூபிக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு காரணம் சொல்ல தெரியாது. இன்றும் கூட வீடு அல்லது அலுவலகத்தில் எலுமிச்சை அல்லது பூசணியை சுற்றி போடுவது ஆராவின் எதிர்மறை சக்தியைப் போக்கத்தான். உங்கள் தமிழ்நாட்டில் இதை அதிகம் செய்கிறார்கள்".
சரி பேச்சுக்கு வீட்டில் கட்டடத்தில் ஆராவின் கெட்ட எனர்ஜி இருப்பதாக வைத்து கொள்வோம். அதை எப்படி போக்குவது?
'சார். ஒரு கோயிலில் சிலையாக வைக்கப்படுவது கல் தான். ஆனால் எது எப்படி சாமியாகிறது?. மந்திரங்கள், ஹோமங்கள் மூலமாக அது நேர்மறை ஆரா சூழ்ந்த சிலையாகிறது. அது போலத்தான் வீடு என்பது வெறும் கல் அடுக்கு கட்டடம். நாம் செய்யும் தொடர் கணபதி ஹோமங்கள் தான் அந்த வீட்டின் ஆராவை, அங்கே சுற்றிக் கொண்டிருக்கும் ஆராவை நேர்மறை கொண்டதாக மாற்றுகிறது. வாடகைக்கு போனாலும்., சொந்த வீடு கட்டி போனாலும் கணபதி ஹோமம் செய்து விட்டு போவது நல்லது. ஆண்டுக்கு ஒரு முறை ஹோமம் செய்வது பலன் தரும்.
இது தவிர மாற்று மதத்துக்காரர்கள் கல் உப்பு கரைசலை தெளிப்பது, இனிமையான வாசம் உடைய மூலிகைகளை தெளிப்பது, பஞ்ச தீப எண்ணெயை ஏற்றுவது, மிளகாய், எலுமிச்சை, மருதாணி, கற்றாழை, படிகாரம் போன்றவற்றை வாசலில் ஒரு மூலையில் கட்டி வைப்பது போன்றவற்றை செய்வதன் மூலம் வீட்டில் நேர்மறை சக்திகள் பெருகும். அதே சமயம் அழுக்கு துணிகள், பயன்படுத்தாத பொருட்கள், காய்கறி கழிவுகள், உணவு மீதங்கள் போன்றவை வீட்டின் ஆராவின் எதிர்மறை சக்தியை பெருக்கும்" என்கிறார் மைத்ரேயன்.
ஆராவை பற்றி ஆரய்ச்சி செய்து அதற்கென தனி பிளாக்கை நடத்தி வரும் திரு.தேவ் கூறும்போது,'நம் எண்ணங்களின் உருவம் அல்லது எண்ண அலைகளின் பிரதிபலிப்பே ஆரா என நம்பப்படுகிறது.
உதாரணத்திற்கு நீங்கள் உங்கள் வாழ்வில் பார்க்கும் சில விஷயங்கள் இதற்கு முன் என்றோ பார்த்தது போல் சட்டென சில வினாடிகளுக்கு தோன்றும். இது ஆராவின் செயல்பாடே. உங்கள்
nagitive ஆரா positive ஆராவாக மாறும்பொழுது,உங்கள் எண்ண அலைகளை அது குழப்பமடைய வைக்கும் அதன் காரணமாகவே அந்த நிகழ்வு அவ்வப்போது உங்களுக்கு தோன்றுகிறது.
நீங்கள் ஒரு பாட்டை மனதிற்குள் பாடிகொண்டிருக்கும் போது சில நிமிடங்களில் உங்கள் அருகில் இருக்கும் உங்கள் நண்பன் நீங்கள் பாடிய அதே பாடலை அதே வரியை பாடி இருப்பார். இது நிச்சயம் எல்லோர் வாழ்விலும் நடந்திருக்கும். இதுவும் ஆராவின் காரணமாகத்தான் நிகழ்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது ஆரா 3 முதல் 4 அடிவரை இருக்கும். ஆரா இருக்கும் தொலைவு வரை உங்கள் அருகில் யாரவது இருந்தால் அவரது ஆராவும் உங்கள் ஆராவும் connect ஆகி உங்கள் எண்ணங்கள் அவருக்கும் அவரது எண்ணங்கள் உங்களுக்கும் மாறி மாறி பிரதிபலிக்கும். அது positive AURA மட்டுமே. சிலருக்கு யாரைவது கட்டிபிடித்து அழுதாலோ, அல்லது யாருடனாவது பேசினாலோ அவருக்கு கவலைகள் மறந்து நிம்மதியாக இருப்பார். அது அவரிடம் இருக்கும் nagative AURA.. மற்றவருடைய positive ஆராவால் அழிக்கப்படுகிறது. இதனால் கவலை மறக்கப்படுகிறது.
சொந்தத்தில் இறப்பு நேர்ந்தாலோ அல்லது தெரிந்தவர்களின் இறப்புக்கு சென்று வந்த சில நாட்களுக்கு கோவிலுக்கு செல்ல கூடாது என்று ஒரு கருத்து உண்டு. அதை ஆன்மீகமாக பார்பதைவிட அறிவியலாக பார்க்கலாம். ஏன்.? நீங்கள் இறந்தவர்களின் வீட்டிற்கு சென்றுவரும்போது அந்த nagative AURA (நெகடிவ் ஆரா) உங்கள் positive AURA உடன் கலந்து இருக்கும் அது வெளியேற சில நாட்கள் ஆகும்.
நீங்கள் உடனே கோவிலுக்கு சென்றால் (கோவிலில் positive AURA 10 மடங்கு அதிகம் இருக்கும்) அங்கிருக்கும் positive AURA உங்களை அதிகம் ஆட்கொள்ளும், அந்நேரம் உங்கள் nagative AURA அதை எதிர்த்தால் உயிருக்குகூட ஆபத்து நேரிடலாம்.
ஆரா பற்றி வள்ளுவர் ஒரு குறளில் சொல்லி இருக்கிறார்.
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்.
(அதிகாரம்: அவா அறுத்தல் குறள் எண்:370
ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை இங்கே ஆரா அவா என்கிறார்.
ஒருவர் நிறைவேறாத ஆசையுடன் இறந்தாலோ, வெறுப்பில் இறந்து போனாலோ ஆராக்கள் முழுவதும் அழியாது. நம் விட்டுப்போன எண்ணங்களின் பிரதிபலிப்பாக பூமியில் வாழ்ந்துகொண்டு இருக்கும். ஆனால் இது பலரால் நிருபிக்கப்பட்டாலும். சிலர் ஏற்றுகொள்ள தயாராக இல்லை. உலகப்புகழ் பெற்ற 'ஆரா’ ஆராய்ச்சியாளர் திரு. டாக்டர் ப்ராங் பாரனோஸ்கி என்பவர் கண்ணுக்கு தெரியாத கதிர்களை கண்டுபிடித்து அதற்கான பயிற்சி வகுப்பு ஒன்றை தனது ஊரில் நடத்தினார்".
ஆன்மா, ஆரா, மனிதர்கள் இதில் ஒரு சங்கிலித் தொடர் இருக்கிறது. ஆனால் கட்டடத்திற்கு?
'மனிதர்கள் வசிப்பிடம் தானே கட்டடம்?. இப்பொழுது நீங்கள் ஏதாவது அல்லது யாருடைய இறந்த வீட்டிற்கு சென்றால் உங்களுக்கே தெரியாமல் அந்த வீட்டில் நுழைந்ததும் ஒரு
வித அமைதி ஆட்கொள்ளும் திடீரென அழுகை வரும். ஏனென்றால் அங்கே இறந்தவரின் nagative AURA கலந்திருக்கும். அது மற்றவர்களின் positive AURA வை விட வலிமை மிக்கதாக இருக்கும். அது உங்கள் positive AURA வை சிறிது முடக்கி வைக்கும். இதன் காரணமாகவே திடீர் அழுகை, அதிர்ச்சி போன்றவை சட்டென இறந்தவரின் வீட்டிற்கு போனால்
ஏற்படும். இதுவரை உணரவில்லை என்றால் இனி உணர்ந்து பார்க்கவும்.
மனிதர்களிடமிருந்து எழும் ஆரா தான் கட்டடங்களை, வீடுகளை ஆக்கிரமிக்கின்றன. ஒரு மனிதனை நல்லவனாக்குவதும் கெட்டவனாக்குவது அவன் வாழ்விடம் சுற்றியுள்ள ஆராக்கள் தான்" என்கிறார் திரு.தேவ்.
இவர்கள் சொல்வது ஒரு புறமிருக்கட்டும். ஆராவை சினிமா மூலம் தமிழக மக்களுக்கு சொன்ன எழுத்தாளர் ஜெயமோகன் என்ன சொல்கிறார்?
'ஆரா அறிவியல் சார்ந்ததா? இல்லை. அது இன்று முதிரா அறிவியல் [doscience] என்றே கருதப்படுகிறது. ஆனால் நினைவில் கொள்க, மொத்த ஹோமியோபதி மருத்துவமும், மொத்த சித்த மருத்துவமும் நவீன அறிவியலால் முதிரா அறிவியலாகவே, நிரூபிக்கப்படாத நம்பிக்கைகளாகவே, கருதப்படுகிறது
ஆரா பற்றி மேல்நாட்டு அறிவியலிலும், மாற்று அறிவியலிலும் நிறைய பேசப்பட்டுள்ளது.
ஆரா என்பது உயிர்ப்பொருள் வெளியிடும் ஆற்றல் மண்டலம் என பொருள்கொள்ளப்பட்டது. இது ஓர் அறிவியல் ஊகம்தான், ஆனால் நிரூபிக்கப்படாதது" என்கிறார.;
எல்லாம் சரி..
ஆரா பற்றி ஜாம்பவான் எழுத்தாளர் காலம் சென்ற சுஜாதா பல ஆண்டுகளுக்கு முன்பே இப்படி குறிப்பிடுகிறார் 'ஆரா என்பது புனிதர்களின் புனிதத்தை அடிக்கோடிட்டு காட்ட சித்திரக்காரர்கள் வரைந்த கற்பனை. யாருக்கும் ஆரா கிடையாது. வேண்டுமென்றால் பின்வெளிச்சம் போட்டு தலையை புஸு,புஸு வாக்கிக் கொண்டு ஆரா காட்டலாம்" என நக்கலடிக்கிறார்.
ஆரோ சரியோ? தவறோ? இருக்கிறதோ இல்லையோ. நம் கவலையெல்லாம் வாஸ்து நிபுணர்கள் போல ஆரா நிபுணர்கள் முளைத்து பெருகி..கல்லா கட்டிவிடக் கூடாது..
ஆரா எக்ஸ்பர்ட் கமிங் ..உஷார்...
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087328
|