இவர்கள் எதிர்காலம் இனி எப்படி? இளம் பொறியாளர்களின் நலனுக்கு இந்த அரசு செய்ய வேண்டியது என்ன?
16 அக்டோபர் 2020   11:38 AM



கடந்த நான்கு மாத காலமாக கொரானா தொற்று  தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருந்த  வர்த்தகம் மற்றும் தொழில்கள் பழைய நிலையை அடைய எத்தனை நாட்கள் ஆகும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

கட்டுமானத் துறையில் முதலீடு செய்துள்ள ரியல் எஸ்டேட் அதிபர்களின் நிலை  பெருந்துயரம்.  லட்சக்கணக்கான தொழிலாளர் களையும்   பல்லாயிரம் பொறியாளர்களையும் உள்ளடக்கியுள்ள கட்டுமானத் தொழிலின் எதிர்காலம் 'எங்கே செல்லும் இந்தப்பாதை" என்கிற ஒரு திரைப்படப் பாடலைத்தான் நினைவில் கொண்டு வருகிறது.


கட்டுமானத் தொழில் சார்ந்தோர் என சொன்னவுடன் நினைவுக்கு வருவது;  ரியல் எஸ்டேட் உரிமை யாளர்கள், பில்டர்கள், கொத்தனார், ஆசாரி, பெயிண்டர், மற்றும் கூலித்தொழிலாளிகள்.  புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், இவர்களை தவிர்த்து இத்தொழிலில் ஈடுபட்டு தங்களின் வாழ்வையே பணயமாக வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு பிரிவினரை யாரும் கண்டு கொள்வதில்லை. அவர்கள் தான் சுயதொழில் புரியும் இளம் கட்டடப் பொறியாளர்கள்.


பல்வேறு எதிர்கால  கனவுகளோடு கட்டடவியல்  துறையில்  மூன்றாண்டுகள்  டிப்ளமா அல்லது நான்காண்டுகள் இளங்கலை படிப்பை முடித்து அரசு வேலை கிடைக்காமல் அல்லது பிடிக்காமல்  சுய தொழிலில் இறங்கி, ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு  கட்டடங்கள் கட்டிக் கொண்டிருக்கும் இவர்களைப் பற்றிய உண்மை நிலையை வெளி உலகத்துக்கு உணர்த்துவது தான் இப்பதிவின்  நோக்கம். ஒவ்வொரு நகரத்திலும் இவர்களை பார்க்கமுடியும், சுலபமாக அடையாயாளம் காணமுடியும்.


ஒரு மோட்டார் சைக்கிளில் குறுக்கும் நெடுக்குமாக நகர சாலைகளில் வேகவேகமாக பயணித்துக் கொண்டிருப்பார்கள். மோட்டார் சைக்கிள்  பின்புறத்தில்  கட்டுமானப் பணிக்கான பொருட்கள் இருக்கும்  அல்லது பணியாளர்கள் இருப்பார்கள்.காலை ஏழு மணிக்கு வீட்டிலிருந்து  கிளம்பினால் இரவு எட்டு மணிக்கு மேல்தான் திரும்பி போவார்கள். நாள் முழுவதும் உடலும் மனமும் பரபரவென்று இயங்கிக்கொண்டிருக்கும். தொழிலில் முன்னேறி முதலிடத்தைப் பிடிக்க,ஊண் உறக்கம் தவிர்த்து, உழைத்துக்கொண்டிருப்பவர்கள்.கட்டடப்பொறியாளன் என்று பெருமைப்பட சொல்லி காலரைத் தூக்கிவிட்டுக் கொள்பவர்கள்.


இன்றையத் தினத்தில் இவர்கள் படும் துயரம் அளவிலடங்காதது. ஊரடங்கின் காரணமாக முடங்கிப் போனவர்கள் பட்டியலில் முக்கியமான பிரிவினர் இவர்கள். இவர்களைப் பற்றிய எந்த செய்தியையும் யாரும் பகிர்வதில்லை.


ஏனெனில் சுயகவுரவம் காரணமாக தங்களின் கஷ்ட, நஷ்டங்களை அடுத்தவருடன் பகிர்ந்து கொள்ள இவர்களே விரும்புவதில்லை. ஒப்பந்த அடிப்படையில் செய்யும் வேலைக்கான தொகையை  வீட்டு உரிமையாளரிடம்  கறாராக  வசூலிக்க தெரியாத இவர்கள் ,தங்களது தொழிலாளர்களிடம் தாராளமாகவே நடந்து கொள்வார்கள்.


இவர்களது  குறைகளையும் ஆதங்கங்களையும் வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டுமளவிற்கு, ஊடகங்கள்  இவர்களை கண்டு கொள்வதில்லை.தொழில் முனைவோர் என்கிற ஒரு கவர்ச்சி சொல்லால் ஈர்க்கப்பட்டு இத் தொழிலில் இவர்கள் அடையும் இன்னல்கள் ஏராளம். 


ஐந்தாண்டுகளுக்குள்ளாக  இத்தொழிலில் ஈடுபட்ட இளைய தலைமுறை  பொறியாளர்களை எப்படி கரைசேர்க்கப்போகிறோம்? 


பணமதிப்பிழப்பு,ஜி.எஸ்.டி போன்றவற்றால் முடங்கத்  தொடங்கிய தொழில் தற்போதைய கொரானா தாக்கத்தில் ஏற்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுமானப் பொருட்கள் விலையேற்றம், ஆகியவற்றால்  முற்றிலும் மூலையில் ஒடுங்கிவிட்டது. கொரானா பாதிப்புக்கு முன்னால் ஒப்பந்தம் போடப்பட்டு, துவங்கிய பணிகளை அதே விலைவிகிதத்தில் தற்போது முடித்துக்  தர முடியுமா? ஒப்பந்த தொகைக்குள்ளாகவே பணிகளை முடித்து தரவேண்டும் என  நெருக்கடி தரும் வாடிக்காளர்களை எப்படி எதிர்கொள்வது ? 


கொரானா பாதிப்புகள் சரியாகி இயல்பு நிலை எப்போது திரும்பும்? எதிர்காலம் எப்படி அமையும்?என்கிற வினாக்களுக்கு விடைகள் இல்லை.விழி பிதுங்கி நிற்கிறார்கள்.
விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் நடைபெறும் தற்கொலை சாவுகள்‌ வெளியே தெரிய வருகின்றது. தொழில் ந~;டத்தால் தற்கொலை முடிவை மேற்கொள்ளும் பொறியாளர்களும் உண்டு.ஆனால், அவை பரவலான பேசுபொருள் ஆவதில்லை. மூழ்க்கொண்டிருக்கும் கட்டுமானத்தொழிலையும் அதை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான பொறியாளர்களையும் காப்பாற்றி கரைசேர்க்க வேண்டிய கட்டாயக்  காலமிது.


எதிர்வரும் காலங்களில் எதிர்பாராத இடையூறுகள் எந்த ரூபத்திலும், எந்த நேரத்திலும் வரக்கூடும் என்பதை கொரானா உணர்த்தியுள்ளது.
இடையூறுகளிலிருந்து தற்காத்துக்கொள்ள, கட்டடப் பொறியாளர்கள் தங்களின் எதிர்கால பாதுகாப்பின் மீது அக்கறை செலுத்தவேண்டிய நேரமிது. என்ன செய்யலாம்? எந்த வகையில் தற்காத்துக்கொள்ளலாம்.?


கீழ்க்கண்ட அம்சங்களை பார்ப்போம்.
1. ஒப்பந்த  படிவத்தில் விலைவாசி உயர்வினால் ஏற்படும் வித்தியாச தொகையை உரிமையாளர் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும்.
2. கட்டுமான பொருட்களின் விலைவாசியை அரசாங்கம் கண்காணிக்கும் வகையில் விலைவாசி  ஒழுங்குமுறை  ஆணையம் அமைக்க வேண்டும்.
3. கட்டடப் பொறியாளர்களுக்கென தனி  கவுன்சில் அமைத்து  பொறியாளர்களை அதில் பதிவு செய்து , அங்கீகாரம் அளிக்க வேண்டும்.
4. பேரிடர் காலங்களில் போதிய  வருமானமின்றி துயருறும் பொறியாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்.
5. அரசுத்துறை ஒப்பந்தப்பணிகளில் 50 சதவீதம் சுய தொழில் புரியும் பொறியாளர்களுக்கு ஒதுக்கித்தர வேண்டும்.
6. புதியதாக தொழில் தொடங்கும் இளம் பொறியாளர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு GSTயிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
7. அறிமுகப் பொறியாளர்களுக்கு குறைந்த வட்டியில்  தொழில் கடன் வழங்கிட வேண்டும்.
கட்டடப் பொறியாளர்களும் இச்சமூகத்தில் ஓர் அங்கம் என்பதை கருத்தில் கொண்டு அரசாங்கம் ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
"YOUTH ARE NOT USEELESS ;BUT,
THEY ARE USED LESS.
THEY ARE NOT CARELESS ;BUT,
THEY ARE CARED LESS"

இது சுவாமி சின்மயானந்தா அவர்கள் இளைஞர்களை பற்றி தெரிவித்த கருத்துரை. இது சத்தியமான உண்மை.இளைஞர்களை கண்டு கொள்ளாத, அவர்களை முறையாக பயன் படுத்திக் கொள்ளாத சமூகம் முன்னேறியதாக வரலாறு கிடையாது.  இதனை உணர்ந்து அரசாங்கமும்,தொழில் சார்ந்த அமைப்புகளும், அனுபவப்பொறியாளர்களும், 

இளம் கட்டடப்பொறியாளர்களை அரவணைத்து வழிநடத்தவேண்டும்.

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087303