கட்டுமான திட்ட அனுமதிக்கு வக்கீல் சான்றிதழ் கட்டாயம்
24 டிசம்பர் 2019   11:38 AM



வீடு உள்ளிட்ட கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி பெற, அரசு வழக்கறிஞர் சான்றிதழை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனால், கட்டுமான துறையினர் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.


நகர், ஊரமைப்பு சட்டப்படி, அனைத்து வகையாக கட்டுமான திட்டங்களுக்கும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., - நகர் ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., யின் அனுமதி பெற வேண்டும்.


இந்த துறைகள் நேரடியாகவும், உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாகவும், கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குகின்றன.

 

விண்ணப்பம் அளிக்கும் போது, நில உரிமை ஆவணங்கள் உண்மையானவை என்பதற்கு, நோட்டரி சான்று பெறப்படுகிறது. சிறப்பு கட்டடங்கள், அடுக்குமாடி கட்டுமான திட்டங்களுக்கான விண்ணப்பத்தில், நில உரிமை சரி பார்ப்புக்கான, அரசு வழக்கறிஞர் சான்று அளிப்பது, 2017ல் கட்டாயமாக்கப்பட்டது.

 

ஆரம்பத்தில்,சி.எம்.டி.ஏ.வில் மட்டும், இந்த நடைமுறை அமலானது. பிப்ரவரி, 4ல் அறிவிக்கப்பட்ட பொது கட்டட விதிகளின் அடிப்படையில், விண்ணப்பத்தில் இணைக்க வேண்டிய ஆவணங்கள் பட்டியல், சமீபத்தில் வெளியிடப்பட்டது.

 

இந்த பட்டியலில், 18.3 மீட்டர் உயரத்துக்கு உட்பட்ட சாதாரண கட்டடங்களுக்கும், அதற்கு மேற்பட்ட பெரிய கட்டடங்களுக்கும் ,அரசு வழக்கறிஞர் சான்று இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. 

 

இதன்படி, திட்ட அனுமதி கோரி வரும் நிலம் தொடர்பாக 1975 முதல் தற்போது வரை நடந்த பரி மாற்றங்கள், பத்திர எண், சர்வே எண், விற்றவர், வாங்கியவர் உள்ளிட்ட விபரங்கள் பட்டியலிடப்படும்.

 

தற்போதைய விண்ணப்பதாரர் பெயரில் பத்திரம் பட்டா இருப்பதை உறுதி செய்து, அதில் கட்டடம் கட்ட அவருக்கு உரிமை உண்டு என்பமிதை, சான்றிதழாக அளிக்க வேண்டும்.

 

இது குறித்து, தொழில் முறை நகரமைப்பு வல்லுனர்கள் சங்க தலைவர் கே.எம். சதானந்த் கூறியதாவது:


விண்ணப்பத்தில் இருக்கும் ஆவணங்கள் உண்மையா என்பதை அறிய, நோட்டரி சான்று பெறப்படுகிறது.


அத்துடன், நிலத்தில் தனக்குள்ள உரிமையை விண்ணப்பதாரர், பிரமாண பத்திரமாக அளிக்கிறார். இதற்கு மேல், பத்திரம், பட்டாவில் சந்தேகம் இருந்தால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் சான்றொப்பம் பெறப்படுகிறது.

 

இத்தனை நிலைகளுக்கு அப்பால், அரசு வழக்கறிஞர்களின் சான்று கட்டாயம் என்பது வேடிக்கையாக உள்ளது.


பெரிய கட்டுமான திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள் வேண்டுமானால், இதுபோன்ற சான்றுகளை பெற்று அளிக்கலாம். 

 

சிறிய வீடு கட்டும் சாதாரண மக்களும், அரசு வழக்கறிஞரின் சான்றிதழ் பெற வேண்டும் என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது.

 

இத்தகைய சான்றுகளை சரி பார்க்க, அதிகாரிகளுக்கு வழிமுறை எதுவும் வகுக்கப்படவில்லை. எனவே, முதல்வர், துணை முதல்வர் ஆகியோர், இந்த விவகாரத்தில் மக்களின் சிரமத்தை குறைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

இவ்வாறு, அவர் கூறினார்.

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087300