தமிழகத்தில், 18 அடி அகல சாலையை ஒட்டியுள்ள மனைகளில், மூன்று மாடி குடியிருப்புகள் கட்ட வகை செய்யும், பொது கட்டட விதிகளுக்கான அரசாணை இறுதி செய்யப்பட்டுள்ளது.
ஊராட்சிகள் முதல், மாநகராட்சிகள் வரையிலான பகுதிகளில், கட்டுமான திட்ட அனுமதி வழங்குவதை முறைப்படுத்த, வரைவு பொது கட்டட விதிகள், 2018 ஜூலையில் வெளியிடப்பட்டன. இவற்றின் மீது, ஆகஸ்ட், 20 வரை, பொது மக்கள் மற்றும், வல்லுனர்களின் கருத்துகள் பெறப்பட்டன.அந்தக் கருத்துகள் அடிப்படையில், வரைவு பொது கட்டட விதிகளில் செய்ய வேண்டிய திருத்தங்களை, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் குழு இறுதி செய்தது.
அப்போது, வரைவு விதிகளில், 14 பிரிவுகள் நீக்கப்பட்டன் 47 பிரிவுகள் மாற்றி அமைக்கப்பட்டன. இதையடுத்து, திருத்தப்பட்ட பொது கட்டட விதிகளை அமல்படுத்த, சமீபத்தில் நடத்த அமைச்சரவை கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதனால், இதற்கான அரசாணை மற்றும் 'கெசட்' எனப்படும், அரசிதழ் அறிவிக்கையும் இறுதி செய்யப்பட்டுள்ளது.'முதல்வர், இ.பி.எஸ்., ஒப்புதல் கிடைத்தவுடன், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, பொது கட்டட விதிகள் அமலுக்கு வருவது உறுதியாகியுள்ளது.
பயன் என்ன?
. கட்டடங்களுக்கான, உயர்த்தப்பட்ட, எப்.எஸ்.ஐ., எனப்படும், தளபரப்பு குறியீடு, முறையாக அமலுக்கு வரும்ட கூடுதல், எப்.எஸ்.ஐ.,க்கு ஏற்ப, கட்டடங்களின் பக்கவாட்டில், காலியிடம் விடுவதற்கான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.
. அங்கீகரிக்கப்பட்ட, 'லே - அவுட்' பகுதிகளில், 18 அடி அகல சாலையை ஒட்டி அமைந்துள்ள மனைகளில், மூன்று மாடிகள் வரை குடியிருப்புகள் கட்டலாம்ட தமிழகம் முழுவதும் கட்டடங்களுக்கு, பணி நிறைவு சான்றிதழ் பெறுவது கட்டாயமாகிறது.
. கட்டுமான திட்ட அனுமதியில், தொழில்முறை வல்லுனர்களை பதிவு செய்வது அமலுக்கு வரும்.