சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் அடுக்குமாடி குடியிருப்பு : கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.10 கோடி அபராதம்
11 டிசம்பர் 2019   12:26 PM



சென்னையில் உள்ல தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சங்கர சுப்பிரமணியன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கோவையில் கட்டுமான நிறுவனம் ஒன்று 1,220 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்டி உள்ளது. இந்த கட்டிடம் 71 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது.

 

20 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல் கட்டப்படும் கட்டுமானப் பணிகளுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது அவசியம். ஆனால் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமலே இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. எனவே இந்த கட்டிடத்தை இடிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

 

இந்த மனு தீர்ப்பாய தலைவர் ஏ.கே.கோயல், நீதிபதி ராம கிருஷ்ணன், உறுப்பினர் சாய்பாஸ்தாஸ் குப்தா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. கட்டிடம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதால், மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக மத்திய மாநில சுற்றுச்சூழல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், அடுக்குமாடி குடியிருப்பு விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளது. மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக கட்டுமான நிறுவனத்துக்கு இடைக்காலமாக ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது.

 

மத்திய மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள், மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம், சென்னை ஐ.ஐ.டி., மத்திய சுற்றுச்சூழல் துறையின் அதிகாரிகள் அடங்கிய குழு இந்த கட்டிடத்தை நேரில் ஆய்வு செய்து கட்டுமான நிறுவனத்திடம் இருந்து மொத்தமாக எவ்வளவு இழப்பீடு பெற வேண்டும்? என்பதை 2 வாரத்திற்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.

 

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087321