பிக்கப்பா ? ட்ராப்பா? வீட்டு விற்பனை எப்படி?
14 அக்டோபர் 2020   12:57 PM



நாட்டில் எந்த பிரச்சனை நடந்தாலும் எந்த வரிவிதிப்பு கொள்கை நிறைவேற்றப்பட்டாலும் முதலில் பாதிப்படைவது நமது கட்டுமானத்துறைதான்.

ஆனால் கொரானா பெருந்தொற்று மருத்துவ துறையை தவிர எல்லா துறைகளையும் போட்டு அடித்து துவைத்து விட்டது, இயல்பு நிலைக்கு திரும்பவே பல மாதங்கள் ஆகும் என கணிக்கப்பட்டிருந்த சமயத்தில் சென்னையில் ஒரு பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்று தனது புதிய கட்டுமான திட்டம் ஒன்றை லாஞ்ச் செய்ய .., சுதாரித்துக்கொண்ட  தமிழக கட்டுமானத்துறை  பற்ற வைத்த பெட்ரோல் பரவும் தீயை போல.., பரபரவென வேகமாய் புது உத்வேகம் பரவி  உற்சாகமாய் களை கட்ட துவங்க.., கொரானாவாவது?  மண்ணாவது? என நினைக்க வைத்திருக்கிறது.


ஒரு தனியார் இதழ் நடத்திய கருத்தரங்கில் பேசிய நிபுணர்களின் கருத்துக்களும் கணிப்பும் இதையேதான் பிரதிபலிக்கிறது. 2020 பிற்பகுதி 2021 முற்பகுதியில்  தமிழக் கட்டுமானத்துறை எப்படி செல்லும்? தமிழக வீட்டு நுகர்வோர்கள்  என்ன மனநிலையில் இருக்கிறார்கள்? ரியல் எஸ்டேட் முதலீட்டின் வரவேற்பு எப்படி இருக்கும்? வேலை மற்றும் தொழில் வாய்ப்புகள் எப்படி இருக்கும்? என்றெல்லாம் கேட்கப்பட்டன.


கிரெடாய் (Creful) அமைப்பின் தமிழ்நாடு பிரிவின் தலைவர் எஸ்.ஸ்ரீதரன். இவர் நியூவ்ரி பிராபர்டீஸ் (Newry Properties Pvt Ltd)  நிறுவனத்தின் இயக்குநரும் கூட. அவர் பேசியதாவது...


"தற்போதைய நிலையில் வீடுகளின் விலையை உயர்த்தி விற்பனை செய்வது இயலாத காரியமாக இருக்கிறது. புதிய விதிமுறைகளின்படி, சென்னையில் 40 அடி சாலையில் ஒரு நிலம், கட்டடம் இருந்தால் அது தானாகவே வர்த்தக ஏரியாவாக மாறிவிடும். இதர நகரங்களில் 39 அடி சாலை இருந்தால்தான் அதில் கமர்ஷியல் பில்டிங் கட்டமுடியும். கட்டடப் பரப்புக்கான எஃப்.எஸ்.ஐ (Floor Space Index)  இரண்டு வரைக்கும் அனுமதிக்கப்படுவதால், குறைவான நிலத்தில் அதிக கட்டடப் பரப்பு கட்டமுடியும். இது நிச்சயம் லாபகரமாக அமையும். கார் பார்க்கிங் ஏரியாவைச் சரியாக வடிவமைத்தாலே கணிசமாக லாபம் பார்க்கமுடியும்.


அடுத்து, வாங்கக்கூடிய விலையிலுள்ள வீடுகளுக்கான அளவு சென்னை போன்ற பெருநகரங்களில் 40 சதுர மீட்டரிலிருந்து 60 சதுர மீட்டராகவும், சிறு நகரங்களில் 60 சதுர மீட்டரிலிருந்து 90 சதுர மீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் எஃப், எஸ்.ஐ 2 வரை கிடைப்பதுடன், பிரீமியம் எஃப், எஸ்.ஐ-க்குக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இந்த புராஜெட்டுக்கு வரிச் சலுகை பெறும் வசதியும் இருக்கிறது. அந்த வகையில், வாங்கக்கூடிய விலை மூலம் விலை குறைத்து விற்றாலும் பில்டர் லாபம் பார்க்க முடியும். 'வாங்கக்கூடிய விலையிலான வீடுகளை சென்னை போன்ற பெருநகரங்களில் ரூ.45 லட்சம் என்று இருப்பதை ரூ.75 லட்சமாக மாற்றுங்கள்" என மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறோம்.


பில்டர்கள், வீடு கம்ப்ளிஷன் சர்டிஃபிகேட் விஷயத்தில் மிகவும் உஷாராக  இருக்கவேண்டும். இது இப்போது தமிழகம் முழுக்க அமல்படுத்தப்பட்டு வருகிறது. இது கிடைக்கவில்லை என்றால், கட்டிய வீடுகளை வாங்கியவர்களிடம் ஒப்படைப்பது கஷ்;டம். இது இருந்தால் தான் மின்சார இணைப்பு, தண்ணீர் இணைப்பு கிடைக்கும். தற்போது முடிக்கப்பட்ட முடிக்கும் நிலையிலுள்ள வீடுகளுக்கு நல்ல தேவை இருக்கிறது." என்றார் 


இந்திய கட்டுநர்கள் சங்கத்தின் (BAI)  தேசியத் தலைவர் மு.மோகன், "வாங்கக்கூடிய விலையிலான வீடுகளுக்கு (Affordable Housing)  மத்திய அரசு வட்டி மானியம் ரூ.2.5 லட்சம் வழங்கிவருவது உண்மையிலேயே பாராட்டத்தக்கது. இந்தத் திட்டத்தின்கீழ் (பிரதம மந்திரி யோஜனா) ரூ.45 லட்சத்துக்குக் குறைவான விலையுள்ள வீட்டை வாங்கும்போது வட்டியில் சலுகை அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியா முழுக்க 50 லட்சம் பேர் வட்டி மானியம் பெற்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரைக்கும் வெறும் 10,000 பேர்தான் இதன் மூலம் பயனடைந்திருக்கிறார்கள்.

சுமார் 1 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கு வீட்டுக் கடனில் வட்டி மானியம் பெற தமிழக அரசு உதவவேண்டும். முடிவடைந்த பல பணிகளுக்கு ஆறு மாதங்களாகியும் பணம் வரவில்லை. எனவே, உள்கட்டமைப்புப் பணிகளுக்கு நிதி ஒதுக்கிவிட்டு, தமிழக அரசு டெண்டர் விட வேண்டும். ஒட்டுமொத்தமாக ஒரே நிறுவனத்துக்கு 1,000 கோடி ரூபாய்க்கு மேல் நீண்டகால ஒப்பந்தம் கொடுப்பதை நிறுத்தி, பல நிறுவனங்களுக்குப் பிரித்துத் தரவேண்டும்.


ரியல் எஸ்டேட்டைப் பொறுத்தவரை, நல்ல எதிர்காலம் இருக்கிறது. நம்மவர்கள் தங்கத்துக்கு அடுத்து ரியல் எஸ்டேட்டில் தான் அதிக முதலீடு செய்திருக்கிறார்கள். செய்யப் போகிறார்கள், நிலம், வீடு வாங்குபவர்களுக்கு இன்றைக்குப் பொற்காலம். இன்றைக்குப் பலப் பில்டர்கள் பணம் வேண்டும் என்பதற்காக விலையைக் குறைத்துத் தருவதற்குத் தயாராக இருக்கிறார்கள். கொரோனா பரவல் சரியாகிவிட்டால், விலை உயர்ந்துவிடும்.


இன்றைக்கு இந்தியா முழுக்க பத்திரப் பதிவுக் கட்டணம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொருவிதமாக இருக்கிறது. கர்நாடகாவில் இந்தக் கட்டணம் 3%  இருந்தது. கோவிட் காரணமாக 3,5 சதவிகிதமாகக் குறைத்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் 11%  அப்படியே இருக்கிறது. இதை 5 சதவிகிதமாகக் குறைந்தால், வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.


கட்டுமானப் பொருள்களுக்கான ஜி.எஸ்.டி-யை 18 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக, போராடிக் குறைத் திருக்கிறோம். இதை 3 சதவிகிதமாகக் குறைக்க மத்திய அரசைக் கேட்டிருக்கிறோம். 
இதைக் குறைக்க மாநில அரசும் தன் வருமானத்தை விட்டுக் கொடுத்து ஒத்துழைக்க வேண்டும்.


மற்ற மாநிலங்களில் இருப்பது போல் கட்டுமானத்துக்கு ஒரே இடத்தில் ஒப்புதல் அளிக்கும் சிங்கிள் விண்டோ சிஸ்டத்தை தமிழகத்திலும் கொண்டுவர வேண்டும். இதன் மூலம் அலைச்சல் குறையும். வேலை விரைவாக நிறைவேறும். வீடுகளின் விலையும் குறையும்| என்றார்.


ரியல் எஸ்டேட் ஆலோசகர் திரு. ராஜசேகர் அவர்களிடம் நாம் கொரனா காலகட்டத்தில்  இந்த நிதி ஆண்டின் இறுதியில்  வீட்டு விற்பனையில் நல்ல மாற்றங்கள் இருக்குமா? என்று கேட்ட போது,
வீட்டு வாடகை சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் குறைந்திருக்கிறது. ஏறத்தாழ ஒரு லட்சம் வீடுகளில் இருந்த  வெளி மாநிலத்தவர்கள்,  வெளி மாவட்டங்களைச்  சார்ந்தவர்கள் வீட்டைக் காலி செய்து கொண்டு போனதன் விளைவு இது. ஹாஸ்டல்கள்  ஈ  ஓட்டுகின்றன, மண்டபங்கள், ஹோட்டல்களில்  ஆளில்லை.. ஐடி வளாகங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. 

ஆபீஸ் வாடகை பாதியாக குறைந்து விட்டது. அப்படியும் பல நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்கள் தொலை தூரத்திற்கு மாற்றிக் கொண்டுவிட்டன. ஆனாலும்., இந்த காரணிகள் எல்லாம் வீட்டு விற்பனையை பாதிக்குமா? என்றால் கிடையாது. 


கட்டிய வீடுகளின் விற்பனையே கேள்விக்குள்ளாகி இருக்கும் போது, புதுப்புது திட்டங்கள் போடப்படுகின்றன என்றால் குடியிருப்புச் சந்தையின் நிலவரம் வேறுமாதிரியானது என்பது தான் பொருள். தன் முதல் வீட்டை வாங்க விரும்புவோரை எந்த சக்தியும் தடுக்க முடியாது. ஊரடங்கிற்கு பிந்தைய பத்திர பதிவு சுணக்கம் கூட கொரானோ நோய் தொற்று பரவலுக்காக சில பேரின் திட்டங்கள் தள்ளி போடப்பட்டிருகின்றனவே தவிர,  அவை முற்றிலுமாக  நிறுத்தப்பட போவதில்லை.


ஆனால் இந்த சமயத்திலாவது அரசும் பில்டர்களும்  சிமெண்ட்  நிறுவனங்களும் சேர்ந்து ஒரு சில நடவடிக்கைகளை எடுத்தால் வீட்டு விற்பனையை வேகமாக்க முடியும்.


கைட் லைன் தொடர்பான கொள்கைகளை மாற்றி அமைப்பது, பொறியாளர்களுக்கு தனி கவுன்சில் அமைப்பது, தமிழக கட்டுமானத்துறைக்கு தனித்துறை ஏற்படுத்துவது, சிமெண்ட், மணல் போன்றவற்றை  அத்தியாவசியப் பட்டியலில் இணைப்பது, ஒற்றைச் சாளர அனுமதி, விரைவான திட்ட அனுமதி போன்ற தடுமாற்றங்கள் எல்லாம் அரசால் விரைந்து சரி செய்யபட வேண்டியவை.


தன்னிச்சையான விலை அதிகரிப்பை கட்டுமானப் பொருட்களில் மிக முக்கியமான பொருளான சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் கை விட வேண்டும். சதுர அடியின் கட்டுமானச் செலவை வெகுவாக ஏற்றக்கூடிய சிமெண்ட் & ஸ்டீல் விலை குறைந்தாலே வீட்டின் விற்பனை விலை சரியும்.


பில்டர்களும் இந்த சமயத்தில் தங்களுக்கன லாப விழுக்காட்டை தங்கள் சக்திக்கு ஏற்றாற் போல் குறைத்துக் கொண்டு வழங்க முன்வர வேண்டும். இன்னும் பல ஆலோசனைகள் இருக்கின்றன. இதெல்லாம் அடிக்கடி நானே பில்டர்ஸ் லைனில் சொல்லி இருக்கின்றேன்.

ஆனால் செயல்படுத்துவதில் தான் தயக்கம் உள்ளது" என்கிறார் ராஜசேகர்;.


போகிற போக்கில் ஊதித் தள்ள முடிகிற விஷயமாகத்தான் நமது கட்டுமானத்துறை இதுவரை இருந்திருக்கிறது. கொரானாவையும் அப்படி ஊதித் தள்ள வேண்டுமென்றால் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் ஒருமித்த குரலாக வெளிப்படுகிறது.

 

 

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087327