வேலை இருக்கு வேலை செய்யத்தான் ஆள் இல்லை...வடமாநில தொழிலாளர்களின் இடத்தை நிரப்புவார்களா தமிழக கட்டுமான தொழிலாளர்கள்?
15 அக்டோபர் 2020   12:44 PM



வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல துவங்கியதால் தமிழகம் முழுக்க கட்டுமான பணிகளின் நிலைமை என்ன ஆகும்?


எந்த ஒரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் ஏறத்தாழ 90 முதல் 95 சதவீத பணிகளில் ஈடுபட்டு இருப்பார்கள். ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை தனியார் மற்றும் அரசு கட்டுமானப் பணிகளுக்கு ஏறத்தாழ 65 சதவீதம் வடமாநில தொழிலாளர்களை நம்பித்தான் பணிகள் நடைபெற்று வந்தது. குறிப்பாக 2010 க்கு பிறகு காலகட்டத்தில் ஜார்கண்ட் ,
உத்திரப்பிரதேசம, பீகார், மத்திய பிரதேசம், ஒடிசா போன்ற பிற்படுத்தப்பட்ட மாநிலங்களில் இருந்த வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த பல இளைஞர்கள் வருவாய் தேடி அதற்கான வேலை வாய்ப்பு தேடி பெங்களுர், கோவை, சென்னை போன்ற நகரங்களுக்கு புலம் பெயர்ந்து வந்தார்க
ள்.


சென்னை சென்ட்ரலில் மட்டும் ஒரு நாளைக்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட இந்திய தொழிலாளர்கள் வந்து இறங்கியதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவர்களுக்கென தனி ஏஜென்டுகள் ஆங்காங்கே உருவாகினர். 75% தொழிலாளர்களுக்கு 25% ஏஜெண்டுகளுக்கு என்ற விகிதத்தில் ஏஜென்டுகள் தொழிலாளர்களை தமிழக கட்டுமான பணிகளுக்கு புக்கிங் செய்தார்கள். 


இதுபோன்ற ஏஜென்டுகள் வாயிலாக இவர்களை வரவழைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


அதேசமயம் தமிழக கட்டுமான பணியாளர்கள் என்கிற மனித வள ஆதாரம் நாளடைவில் குறையத் துவங்கியது. பணியில் திறமையின்மை, பணியில் ஈடுபாடின்மை, அதிகப்படியான மெத்தனம் ,மது புகையிலை போன்ற பழக்கங்களுக்கு ஆளாகுதல் போன்ற பிரச்சினைகளால் தமிழக கட்டுமான தொழிலாளர்கள் பெரிய அளவில் கட்டுமானப் பணிகளில் ஆர்வம் காட்டாமல் இருந்தார்கள்.

ஒரு புறம் எத்தனை கடினமான வேலையாக இருந்தாலும் எவ்வளவு நீண்ட நேர வேலையாக இருந்தாலும் எத்தனை குறைவான சம்பளம் ஆக இருந்தாலும் பணி செய்வதற்கு வட இந்திய  தொழிலாளர்கள் தயாராக இருக்க, 


அதேசமயம் நம் கைக்கு அருகில் இருக்கக்கூடிய பணிகளை செய்யக் கூட தமிழக கட்டுமானத் தொழிலாளர்கள் செய்ய மறுக்க,  வெகு எளிதாக அந்த வெற்றிடத்தில் வட இந்திய தொழிலாளர்கள் புகுத்தப்பட்டார்கள்.  


மேலும் வட இந்திய மாநிலங்களில் தொழிலாளர் சட்டங்கள் அத்தனை சிறப்பானது அல்ல. அங்கே ஏழை தொழிலாளர்களின் உழைப்பை அதிகாரம் படைத்தவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் சுரண்டுகின்றனர்.

அசாம், பீகார் போன்ற கனிம வளம் நிறைந்த பகுதிகளை காண்ட்ராக்ட் எடுத்து பணி செய்யும் நபர்கள் தங்களது குவாரிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அதிகபட்சம் கொடுக்கும் ஊதியம் 150 முதல் 200 ரூபாய் தான்.


குறிப்பாக ரூர்கேலா போன்ற இடங்களில் மலைகளை வெட்டி இரும்பு தாது எடுக்கும் போது கட்டுக்கடங்காத இரும்பு தூசு கிளம்பும். இவற்றை தண்ணீர் பீச்சி அடித்தான் அடக்க வேண்டும் இதுபோல தண்ணீர் பீச்சி அடிக்கும் தொழிலாளர்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பணிபுரிவார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ஒரு நாளைக்கு 250 ரூபாய். அதில் 50 ரூபாய் பல்வேறு தரகர்களின் கைக்கு சென்று விடும். 


எனவே, ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 600 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை வழங்கக்கூடிய தமிழக நகரங்கள் அவர்களின் கண்களுக்கு துபாய், சிங்கப்பூரை போல தோற்றமளித்ததில் அதில் ஆச்சரியமில்லை.


இன்னும் கூட ஒரு வியத்தை நாம் குறிப்பிட முடியும். வெளிப்புறம் கண்ணாடி பேனல்கள் பொருத்தப்பட்ட ஒரு பன்னடுக்கு மாடிக் கட்டிடத்தை சுத்தம் செய்ய வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு 500 அல்லது 600 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு வெகு சாதாரணமான பாதுகாப்பு உபகரணங்களை பொருத்திக்கொண்டு இரண்டு வட இந்திய தொழிலாளர்கள் பணி புரிய ஆரம்பித்து விடுவார்கள்.

ஆனால் இதுவே தமிழகத் தொழிலாளர்கள் என்றால் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் அவர்கள் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் வேலை செய்தாலே பெரிய வியம் மேலும் அவர்கள் அதிக ரிஸ்க் உள்ள எந்த பணிகளையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 


அது மட்டுமல்ல தமிழகத்தில் சகிப்புத்தன்மை அதிகம். சட்டம் காவல் பாதுகாப்பு போன்றவை இங்கு சிறப்பாக செயல் படுகின்றன. 


மேலும் வேறு மாநில தொழிலாளர்களை சகோதரர்களைப் போல நடத்தும் போக்கு வேறு எந்த மாநிலத்தை விட நம் மாநிலத்தில் அதிகம். இதனால் இந்தியாவின் தென் மூலையில் படையெடுத்து வரும் வட இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமானது ஆச்சரியமில்லை.


ஆனால், இப்போது கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமான பணி இடங்களில்  பணிபுரிந்து வந்த புலம்பெயர்ந்த வட இந்திய கட்டுமான தொழிலாளர்கள், மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட இங்கே ஒரு மிகப்பெரிய காலி வெற்றிடம் துவங்கியிருக்கிறது.


 ஸ்மார்ட் சிட்டிகள் , அரசு ப்ராஜெக்ட்கள் சாலைகள், நெடுஞ்சாலைகள், பாலங்கள் அமைத்தல் போன்ற அரசு பணிகளிலும் சரி குடியிருப்பு கட்டிடங்கள் வணிக வளாகங்கள் கல்வி நிலைய கட்டடங்கள், தனியார் கட்டுமான திட்டங்கள் உள்ளூர் நகராட்சி பணிகள் போன்ற பணிகளிலும் சரி அதில் ஈடுபட்டு வந்த பெரும்பாலான வட இந்திய கட்டுமான தொழிலாளர்கள் தற்போது ஆப்சென்ட் ஆகி இருக்கிறார்கள்.


இது போல ஒரு  நோய்தொற்று பேரிடர் வரும்போது அந்தத் தொழிலாளர்களை தக்க வைத்து அவர்களுக்கு உரிய வீடு வசதி உணவு சம்பளம் ஆகியவற்றைக் கொடுத்து  எந்த ஒப்பந்த நிறுவனங்களும் முறையாக கவனித்துக் கொள்ளவில்லை. அது போலவே அவர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்கள் கூட அவர்களின் நலனில் அக்கறை கொள்ளவில்லை.


இதுபற்றி உரிய கவனம் எடுத்து மாற்று ஏற்பாடுகளைச் செய்யவில்லை. இதனால் வெறுத்துப்போன வட இந்திய தொழிலாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சுகளுடன் செல்லத் துவங்கி விட்டார்கள்.  பணம் இருப்பவர்கள் சொந்தமாக புதிய சைக்கிள் வாங்கி சைக்கிளில் மூலமாகவே நெடுஞ்சாலையில் பயணித்து இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக சைக்கிள் ஓட்டி தங்கள் சொந்த ஊரை சென்றடைந்தார்கள்.


 பணம் இல்லாதவர்கள் கூட கடனை வாங்கி சைக்கிள்கள் மூலமாக தங்கள் சொந்த ஊருக்கு சென்றார்கள்.மேலும் பலர் மாதக் கணக்கில் நடந்து தங்கள் ஊருக்குச் சென்றார்கள்.  
இது போன்ற கடும் பயணத்தை மேற்கொண்ட தொழிலாளர்கள் மறுபடியும் சென்னை, கோவை போன்ற நகரங்களுக்கு திரும்பவந்து பணி செய்யலாம் என்கிற எண்ணத்தையே நிச்சயம் கைவிட்டு இருப்பார்கள்.


அவர்களைப் பொறுத்தவரை நாம் நன்றி கெட்டவர்களாக மாறிவிட்டோம் . இப்போது ஜூலை 1 முதல் அரசின் உத்தரவுப்படி ஊரடங்கு தளர்த்தப் பட்டால் கட்டுமானப்பணிகள் முன்பைப் போல முழு வீச்சுடன் நடைபெறும் என சொல்லமுடியாது.  ஏனென்றால் மறுபடியும் வட இந்தியத் தொழிலாளர்கள் இங்கு வருவதற்கு உரிய சூழல் உருவாக குறைந்தது ஆறு மாத காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களில் பலர் மறுபடியும் இது போன்ற நகரங்களுக்கு வந்து பயணித்து தங்கி பணிபுரிகிற மனநிலையில் இல்லை என்பதைத்தான் அவர்கள் சார்ந்த ஏஜென்டுகள் டிராவல்ஸ் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.


 எனவே, இப்போது நம்மிடம் இருக்கும் ஒரே ஒரு மனிதவள ஆதாரம் தமிழக கட்டுமான தொழிலாளர்கள் தான். இந்த அசாதாரண சூழ்நிலையில் ஏதாவது அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நன்கு உழைத்து பணிபுரிந்து, மறுபடியும் தங்களது வேலை வாய்ப்பினைப் பெற முயற்சி செய்தால் அது தமிழக கட்டுமானத் துறைக்கும் நல்லது. அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்திற்கும் அது நல்லது.

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087273