ஆட்டோவை வீடாக்கிய ஆர்க்கிடெக்ட் இளைஞர்
16 அக்டோபர் 2020   11:01 AM



பஜாஜ் நிறுவனத்தின் மூன்று சக்கர ஆட்டோவை தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் சொகுசு வீடுகளுக்கு இணையாக மாற்றியமைத்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமதி-வேலூரைச் சேர்ந்தவர் பி.ஆர். அருண் பிரபு. 23 வயதுடைய இந்த இளைஞர் தற்போது பெங்களுருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஆர்கிடெக்சர் நிறுவனமான பில்போர்டில் பணியாற்றி வருகின்றார்.

இவர்தான் பஜாஜ் நிறுவனத்தின் ஆர்இ மாடல் ஆட்டோ ரிக்ஷாவை பயன்படுத்தி சொகுசு வீடு ஒன்றை உருவாக்கியுள்ளார். பொதுவாக இதுபோன்று வாகனங்களை வீடாக மாற்றியமைக்கும் வழக்கம் மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படும் கலாச்சாரமாகும். அந்தவகையில் உலகம் முழுவதும் பரவியதுதான் மோட்டார் ஹோம்ஸ், கேம்பர் வேன், கேரவன்கள் மற்றும் ஆர்வி-க்கள். 
இத்தகைய வாகனத்தின் அடிப்படையில்தான் நாமக்கல்லைச் சேர்ந்த அருண் பிரபு பஜாஜ் ஆட்டோவை  மாற்றியமைத்துள்ளார். இவையனைத்தையும் வெறும் ஐந்து மாதங்கள் இடைவெளியில் 
ஒரு லட்சம் ரூபாய் செலவில் நிறைவேற்றி புதிய சாதனைப் படைத்துள்ளார். 


அருண் பிரபு பிற இளைஞர்களைப் போலவே வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என வெகு நாட்களாக நினைத்து வந்தார். ஆனால், அந்த எண்ணத்தை வெறும் நினைவுகளாகவே மனதில் பூட்டி வைக்காமல், அதனை நிஜ வாழ்க்கையிலும் நிறைவேற்றியுள்ளார். 


இதற்காக பயன்படுத்தப் பட்டதுதான் இந்த மூன்று சக்கர வாகன சொகுசு வீடு. இதுவரை, நான்கு சக்கர பெரிய ரக வாகனங்களில் மட்டுமே இத்தகைய உருமாற்றம் செய்யப்பட்டு வந்தநிலையில், புதிய முயற்சியாக மூன்று சக்கர வாகனத்தில் அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார். 


இதுபோன்று, மூன்று சக்கர வாகனத்தில் இத்தகைய மாற்றத்தை செய்வது அவ்வளவு சுலபமான ஒன்றல்ல. மூன்று சக்கர வாகனங்களின் நிலைத் தன்மை நான்கு சக்கர வாகனங்களைப் போன்று இருக்காது. ஆகையால், ஒவ்வொரு மாற்றத்தின்போதும் ஆட்டோ சாய்ந்துவிடாத வண்ணம் இருக்க அவர் பல கடினமான சூழலைச் சந்தித்துள்ளார். 


அவ்வாறு அதன் எடை அனைத்து பக்கத்திற்கும் சமமாக பரவும் வகையில் கூடுதல் பாகங்களைப் பொருத்தியுள்ளார். 


ஆட்டோவின் சரக்குகளை ஏற்றிச்செல்லும் பாடியை நீக்கிய அருண் பிரபு, அவற்றிற்கு பதிலாக உல்லாச விடுதியில் காணப்படுகின்ற பல்வேறு வசதிகளைக் கொண்ட அடுக்குகளை கட்டமைத்துள்ளார். அந்தவகையில், ஒரு நபர் ஓய்வெடுத்து தங்குவதற்கான சகல வசதிகளையும் இதில் புகுத்தியுள்ளார் அருண். முக்கியமாக மேல் தள படுக்கையறை (ஒன்று), குளியலறை, சமையலறை (அனைத்து பாத்திரங்களையும் வைத்துக்கொள்ளலாம்), பணியிடம், வாட்டர் ஹீட்டர் மற்றும் ஒரு கழிப்பறை கூட உள்ளது. இந்த கழிப்பறையானது படுக்கையறைக்கு கீழாகவே உள்ளது. அதாவது லிவிங் ரூம் என கூறப்படும் அதே பகுதியில் அது நிறுவப்பட்டுள்ளது. இத்துடன், வாகனத்தின் மேற்புறத்தில் 250 லிட்டர் நீர் தொட்டியும், 600று சோலார் பேனலும் பொருத்தப்பட்டுள்ளது. இது கேபினுக்குள் உள்ள பேட்டரியை சார்ஜ் செய்யவும், வாகனத்திற்கு தேவையான மின்சாரத்தை சூரிய ஒளி மூலம் தயாரித்துக்கொள்ளவும் உதவும். 
இத்துடன், சன்பாத் எனப்படும் சூரிய குளியல் செய்வதற்கு ஏதுவாக குடையுடன் கூடிய இருக்கை நிறுவப்பட்டுள்ளது. இது இயற்கையை ரசிக்கவும், காற்றோட்டமாக ஒய்வெடுக்கவும் பயன்படும். தொடர்ந்து, அலமாரிகள் மற்றும் துவைத்த துணிகளை உலர வைக்கின்ற வகையில் வெளிப்புறத்தில் நீட்டிக்கக்கூடிய துணி ஹேங்கர்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த ஆட்டோவில் (சொகுசு விடுதியில்) காணப்படுகின்றது. 


மேலும், மேற்கூரைக்கு செல்வதற்கு ஏதுவாக ஏணிகள் மற்றும் கதவுகள் உள்ளிட்டவை நிறுவப்பட்டுள்ளன. தொடர்ந்து, கேபினுக்குள் சமைப்பதற்காக ஏதுவாக இயற்கை எரிவாயு அடுப்பு வைக்கப்பட்டுள்ளது. இது விரும்பிய உணவை சமைத்து உண்ண உதவும். 


ஒட்டுமொத்தத்தில் இந்த பஜாஜ் ஆட்டோவில் சில சொகுசு விடுதிகளில்கூட காணப் படாத வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நீண்ட தூர பயணத்திற்கு செல்லும் வணிகர்கள் மற்றும் ஆராய்ச்சி பணிக்காக அடர் வனத்திற்கு செல்பவர் களுக்கு இந்த வாகனம் மிகுந்த பயனுள்ளதாக அமையும் .

வழக்கமான வீடுகளைப் போல படுக்கை அறை, சமையலறை, குளியலறை என் சகல சவுகரியங்களையும் ஒரே கேரவனுக்குள் கொண்டு வந்துள்ளார். வாட்டர் டேங்க், வாட்டர் ஹீட்டர், லைட், ஃபேன், மின்சார வசதிக்காக யு.பி.எஸ் பேட்டரி மற்றும் சோலார் பேனல், காற்றோட்டத்திற்காக ஜன்னல்கள், மாலை நேரங்களில் ரிலாக்ஸ் செய்வதற்காக மாடி என ஆச்சரியமூட்டுகிறது இந்த ஆட்டோ வீடு.

அருண் பிரபுவுடன் பேசினோம்.
“”நாமக்கல் பக்கம் உள்ள பரமத்தி வேலூர்தான் என் சொந்த ஊர். ஆனால் படித்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள மிடாஸ் கல்லூரியில்தான் பி.ஆர்க். படித்தேன். படிக்கும் போது அனைவருக்கும் பயனளிக்கும் வகையிலான ப்ராஜெக்ட்களை உருவாக்க வேண்டுமென பேராசிரியர்கள் எப்போதும் சொல்வார்கள். அதை கருத்தில் கொண்டு 2018 இல் பட்டப்படிப்பை முடித்ததும் பில் போர்ட்ஸ் என்ற ஸ்டார்ப் அப் நிறுவனத்தை தொடங்கினேன்.  இன்டீரியர் - எக்ஸ்டீரியர் டிசைனிங், கட்டிடங்களுக்கான வரைபடத்தை வரைந்து கொடுப்பதுதான் எங்கள் நிறுவனத்தின் வேலை.


புயல், வெள்ளம், மழை போன்ற இயற்கை சீற்றங்களால் பல பகுதிகளை சேர்ந்த மக்கள் வீடு, வாசல் என அவரவர் உடமைகளை இழந்து வருகின்றனர். அது சம்பந்தமான செய்திகளைப் பார்க்கும் போது அந்த இழப்பு எனக்கு மனதளவில் நெருடலை கொடுக்கும். அதற்கு தீர்வு கொடுக்கும் வகையில் என்னால் முடிந்ததை செய்ய வேண்டுமென முடிவு செய்தேன்.


இயற்கை சீற்றங்களால் பாதிப்பு அடையாதபடி நகரும் வடிவிலான வீடுகளை வடிவமைப்பது தான் என் திட்டம். அதற்காக குறைந்த செலவில் வீட்டு கட்டுவது சம்பந்தமான புத்தகங்களை நிறைய படித்தேன். அதன் தொடர்ச்சியாக இணையத்தில் தேடியபோது கண்ணில் பட்டதுதான் ஹவுஸ் ஆன் வீல்ஸ். வாகனத்திலேயே வீடு கட்டுவதைத் தான் இப்படி சொல்கிறார்கள். பயனற்று கிடக்கும் பொருட்களை பயன்படுத்தி, மறுசுழற்சி முறையில் நான்கு சக்கர வாகனங்களில் மேலை நாடுகளில் வீடு கட்டுகிறார்கள். 


அதே நேரம், குறைந்த விலையில் வீட்டை உருவாக்க வேண்டுமென நான் நினைத்ததால் மூன்று சக்கர வாகனமான ஆட்டோவை செகெண்ட் ஹேண்ட் விலைக்கு வாங்கி மாற்றங்களை செய்து வீட்டை வடிவமைத்தேன். பேருந்தின் கூரையை மறுசுழற்சி முறையில் வீட்டுக்கான கூரையாக பயன்படுத்தி கொண்டேன். பல கட்ட முயற்சிகளுக்கு பின்னர் ஒரு வீட்டுக்கு தேவையான அனைத்தையுமே சேர்த்து இந்த நடமாடும் வீட்டை வடிவமைத்தேன். இதை செய்து முடிக்க சுமார் ஒரு வருடம் தேவைப்பட்டது’’ என்று கூறும் அருண் பிரபு டிரையல் அண்ட் எரர் முறையில் பல கட்ட சோதனைகளுக்கு பிறகுதான் இதை செய்து முடித்துள்ளார். உள்கட்டமைப்பு வசதிகளை நீக்கிவிட்டால் அதிகபட்சமாக ஏழு நபர்கள் வரை தங்கிக்கொள்ளும் அளவு வசதியாக இருக்கிறது.  இவரது நகரும் வீடு.

தொடர்ந்து பேசும் அருண் பிரபு,””இயற்கை சீற்றங்களை நேரும் போது மக்களுக்கு மாற்று ஏற்பாடுகளாக கூட இந்த வீட்டை வழங்கலாம். 6 அடி, உயரம், 6 அடி அகலம், 6 அடி நீளம் என்ற அளவில் இதை வடிவமைத்துள்ளேன். இதற்காக மொத்தமாக ஒரு லட்ச ரூபாய் செலவு செய்துள்ளேன்.


இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிப்பது சிறு வியாபாரிகளும், அவர்களது தொழிலும்தான். நாடோடிகளாக ஊர் ஊராக பயணம் செய்து வரும் அந்த வியாபாரிகளுக்கு இந்த ஆட்டோ வீடு குடும்பத்தோடு அவர்கள் எப்போதுமே இருக்க பயனளிக்கும் என நம்புகிறேன்.


அவரது தேவைக்கு ஏற்ப இந்த வீட்டில் வடிவமைப்பில் மாற்றம் செய்து கொள்ளலாம். அதோடு இந்த நடமாடும் வீட்டை போல்ட்டுகளின் துணையோடு வாகனத்திலிருந்து பிரிக்கவும், வாகனத்தோடு சேர்க்கவும் முடியும். அந்தளவிற்கு எளிதான முறையில் இதை வடிவமைத்துள்ளேன்“”. என்கிறார் அருண் பிரபு..


சவாரிக்கு சவாரி. தங்குவதற்கு ஒரு சூப்பர் உறைவிடம். ஊர் ஊராகச் சுற்றி ஹோட்டலில் ரூம் போட்டு ஹோட்டல் சாப்பாடு சாப்பிடும் கஷ்டமெல்லாம் இந்த ஆட்டோ வீட்டில் இல்லை.
கடந்த சில மாதங்களாக சமூகவலைதளம் & ஊடகங்களில் மா
றி மாறி ஹிட் அடித்திருக்கிறது அருண்பிரபுவின் இந்த அசத்தலான ஆட்டோ ஆர்க்கிடெக்சர். 


கொரோனா சமூகப் பரவலைத் தடுக்க வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை மதிக்க வேண்டுமெனில்  வீதியில் உலா வர முடியாது. ஆனால், இனி வீதியிலும் உலா வரலாம், வீட்டிலேயே இருக்கலாம் என்றால் இந்த ஆட்டோ வீடு தான் பெஸ்ட் சாய்ஸ்.

 

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087333