பொறியாளர்கள் சொல்கிறார்கள்
03 நவம்பர் 2020   05:35 PM



போரோதெர்ம் செங்கற்கள் அஸ்திவாரத்துக்கு பயன்படுத்தலாமா?
சமீபத்தில் பரவிவரும் புதிய வகைச் செங்கற்களை முதல்முறை பார்ப்பவர்களுக்குத் திகைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. அதாவது இந்தச் செங்கல்லுக்குள் வெற்றிடத்தைக் காணலாம். உட்புறம் வெற்றிடம் அமைந்த செங்கற்களா? இவற்றைப் பயன் படுத்தினால் கட்டடம் அப்படியே உட்கார்ந்து விடுமே என்று உங்களில் சிலர் பதறக் கூடும்.

அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை.
இந்த வகைச் செங்கற்களைப் பயன் படுத்துவதால் பலவித நன்மைகள் உண்டு. இவை வெப்பத்தை எளிதில் இழப்பதில்லை. இதன் காரணமாக கோடைக்காலத்தில் ஏ.சி. பயன்பாட்டைக் குறைக்க முடியும். இவற்றிலுள்ள துளைகள் ஒரு தனிப்பட்ட செயல்பாட்டை உருவாவக்குவதன் மூலம் கோடையில் வீட்டுக்குள் ஓரளவு வெதுவெதுப்பையும் கொடுக்கிறது. இவை களி மண், கரிப்பொடி, உமி, கிராணைட் குழம்பு ஆகியவற்றினால் உருவாகுவதால் ரசாயணம் கலந்தால் கூட ஒவ்வாமை ஏற்படுவதில்லை. புதிய மின் இணைப்புகள் மற்றும் நீர் இணைப்புகளை உருவாக்கும்போது இந்தக் கற்கள் உடையாது. செதுக்குவது சுலபமாக இருக்கிறது.

போரா என்றால் துவாரங்கள கொண்ட என்று பொருள்.Them என்பது வெப்பம் நிறைந்த என்று அர்த்தம் கொண்டது. இந்த வகை செங்கற்களை porotherm என்ற பெயரில் தயாரிக்கப்படுகிறது. என்றாலும், இன்னும் வேறு சில அமைப்புகளும் இதுபோன்ற உள்ளுக்குள் ஆங்காங்கே வெற்றிடம் கொண்ட செங்கற்களை உருவாக்கத் தொடங்கி விட்டன. 

முக்கியமான இன்னொரு நன்மை என்னவென்றால் நமது வழக்கமான செங்கல்லின் எடையில் 60 சதவிகிதம் எடை கொண்டதாக மட்டுமே இது இருக்கிறது. இதனால், இதைக் கையாள்வது எளிதாக இருப்பதுடன் கட்டுமானப் பணியையும் வேகப்படுத்த முடியும். பூஞ்சைக் காளான்கள் தாக்குதல் இந்தச் செங்கற்களைப் பயன்படுத்தும்போது இருப்பதில்லை. தவிர முன்கூட்டியே கட்டடத்துக்கு தேவைப்படும் பகுதிகளைத் தயார் செய்து வைத்துக் கொள்ள முடிகிறது. ஆனால், இந்த வகை போரோதெர்ம் செங்கற்களை அஸ்திவாரத்துக்குப் பயன்படுத்த முடியாது. அதேபோல் மிக அதிகமான தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களிலும் பயன்படுத்த முடியாது. காரணம் தண்ணீரின் எதிர்மறை அழுத்தத்தை இவற்றால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இவை எடை குறைவாக இருப்பதால் இதைக் கையாள்வது எளிது.

 

 

செயற்கை மணலில் சூப்பர் பிளாஸ்டிசைசர் கண்டிப்பாகக் கலக்க வேண்டும்.
அண்மைக் காலமாக செயற்கை மணல் காங்கிரீட் வார்க்க, கட்டுவேலைக்கு மற்றும் சுவர்களுக்குப் பூசப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. எனினும் செயற்கை மணலின் உருவம் உருண்டையாக இல்லாமல் கன சதுரமாக இருப்பதால் பிணைப்பில் ஒரு சிறிது குறைகிறது.
இது தொடர்பாக சிலருக்கு இருக்கும் கேள்விகள்:
1. கட்டுமானத்தில் எம்.சேண்ட் பயன்படுத்தலாமா?
2. அப்படிப் பயன்படுத்துபோது, பிணைப்பினை (Bond) உறுதிப்படுத்திட எவ்வகை வேதியியல் சேர்மானத்தை -எந்த அளவில் சேர்ப்பது?
3. இதனால் கான்கிரீட்டில் மற்றும் கட்டுவேலையில் உண்மையிலேயே ஏதாவது பயனுண்டா?
4. பூச்சு வேலை செய்ய எம்சேண்ட்டை பயன்படுத்தினால் என்ன முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடித்திட வேண்டும்?
இக்கேள்விகளுக்கு விடையாக தெரிவித்தவை
அச்சமின்றி எம் சேண்ட்டைப் பயன்படுத்தலாம்.
Superplasticiser- மிகு நெகிழி இளக்கி என்ற வேதியியல் சேர்மானத்தை - பிணைப்பிற்காகக் கலக்க வேண்டும். காங்கிரீட் என்றால் ஒரு மூட்டை சிமெண்ட்டிற்கு 300 மில்லி லிட்டர்; கட்டுவேலை என்றால் ஒரு மூட்டை சிமெண்டிற்கு 140 மில்லி லிட்டர்; சுவர்ப் பூச்சு வேலைக்கு 100-140 மில்லி லிட்டர் வரை கலக்க வேண்டும். இந்த மிகு நெகிழி இளக்கி- கலக்கும் தன்மையினை (Workability) மேம்படுத்துவதோடு பிணைப்புத் தன்மையினையும் தருகின்றது. இந்த வேதியியல் சேர்மானம் சேர்க்கப்படாத கட்டுவேலைக் கலவை மற்றும் பூச்சு வேலைக் கலவை - பிணைப்பின்றி - உறுதியாக ஒட்டாமல் உதிரியாகவே இருக்க வாய்ப்புண்டு. குறிப்பாக இக்கலவையினைத் தயாரித்த அரைமணிநேரத்திற்குள் பயன்படுத்திட வேண்டும். 
எனவே செயற்கை மணலைப் பயன்படுத்தும் போது கண்டிப்பாக பிணைப்பு ஏற்படுத்தும் வேதியியல் சேர்மானங்களைக் கலந்திட வேண்டும்.   

 

பூச்சு வேலைக்கு எந்த சிமெண்ட் நல்லது?
கட்டடங்களில் நூலிழை விரிசல்கள் - நுண் விரிசல்கள் சுருக்க விரிசல்கள் இயல்பாகவே ஏற்படுகின்றன. குறிப்பாக சுவர் பூச்சு வேலைகளில் இந்த நுண்விரிசல்கள் மிகுதியாக ஏற்படுவதைக் காணலாம். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
1. பயன்படுத்தும் சிமெண்டின் வகை ஓபிசி அல்லது பிபிசி,
2. நீராற்றுதலின் தரமும் நாட்களும் இதைத் தவிர சுவர்ப்பூச்சு வேலையை தேய்ப்பதும் விரிசல்கள் ஏற்படக் காரணம் என நிச்சயமாகச் சொல்லலாம்.
ஓபிசி 53 தரச் சிமெண்டில் நுண்மை மிகுதி : வெளியிடும்வெப்பமும் மிகுதி. எனவெ Shrinkage Cracks எனப்படும் சுருக்க விரிசல்கள் மேற்பரப்பில் ஏற்படுகின்றன. மாறாக பிபிசி சிமெண்டின் வெளியிடப்படும் வெப்பம் குறைவாகவே இருக்கும். எனவே ஏற்படும் சுருக்க விரிசல்கள் குறைவாகவே இருக்கும். இதற்கு ஏற்ப 10 முதல் 14 நாட்கள் வரை நீராற்றல் சுருக்கவிரிசல்களைப் பெரும்பாலும் குறைக்கலாம்.

எனவே பூச்சு வேலைக்கு பிபிசி சிமெண்ட், அழுத்தித் தேய்க்காமை, 10 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை நீராற்றுல் இருந்தால் சுருக்க விரிசல் ஏற்படாது.
மேலும் சுருக்க விரிசல்கள் பூச்சுப்பரப்பு தரைமீது ஏற்படாமலிருக்க Recron 3S எனப்படும் செயற்கையிழை நெகிழித் துண்டுகளைக் கலந்து பூச்சு வேலையை மேற்கொள்ளலாம். 

 

புதுமையான கண்ணாடி நார் இழை தரைத்தள அமைப்பு
ஒரு கட்டுமானத்திற்கு  தரைத்தளம் என்பது ஐந்தாவது சுவர் என்ற நிலையில் இனி வரும் காலங்களில் தரைத்தள அமைப்பில்  பைபர் கிளாஸ் தரைத்தள பதிகற்கள் சந்தைக்கு வர நிறைய வாய்ப்புகள் உண்டு. 
பைபர் கிளாஸ் டைல்ஸ்கள் உறுதித்தன்மை கொண்டதாக திகழ பாலியஸ்டர் ரெசின் உள்ளிட்ட பல்வேறு ரெசின் வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு அளவுகள் கொண்டதாகவும், நிறைய வடிவங்களிலும் ஃபைபர் கிளாஸ் பதிகற்கள் வடிவமைக்கப்படுகின்றன. பொதுவாக, தரைத்தள அமைப்பில் பயன்படும் மற்ற பதிகற்களை விடவும் இவ்வகை டைல்ஸ் வகைகளுக்கு சற்று குறைவான பட்ஜெட் என்ற அடிப்படையில் வருங்காலத்தில் அதற்கான தேவைகள் அதிகரிக்கலாம். 
டைல்ஸ் வகைகளுக்கான ப்ட்ஜெட் என்ற அடிப்படையில் செலவு குறைவாக ஆவதால் வீடுகளிலும், வர்த்தகக் கட்டமைப்புகளிலும் இவ்வகை பதிகற்கள் பயன்பாடு அதிகமாகும் வாய்ப்பு உள்ளது. மேலை நாடுகளில் உள்ள பெரிய அளவிலான அடுக்கு மாடிகள், ஓட்டல்கள், மருத்துவமனைகள், தீம் பார்க் போன்ற இடங்களில் நவீன தோற்றம் தரும்படி இவ்வகை பதிகற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தியா, சீனா உள்ளிட்ட பல ஆசியா நாடுகளிலும் தற்போது இதன் உற்பத்தி துவங்கி உள்ளதாக தெரிய வந்துள்ளது.மேலும் வடஅமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலை நாடுகளில் அவற்றின் உபயோகம் அதிகரித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. குறைவான பட்ஜெட் மற்றும் நீண்ட கால உழைப்பு ஆகிய காரணங்களால் குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பைபர் கிளாஸ் டைல்ஸ் பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன.
மேலும், சுலபமாக பயன்படுத்த ஏற்றதாகவும், சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு விளைவிக்காத தன்மை மற்றும் குறைந்த பட்ஜெட் ஆகியவற்றால் பைபர் கிளாஸ் டைல்ஸ் உபயோகம் எதிர்காலத்தில் அதிகமாகும் வாய்ப்புகள் உள்ளன.
ஏற்கனவே இவ்வகை பதிகற்கள் பல்வேறு மேலை நாடுகளில் சுவர்கள் (Wall Tiles) மற்றும்  உட்புற மேற்கூரை (Ceiling Tiles)  ஆகியவற்றின் பயன்பாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

 

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087301